The biography of Prophet Muhammad – Month 3

Admin August 26, 2022 No Comments

The biography of Prophet Muhammad – Month 3

Mahabba Campaign Part-61/365

அம்ர் பின் அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நபித்துவப் பிரகடனத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாமைத் தழுவிய பிரமுகர்களில் ஒருவர்.

மக்கா நகருக்கு வெளியே இருந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முதல் வெளி நாட்டவர் என்ற பெருமையும் அவர்களுக்கு உண்டு.

இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்திருக்கும் ஒரு ஹதீஸில் முதலில் இஸ்லாமைத் தழுவிய நான்கு பேர்களில் நான்காவது நபர் என்றும் காணலாம்.

ஒரே நாளில் பலர் இஸ்லாத்தை ஏற்கும்போது நேற்று வரையுள்ள எண்ணிக்கையுடன் அனைவரையும் சேர்த்து கணக்கிடலாம். அல்லது ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்ததன் அடிப்படையில் தம்மை அறிமுகப்படுத்தலாம்.

அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமைத் தழுவிய நிகழ்வு குறித்து அவர்களே சொன்னதை அபூஸலாம் அல்ஹபஷி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்கள்.

அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: சிலை வணக்கம் அர்த்தமற்றது என்ற எண்ணம் என் மனதில் பதிந்து விட்டது. அதனைச் சிலருடன் பகிர்ந்துக் கொண்டேன். ஒரு முறை சிலை வணக்கத்துக்கு எதிராகப் பேசினேன். என் பேச்சை கேட்டவர்களில் ஒருவர் கூறினார் “உங்களுடைய இந்தக் கருத்தைப் பேசும் ஒருவர் மக்கா நகரத்தில் தோன்றியிருப்பதாக கேள்விப்படுகின்றேன்.”

நான் உடனே மக்கா சென்றேன். உருவ வழிபாட்டை எதிர்த்து களமாடுபவரைத் தேடினேன். ஆம்! அவர்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இரகசியமாக அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள், இரவில் மட்டுமே அவர்களைச் சந்திக்க முடியும். இரவில் கஃபாவை தவாஃப் செய்ய வருவார்கள் ஆகிய தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

நான் கஃபாவைப் போர்த்தியிருக்கும் கிஸ்வாவுக்குப் பக்கத்தில் காத்திருந்தேன். அப்போது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறிக் கொண்டு ஒருவர் வந்தார். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பதை நான் அடையாளம் கண்டுக் கொண்டேன். அருகில் சென்று பேச ஆரம்பித்தேன். “தாங்கள் யார்?” என்று கேட்டேன்.

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”நான் அல்லாஹ்வின் தூதர்.

நான் : “அப்படி என்றால்…….”

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : “அல்லாஹ் தனது செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்க என்னை நியமித்துள்ளான்.

நான்: “என்ன செய்தியைத் தெரிவிக்க நியமிக்கப்பட்டுள்ளீர்கள்?”

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : “அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு யாரையும் இணை வைக்கக் கூடாது. குடும்ப உறவுகளைப் பேண வேண்டும்.”

நான் : “இப்போது தங்களை ஏற்றுக் கொண்டவர்கள் யார்.”

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : “சுதந்திமான ஒருவர் மற்றும் ஒரு அடிமை.”

உடனடியாக நான் அவர்களிடம் விசுவாச உடன்படிக்கை செய்துக் கொள்ள விரும்பினேன். அவர்கள் தமது திருக்கரங்களை நீட்டினார்கள். நான் சத்திய விசுவாச உடன்படிக்கை செய்து விட்டுக் கேட்டேன் : “நபி அவர்களே! நான் இங்கேயே தங்களுடன் இருக்கலாமா?”

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : வேண்டாம்! இப்போது நீங்கள் இங்கே தங்குவது கடினமாக இருக்கும். நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். நான் பொது வெளியில் தோன்றும்போது திரும்பி வாருங்கள்.” என்றார்கள்.

நான் ஊருக்குத் திரும்பிச் சென்று முஸ்லிமாக வாழ்ந்து வந்தேன். எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற செய்தி அறிந்தேன். நான் மதீனா புறப்பட்டுச் சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன், “என்னை நினைவிருக்கிறதா?” என்று அவர்களிடம் கேட்டேன்.

“ஆம்! நினைவிருக்கிறது. என்னை பார்க்க மக்காவுக்கு வந்தீர்கள்” என்றார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

“யாரஸூலல்லாஹ்! தங்களுக்குக் கிடைத்த செய்திகளை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன்.

அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுத் தந்தார்கள்.

Mahabba Campaign Part-62/365

காலித் பின் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

‘இஸ்லாமைத் தழுவியவர்களில் நான்காவது நபர்’ என்று வரலாற்றில் பலரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காலித் பின் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

காலித் பின் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலையீடு இருந்தது.

காலித் அவர்களின் தந்தையான ஸயீத், குறைஷிப் பிரமுகரான ஆஸிப் பின் உமையாவின் மகன் ஆவார். எனவே அவர் மக்காவின் மரியாதைக்குரியவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

காலித் ஒரு நாள் கனவு ஒன்று கண்டார். அவர் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்துக்குப் பக்கத்தில் நிற்கிறார். அவரது தந்தை ஸயீத் அந்த நெருப்பில் அவரைத் தள்ள முயல்கிறார். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸயீதின் இடுப்பைப் பிடித்து நெருப்பில் விழாமல் காப்பாற்றுகிறார்கள். இப்படியொரு பயங்கரமான கனவைக் கண்டு ஸயீத் சிந்தனை வயப்பட்டார்.

தாம் கண்ட கனவைத் தனது நெருங்கிய தோழர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மறுநாள் இந்நிகழ்வு நடந்தது.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நண்பர் காலித் அவர்களிடம் சொன்னார்கள் : “காலித்! அல்லாஹ் உங்களுக்கு நல்லதை நாடி இருக்கிறான் என்று எண்ணுகின்றேன். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நபித்துவத்தை அறிவித்துள்ளார்கள். அவர்களை அல்லாஹ் தனது தூதராக நியமித்துள்ளான். எனவே நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதரிடம் வாருங்கள். நபியவர்களின் வழியைப் பின்பற்றுங்கள், உங்களுடைய எல்லா அச்சங்களிலிருந்தும் நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள்!”

காலித் ரழியல்லாஹு அன்ஹு உடனடியாகச் சென்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார்கள். இஸ்லாமை ஏறு்றுக் கொண்டார்கள்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்துக்கு வெளியே இருந்து முதலில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர் என்ற பெருமைக்குரியவர் காலித் பின் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். அவர்களுடைய மனைவி உமைரா பின்த் கலஃப் அவர்களும் உடனடியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

சிறு வயதிலேயே இஸ்லாமைத் தழுவும் மகா பாக்கியம் பெற்றவர்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கமான தோழர்களில் ஒருவராக வாழும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமைத் தழுவிய நிகழ்வு குறித்து இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது ‘முஸ்னத்’ என்ற நூலில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் அவர்களே கூறியதாக கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்கள்.

“நான் எனது சிறிய பிராயத்தில் உக்பத் பின் அபீ முஅய்த் என்பாரின் ஆடுகளை மேய்த்து வந்தேன். ஒரு நாள் மக்காவிலுள்ள மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை நோக்கி இருவர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிருவரும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு ஆகியோர் என அறிந்தேன். மக்காவின் காஃபிர்களின் தொந்தரவுகள் காரணமாக அங்கிருந்து தப்பி வந்தனர் அவர்கள்.

அவர்கள் என்னிடம் குடிப்பதற்கு கொஞ்சம் பால் தர முடியுமா? எனக் கேட்டனர். ‘நான் இந்த ஆடுகளின் காவலாளி மட்டுமே, உரிமையாளர் அல்ல, எனவே தர இயலாது’ என்று அவர்களிடம் சொன்னேன்.

‘குட்டி போடாத, பால் கறக்காத ஆடுகள் ஏதும் உண்டா?’ என முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். பால் கறக்காத, மடி சுருங்கிய ஒரு ஆட்டை நான் சுட்டிக் காட்டினேன். அவர்கள் அந்த ஆட்டை நெருங்கி, சில மந்திரங்கள் சொல்லி அந்த ஆட்டின் மடியைத் தடவினார்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாத்திரத்துக்குப் பதிலாக குழியுள்ள ஒரு பாறைத் துண்டை எடுத்து நீட்டினார்கள். அந்தக் கல் பாத்திரத்தில் பால் நிரம்பியது.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பாலை அருந்தி விட்டு அபூபக்ர் அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் வாங்கிக் குடித்தார்கள். பின்னர் என்னிடம் தந்தார்கள். நானும் குடித்தேன். பிறகு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஆட்டின் மடி மீது கை வைத்து ‘சுருங்கட்டும்’ என்றார்கள். மடி சுருங்கி பழையது போல ஆனது.”

இந்த அனுபவம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது அவர்களைச் சிந்திக்க வைத்தது. அவர்கள் முஸ்லிமானார்கள். ‘அன்று மொத்தமிருந்த ஆறு முஸ்லிம்களில் நான் ஆறாவது நபர்’ என இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்மைப் பற்றி கூறுவதுண்டு.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழக்கத்துக்கு மாறாக குட்டையாக இருந்தார்கள்.. ஒரு தடவை அவர்களின் நண்பர்களில் சிலர் அவர்களின் குறுகிய கால்களைக் கிண்டல் செய்தனர். அப்போது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறுக்கிட்டு “அல்லாஹ் மீது ஆணையாக! மறுமையில் இப்னு மஸ்வூத் அவர்கள் பாதங்களின் மதிப்பு உஹத் மலையைவிடக் கனமானதாக இருக்கும்” என்றார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொண்டு வந்த அதே முறையில் திருக்குர்ஆனைக் கற்ற நீங்கள் விரும்பினால் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறி அவர்களைப் புகழ்வார்கள்.

Mahabba Campaign Part-63/365

அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

மக்காவுக்கும், மதீனாவுக்குமிடையிலுள்ள ஸஃப்ராவ் பள்ளத்தாக்கில் வாழும் ஒரு கோத்திரம் கிஃபார்.
இந்தக் கோத்திரத்தின் பிரமுகர்களில் ஒருவர் அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தமது நபித்துவம் குறித்து அறிவிப்புச் செய்ததை கேள்விப்பட்ட அபூதர் அவர்கள், தனது சகோதரர் அனீஸ் என்பவரை நபி அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வர மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: “மக்கா சென்று தகவல் சேகரித்து வந்த சகோதரரிடம் விவரங்கள் கேட்டேன்.

“நான் அந்த நபியை சந்தித்தேன். அவர்கள் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட உண்மையான தூதர்தான். அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், நற்குணத்துடன் வாழ்ந்திட வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்” என்று அவர் சொன்னார்.

“மக்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்கின்றனர்?” என்று கேட்டேன்.

“கவிஞர், மந்திரவாதி, ஜோதிடர் என்று அவர்களைக் குறித்து மக்கள் பொய் கூறுகின்றனர். ஆனால் நபி அவர்கள் கூறுபவை கவிதையோ, சூனியமோ, ஜோதிடமோ அல்ல. அவர்கள் கூறுவது அத்தனையும் உண்மை” என்றார் கவிஞரான அனீஸ்.

“நீங்கள் சொல்வது எனக்கு முழு திருப்தி தரவில்லை. எனவே நான் மக்காவுக்குச் செல்கின்றேன். அந்த நபி அவர்களை நேரடியாகச் சந்திக்கின்றேன்” என்றேன்.

அனீஸ் சொன்னார் “செல்லுங்கள்! ஆனால் மக்கா வாசிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரானவர்கள். நபி அவர்களைத் தேடி வருபவர்களை அவர்கள் தாக்கலாம்!”

நான் ஒரு தோல் பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஒரு கம்பும் எடுத்துக் கொண்டு மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றேன். மஸ்ஜிதுக்குள் நுழைந்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டு பிடிக்க முயன்றேன். யாரிடமும் விசாரிக்க முடியவில்லை. ஒருவரை அணுகி இரகசியமாக ‘ஸாபிஈ என்று சொல்லிக் கொள்ளும் அந்த நபரை நான் எப்படி சந்திப்பது?’ என்று கேட்டேன். ‘சத்திய விசுவாசி’ என்பதைக் குறிப்பிட அவர்கள் ஸாபிஈ என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.

இப்படி நான் கேட்டவுடன் ‘இதோ ஒரு ஸாபிஈ வந்துள்ளார்’ என்று அவர் கத்தினார். அங்கு கூடி இருந்தவர்கள் என்னைத் தாக்க ஆரம்பித்தனர். அந்த பள்ளத்தாக்கில் இருந்தவர்கள் ஓடி வந்து கற்களையும், எலும்புகளையும், கையில் கிடைத்தவற்றையும் எடுத்து என் மீது வீச ஆரம்பித்தனர். நான் மயங்கி விழுந்தேன். மயக்கம் தெளிந்து எழுந்தபோது செம்மண் படிந்த சிலைபோல இருந்த நான் ஜம்ஜம் கிணற்றுக்குச் சென்று சுத்தம் செய்தேன். வயிறு நிரம்ப ஜம்ஜம் நீரைக் குடித்தேன். முப்பது இரவும், பகலும் அங்கே இருந்தேன். உணவு மற்றும் பானமாக ஜம்ஜம் நீரை மட்டுமே அந்த நாட்களில் குடித்தேன். என் வயிற்று மடிப்புகள் நிமிர்ந்து உடல் வலிமை பெற்றது. எனக்கு பசியே தோன்றவில்லை.

நிலா வெளிச்சம் நிறைந்த ஓரிரவு. குறைஷிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான் கஃபாவுக்கும், அதன் திரைச் சீலைக்கும் இடையில் சென்று அமர்ந்தேன். அப்போது கஃபாவை இரண்டு பெண்களைத் தவிர வேறு எவரும் தவாஃப் செய்யவில்லை.

அப்பெண்கள் இஸாஃப் மற்றும் நாயிலா ஆகிய தெய்வங்கைளை அழைத்து பிரார்த்தனை செய்துக் கொண்டே கஃபாவைச் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் கஃபாவைச் சுற்றி நானிருக்கும் இடத்துக்கு வந்தபோது அவர்களுடைய நம்பிக்கையை கேலி செய்து, ‘அந்த தெய்வங்களில் ஒன்றை அடுத்ததுக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்கலாம்’ என்று சொன்னேன். அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கஃபாவைச் சுற்றி மீண்டும் என்னருகில் வந்தபோது அவர்களைத் திரும்பவும் நான் கேலி செய்தேன். நான் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் தமக்குள் ‘நமது ஆதாரவாளர்கள் யாரும் இங்கு இல்லையே!’ என்று கூறிக் கொண்டு வெளியே சென்றனர்.

அந்த நேரத்தில் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ர் ரழில்லாஹு அன்ஹு அவர்களும் கஃபாவுக்கு வந்தனர். அந்த பெண்கள் “கஃபாவின் திரைச் சீலைக்குப் பின்னால் ஒரு ஸாபிஈ அமர்ந்திருக்கிறார். அவர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுகிறார்’ என்று அவர்களிடம் கூறினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவுக்கு அருகில் வந்து ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்னர் இருவரும் கஃபாவை தவாஃப் செய்து விட்டு வந்து தொழுதனர்.

நான் அவர்களுக்கருகில் சென்றேன். “அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்! அல்லாஹ்வின் சாந்தி தங்கள் மீது உண்டாகட்டும்” என்று கூறினேன்.”

Mahabba Campaign Part-64/365

“ஸலாம் சொல்லி திருக்கலிமாவை உச்சரித்தேன் “அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்!” நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகம் மகிழ்ச்சியால் பிரகாசித்தது.

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற இஸ்லாமின் முகமன் வாழ்த்தை முதன் முதலாகச் சொன்னவன் நான் ஆனேன்.

‘வ அலைக்குமுஸ்ஸலாம்’ என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு பதில் சொல்லி விட்டு ‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘கிஃபார் கோத்திரத்திலிருந்து வருகின்றேன்’ என்றேன்

அப்போது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையால் சைகை செய்தார்கள். விரல்களை நெற்றியில் வைத்தார்கள். கிஃபார் கோத்திரம் என்று சொன்னதை அவர்கள் விரும்பவில்லையோ என நினைத்தேன். நான் நபி பெருமான் அவர்களின் கரத்தைப் பிடிக்க முயன்றேன். ஆனால் உடனிருந்தவர் என்னைத் தடுத்து நிறுத்தினார். அவர் என்னைவிட நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர் நன்கறிவார் அல்லவா!

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை உயர்த்தி ‘எப்போது நீங்கள் இங்கே வந்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘நான் வந்து முப்பது இரவுகளும், பகல்களும் ஆகி விட்டன.’

‘உணவு எங்கிருந்து கிடைத்தது?’

‘ஜம்ஜம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லை. ஆனால் அதைக் குடித்த பின் பசி ஏற்படவில்லை, வயிற்றின் மடிப்புகள் நிமிர்ந்தன, முக்கியமாக உடலில் தெம்பு ஏற்பட்டது.’

‘ஜம்ஜம் என்பது உணவுக்கு உணவாகவும், நோய்க்கு மருந்தாகவும் உள்ளது’ என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.”

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு கீழ்க் கண்டவாறு கூறுகிறது:
அபூதர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : “நான் மக்காவைச் சென்றடைந்தேன். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு அறிமுகமில்லை. யாரிடமும் கேட்கவும் நான் விரும்பவில்லை. நேராக ஜம்ஜம் கிணற்றுக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டு பள்ளிக்குள் வந்து படுத்தேன்.

அப்போது அந்த வழியாக வந்த அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘உங்களைப் பார்த்தால் வெளியூரைச் சேர்ந்தவர் போலத் தெரிகிறது. வாருங்கள் வீட்டுக்குப் போவோம்’ என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சென்றேன். நான் ஏதும் சொல்லவில்லை, அவர்கள் எதுவும் கேட்கவுமில்லை.

விடிந்ததும் என் தோல் பாத்திரத்தையும், மற்ற பொருட்களையும் எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்தேன். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தேடினேன். யாரும் காட்டித் தரவில்லை. அந்த நாளும் அப்படிக் கழிந்தது.

நான் பள்ளியிலேயே உறங்கக் கிடந்த நேரத்தில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவ்வழி வந்தார்கள். ‘இன்றும் தங்குவதற்கு உங்களுக்கு இடம் கிடைக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.

‘இல்லை’ என்றேன்.

‘என்னுடன் வாருங்கள்’ என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் நடந்துச் சென்றேன். அவர்கள் எதுவும் கேட்கவில்லை, நானும் ஏதும் சொல்லவில்லை.

மூன்றாம் நாளும் இவ்வாறே கழிந்தது.

அப்போது ‘எதற்காக இந்நாட்டிற்கு வந்தீர்கள்’ என்று அலீ ரழியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.

‘இரகசியமாக வைப்பதாக இருந்தால் சொல்கின்றேன். (வேறொரு அறிவிப்பின்படி எனக்கு வழிகாட்டுவதாக உறுதியளித்தால் சொல்கின்றேன்)’ என்றேன்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு சம்மதித்தார்கள்.

நான் வந்த நோக்கத்தைச் சொன்னே். உடனே அலீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : “நீங்கள் நேர்வழி பெற்றுள்ளீர்கள். நீங்கள் தேடும் நபர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். காலையில் என்னுடன் வாருங்கள். வழியில் ஏதாவது அபாய அறிகுறி தென்பட்டால் நான் தண்ணீர் ஊற்றுபவன்போல பாதையின் ஓரத்துக்கு நகர்வேன். நீங்கள் நடந்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லது எனது செருப்பை பழுது பார்ப்பவன்போல நிற்பேன். நான் நடக்க ஆரம்பித்ததும் என்னைப் பின் தொடர வேண்டும். நான் நுழையும் கதவு வழிாக நீங்களும் பள்ளிக்குள் நுழைய வேண்டும்.”

நாங்கள் நடந்து நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் சென்றோம். நான் சொன்னேன் ‘எனக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்துங்கள்.’

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாம் குறித்து எனக்கு விளக்கிச் சொன்னார்கள். உடனடியாக நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்.

“இப்போதைக்கு இதை இரகசியமாக வைத்திருங்கள். உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் மக்களுக்கு செய்திகளைத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் பகிரங்கமாக இறை அழைப்பைச் செய்யத் தொடங்கி விட்டோம் என்பதைத் அறியும்போது மீண்டும் இங்கே வாருங்கள்” என்றார்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

நான் கூறினேன் “ சத்தியத்துடன் தங்களை அனுப்பி வைத்தவன் மீது ஆணை! என் இரட்சகனான இறைவன் மீது ஆணை!!நான் என் மக்களுக்கு மத்தியில் பகிரங்கமாக சத்திய சன்மார்க்கத்தை அறிவிப்பேன்.”

Mahabba Campaign Part-65/365

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து விடை பெற்று கஃபத்துல்லாஹ்வை அடைந்தேன். அங்கே குறைஷிப் பிரமுகர்கள் குழுமி இருந்தனர். ‘அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்! – அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறு யாருமில்லை என்று நான் சாட்சி சொல்கின்றேன். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் சாட்சி சொல்கின்றேன்’ என்று உரத்த குரலில் கூறினேன்.

உடனே அங்கு கூடி இருந்த குறைஷிப் பிரமுகர்கள் ‘இந்த ஸாபிஇ-யை பிடியுங்கள்’ என்று கூக்குரலிட்டனர். அங்கிருந்தவர்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். கொலை வெறியோடு என்னைத் தாக்கினார்கள். அப்போது சுற்றி வளைக்கப்பட்ட என்னை நோக்கி அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு ஓடி வந்தார்கள். ‘இவர் கிஃபார் கோத்திரத்தைச் சார்ந்தவர் அல்லவா! அவரை விடுங்கள், நம்முடைய வணிகக் குழுக்கள் இவரது ஊரைக் கடந்தல்லவா செல்ல வேண்டும்?’ என்று கேட்கவும் அவர்கள் என்னை போக அனுமதித்தனர்.

மறுநாள் மீண்டும் கஃபாவுக்கு வந்து கலிமா ஷஹாதாவை உரக்கச் சொன்னேன். முந்தைய நாளைப் போலவே என்னை குறைஷிகள் தாக்கினார்கள். அப்பாஸ் ஓடி வந்து என்னைக் காப்பாற்றினார்.

அன்றிரவு அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை உபசரிக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் அனுமதி வழங்க, நபி அவர்களுடன் நான் அபூபக்ர் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். தாயிஃபின் உலர் திராட்சை தந்து வரவேற்கப்பட்டேன். இதுதான் நான் மக்காவில் உண்ட முதல் உணவு.

பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த என்னிடம் ‘பேரீத்தப் பழ மரங்கள் நிறைந்த ஓரிடத்தின் திசை எனக்குக் காட்டப்பட்டுள்ளது. அந்த இடம் யத்ரிப் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் செய்தியை உங்கள் மக்களுக்குத் தெரிவிப்பீர்களா? அதனால் அவர்கள் பயனடைவார்கள். அதன் மூலம் உங்களுக்கும் பலன் கிடைக்கும்’ என்று நவின்றார்கள்.

நான் ஊருக்குத் திரும்பி வந்தேன். என் சகோதரர் உனைஸ் ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்.

‘நான் முஸ்லிமாகி விட்டேன், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தூதர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளேன்’ என்று பதில் கூறினேன்.

உடனே எனது சகோதரர் ‘நீங்கள் தழுவிய மார்க்கத்தைத் தவிர எனக்கு வேறு மார்க்கம் இல்லை. நானும் இஸ்லாமை ஏற்றுக் கொள்கின்றேன்’ என்றார். அப்போது எங்களுடைய தாயார் வந்தார். ‘நீங்கள் பேசுவதைக் கேட்டேன், நீங்கள் இருவரும் தழுவிய மார்க்கத்தை நானும் தழுவுகின்றேன்’ என்று அவர் கூறினார். இவ்வாறு எனது சகோரரும், தாயாரும் முஸ்லிம்களாயினர்.

இஸ்லாமை ஏற்றுக் கொள்ள கிஃபார் கோத்திரத்தாருக்கு அழைப்பு விடுத்தேன். அவர்களின் பாதிப் பேர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். பாதிப் பேர் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிபுக்கு வரட்டும், அப்போது இஸ்லாமைத் தழுவுவோம்’ என்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிபுக்குப் புலம் பெயர்ந்து சென்ற செய்தி அறிந்ததும் அவர்கள் அனைவரும் இஸ்லாமாயினர்.

இந்நிகழ்வுகளைக் கேள்விப்பட்ட ‘அஸ்லம்’ என்ற கோத்திரத்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகி ‘எங்கள் சகோதர கோத்திரத்தினர் நம்பிக்கை கொண்டுள்ள கொள்கைகளை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம்’ என்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் மகிழ்வுற்று ‘கிஃபார் கோத்திரத்தாருக்கு அல்லாஹ் குஃப்ரான் (மன்னிப்பை) வழங்குவானாக! அஸ்லம் கோத்திரத்தாருக்கு ஸலாமத் (பாதுகாப்பை) வழங்குவானாக!’ என்று துஆச் செய்தார்கள்.
(கோத்திரத்தாரின் பெயர்களுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் பயன்படுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு துஆச் செய்தார்கள்.)

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அறிவிப்பில் கீழ்க்காணும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “ நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திப்பதற்கு முன்னர் மூன்று ஆண்டுகள் தொழுகையை நிறைவேற்றினேன்” என்று கூறினார்கள்.

அவர் கேட்டார் “யாருக்காகத் தொழுதீர்கள்?”

“அல்லாஹ்வுக்காக!”

“எந்தத் திசை நோக்கி தொழுதீர்கள்?”

அல்லாஹ் என்னை எந்தத் திசை நோக்கித் திருப்புவானோ அந்தத் திசை நோக்கித் தொழுவேன். இரவில் வெகு நேரம் தொழுவேன், பின்னர் சூரிய உதயம் வரை ஓய்வெடுப்பேன்.”

வரலாற்றுப் புத்தகங்களில் அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஐந்தாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாற்றின் முக்கியமான தருணங்களில் அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.

Mahabba Campaign Part-66/365

மக்காவில் இஸ்லாமைக் குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், தோழர்களான முஸ்லிம்களும் மறைவாக தொழுகை நடத்தியபோதும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயல்பாடுகள் தாருல் அர்கமை அதாவது அர்கம் பின் அர்கம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டை மையமாக வைத்து நடந்துக் கொதண்டிருந்தன. இந்த வீடு கஃபாவிலிருந்து நூற்று முப்பது மீட்டர் தொலைவில் ஸஃபா மலையை ஒட்டி இருந்தது.

இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் சுமார் முப்பத்தெட்டு பேர்களாயினர். அப்போது அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இஸ்லாமிய நம்பிக்கைகளை பகிரங்கமாக அறிவித்தால் என்ன?’ என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள்.

‘நாம் மிகக் குறைந்த ஆட்கள் அல்லவா இருக்கின்றோம்!’ என்றார்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆனால் பகிரங்கமாக அறிவிக்க அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். எனவே தொடர்ந்து கோரிக்கை வைத்தார்கள்.

இறுதியாக நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாருல் அர்கமிலிருந்து வெளியே வந்தார்கள். முஸ்லிம்கள் கஃபாவின் பல்வேறு பகுதிகளில் நின்றனர். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவை நெருங்கினார்கள். இஸ்லாம் பற்றிய முதல் விரிவுரை தொடங்க உள்ளது. பேச்சாளர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று தொலைவில் அமர்ந்திருந்தார்கள். அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதரின் வழியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டு அபூபக்ர் அவர்கள் உரை நிகழ்த்தத் தொடங்கினார்கள்.

மக்கா முஷ்ரிக்குகள் கோபம் கொண்டு சீறியெழுந்தனர். கையில் கிடைத்ததை எடுத்து அடித்தனர். உத்பா பின் ரபீஆ என்ற முரடன் ஆணி அடிக்கப்பட்ட செருப்பால் அவர்களின் முகத்தில் அடித்தான். மூக்கு சிதைந்து இரத்தம் ஒழுகியது. அவர்கள் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார்கள்.

அப்போது அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கோத்திரத்தார் பனூ தைம் சம்பவ இடத்துக்கு வந்தனர். அபூபக்ர் அவர்கள் இறந்து விடுவார் என்றே அனைவரும் உறுதியாக நம்பினர். மயங்கிக் கிடந்த அவர்களை குடும்பத்தினர் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். இந்தத் தாக்குதல் காரணமாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு இறந்தால் உத்பாவைக் கொலை செய்வோம் என்று பனூ தைம் கோத்திரத்தினர் அறிவித்தனர்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுய நினைவு பெறுவதற்காக தந்தையார் அபூகுஹாஃபாவும், குடும்பத்தினரும் காத்திருந்தனர். மாலையில் மெதுவாகக் கண் திறந்ததும் ‘நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்கள். ‘இன்னுமா அவர்களைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டு எல்லாரும் அபூபக்ர் அவர்களைக் கடிந்தனர்.

தாயார் உம்முல் கைரிடம் மகனுக்குக் குடிக்க அல்லது சாப்பிட ஏதாவது கொடுங்கள்’ என்று கூறப்பட, தாயார் மகனருகில் வந்தார்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாயாரிடம் ‘உம்மா! நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்கள். ‘தெரியவில்லை மகனே!’ என்று கூறியவரிடம் ‘உம்மா! உமர் அவர்களின் சகோதரி உம்மு ஜமீல் அவர்களிடம் சென்று விசாரித்து வருவீர்களா?’

தாயார் உம்முல் கைர் அவர்கள் உம்மு ஜமீலைச் சந்தித்து ‘நபி அவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்று கேட்டபோது, ‘எனக்கு நபி அவர்களையும் தெரியாது, அபூபக்ரையும் தெரியாது’ என்று சொல்லி விட்டு, ‘நீங்கள் விரும்பினால் நானும் உங்களுடன் வருகின்றேன்’ என்று கூற, இருவருமாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தனர்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டதும் ‘உங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இறை மறுப்பாளர்கள் மற்றும் முரடர்கள். இனியும் அவர்களிடமிருந்து நீங்கள் பயமுறுத்தல்களைச் சந்திப்பீர்கள்’ என்று உம்முல் ஜமீல் ரழியல்லாஹு அன்ஹா கூறினார்கள்.

‘நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்ன ஆனது?’ என்று அவர்களிடம் அபூபக்ர் அவர்கள் கேட்டார்கள். ‘நான் சொல்வதை உங்களுடைய தாயார் கேட்பார்களே! என்று உம்மு ஜமீல் சொன்னார்கள் (உம்முல் கைர் அப்போது முஸ்லிமாகவில்லை) ‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ என்றார்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நலமாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள்.”

“எங்கே இருக்கிறார்கள்?”

“தாருல் அர்கமில்”

உடனே அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்: “அல்லாஹ் மீது ஆணையாக! நான் இனி நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து விட்டுத்தான் தண்ணீர் குடிக்கவோ, உணவு உண்ணவோ செய்வேன்!” அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

ஆள் அரவம் குறைந்த பின்னர் அபூபக்ர் அவர்கள் தாயாரின் தோளில் சாய்ந்தவாறு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தேடிச் சென்றார்கள்.

அபூபக்ர் அவர்களைக் கண்டவுடன் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வந்து அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்கள். அங்கே இருந்த முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவினர்.

அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் “என் தாய் மற்றும் தந்தையைவிட எனக்கு மிகவும் விருப்பமான திருநபி அவர்களே! எனக்கு எதுவும் ஆகவில்லை. அவர்கள் எனது முகத்தை மட்டுமே காயப்படுத்தினர். இவர் என் மீது மிகுந்த பாசம் கொண்டுள்ள தாயார் உம்முல் கைர். தாங்கள் எனது தாயாரைக் காப்பாற்ற வேண்டும். தாங்கள் அகிலத்தின் அருட்கொடையாவீர்கள். எனது தாயாரை நரகிலிருந்த காப்பாற்றுங்கள்.”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்காக துஆச் செய்தார்கள். அவரை இஸ்லாமை ஏற்றுக் கொள்ள அழைத்தார்கள் உம்முல் கைர் நபி பெருமானார் அவர்களின் அழைப்பை ஏற்று முஸ்லிமானார்கள்.

Mahabba Campaign Part-67/365

அவர்கள் தமது பிரச்சாரப் பணியில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நாள்தோறும் இஸ்லாமை நோக்கி மக்கள் வந்துக் கொண்டிருந்தனர். எதிர்ப்பாளர்கள் தங்கள் எதிர்ப்புத் திட்டங்களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இறுதியாக அவர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைச் சந்தித்துப் பேச முடிவு செய்தனர்.

குறைஷித் தலைவர்கள் அபூதாலிபிடம் வந்தனர்.
“அபூதாலிப்! தாங்கள் எங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். இப்போது நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தாங்கள் நன்றிவீர்கள். உங்களுடைய சகோதரர புத்திரர் ஆரம்பித்துள்ள மார்க்கப் பிரச்சாரம் எங்களைச் சிறுமைப் படுத்துகிறது. நமது கடவுளர்களை அவர் குறை கூறுகிறார். நம் மூதாதையர்களை நிராகரிக்கிறார். நீங்களும் இந்த விஷயத்தில் கவலையாக இருப்பீர்கள் எனக் கருதுகின்றோம். ஏனெனில் தாங்கள் அந்த மதத்தில் இதுவரை இணைந்ததாக அறிவிக்கவில்லை. எனவே தங்களது மகனைக் கட்டுப்படுத்துங்கள். முடியாவிட்டால் அதை எங்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்” என்று கூறினர்.

அபூதாலிப் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிரச்சாரத்தை நிறுத்தாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

எனவே குறைஷிகள் பல்வேறு எதிர்ப்பு முறைகளைக் குறித்து ஆலோசித்தனர். மீண்டும்ஒரு முறை அபூதாலிபை சந்தித்தனர்.
“வயது, பதவி, குடும்பப் பெருமை ஆகியவற்றால் நீங்கள் எங்களிடம் மரியாதைக்குரியவராக இருக்கின்றீர்கள். தங்களுடைய சகோதர புத்திரரைக் கட்டுப்படுத்த உங்களிடம் கூறினோம். நீங்கள் அதைச் செய்யவில்லை. நமது கடவுளர்களை இழிவுபடுத்துவதையும், முன்னோர்களைப் பழிப்பதையும் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் எங்களிடம் விட்டு விடுங்கள். மேலும் இதைதொடரவிட முடியாது. இப்போது இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்” என்று சொன்னார்கள்.

அபூதாலிப் என்ன செய்வதென்று தெரியால் தவித்தார். ஊர் பிரமுகர்கள் மற்றும் மக்களின் விமர்சனங்களால் எரிச்சலடைந்தார். ஆனால் மகன் முஹம்மத் தமது நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். அதிலிருந்து யாரிடமும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்கள் என்பதைத் தெரிந்திருந்தும், நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து வரச் செய்து, “மகனே! ஊர் பிரமுகர்கள் என்னிடம் வந்து பேசினார்கள். என்னால் தாங்க முடியாத எதையும் என்னை சுமக்க வைக்காதீர்கள்” என்றார்கள்.

பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்களின் இயலாமையையும், நிர்பந்தத்தின் அழுத்தத்தையும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்ந்தார்கள். எனினும் தமது பிரச்சாரத்திலிருந்து ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை என்பதை ‘பெரிய தந்தையார் அவர்களே! எனது வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் வைப்பதாகச் சொன்னாலும் என்னுடைய இந்தப் பணியை என்னால் கைவிட முடியாது. எப்படியும் எனது லட்சியம் ஈடேறும், அல்லது இறப்பு வரை இந்தப் பாதையில் பயணிப்பேன்” என்று மிக உறுதிபடத் தெரிவித்து விட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

அபூதாலிப் அவர்கள் “என் அன்பு மகனே! தங்களுடைய வழியில் தொடர்ந்து செல்லுங்கள், உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறி விட்டு,

“வல்லாஹி லன் யஸிலூ இலைக்க………. அல்லாஹ் மீதாணை! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் உங்களைக் விட்டுக் கொடுக்க மாட்டேன்……… நான் வாழும் காலமெல்லாம்………… தயங்காமல் முன்னேறுங்கள்…………. நீங்கள் மகிழ்ச்சியாக கண்கள் குளிர்ச்சி அடைவது வரை……… என்னையும் அழைத்தீர்கள்…… தாங்களின் சிந்தனைகள் மிக்கச் சரியானவை………. தாங்கள் அல்அமீன் அல்லவா……. ஆட்சேபனையைப் பயப்படவில்லை என்றால் உரத்த குரலில் நானும் சொல்வேன் இந்த சத்தியத்தை……… என்று பாடினார்கள்.

அபூதாலிபின் இந்த நிலைபாட்டை அறிந்த குறைஷிப் பிரமுகர்கள் வேறு ஒரு திட்டத்துடன் மீண்டும் அபூதாலிப் அவர்களை அணுகினர்.

Mahabba Campaign Part-68/365

அவர்களை அவமதிக்க அபூதாலிப் அனுமதிக்க மாட்டார் என்பதை குறைஷிகள் புரிந்துக் கொண்டு உமாரத் பின் வலீத் என்பவரைக் கூட்டிக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர்.

“உமாரத் மிக அழகானவர், மிகுந்த பலசாலி. இவரைத் தங்களுடைய மகனாக ஏற்றுக் கொண்டு முஹம்மதை எங்களிடம் தாருங்கள்” என்று அபூதாலிபிடம் கேட்டனர் குறைஷிகள்.

அபூதாலிப் மிகக் காட்டமாக “இது அநியாயம் அல்லவா! உங்களுடைய மகனை நான் வளர்க்க வேண்டும், என்னுடைய மகனைக் கொலை செய்ய உங்களிடம் தர வேண்டும், அப்படித்தானே! இதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஒரு மிருகம் கூட தனக்குச் சொந்தமில்லாத குட்டியை தனது குட்டியாக ஏற்குமா”?

முத்இம் பின் அதிய்யி கேட்டார் “அபூதாலிப்! நாங்கள் உங்களிடம் நியாயமாக நடந்துக் கொள்ளவில்லையா? ஆனால் நீங்கள் சிக்கலைத் தீர்த்து வைக்க ஏன் முயற்சிக்கவில்லை?”

“இல்லை! நீங்கள் எந்த நீதியும் செய்யவில்லை, மாறாக அநீதி இழைக்க முயன்றீர்கள். எனக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டீர்கள். இனி நீங்கள் விரும்பியதைச் செய்துக் கொள்ளுங்கள்” என்று அவருக்கு அபூதாலிப் பதிலளித்தார்.

ஒரு வெளிப்படையான எதிர்ப்புச் சூழல் உருவாகியது. சண்டையின் குரல்கள் உயர்ந்தன. ஒவ்வொரு கோத்திரத்தாரும் அவர்களில் முஸ்லிமானவர்களை எதிர்த்துத் தாக்கத் தொடங்கினர்.

ஆனால் அபூதாலிப் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ப் பாதுகாத்தார். தனது குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தினர் சேர்ந்து நபி அவர்களை எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அபூலஹபைத் தவிர அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

அபூதாலிப் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடினார்.
இதஜ்தமஅத் யவ்மன் குறைஷுன்………ஒரு நாள் குறைஷிகள் ஒன்று கூடினால் அப்து மனாஃப் அல்லவா அவர்களின் மையப் புள்ளி ஆவார்……. அப்து மனாஃபின் தலைவர்கள் வந்தால் ஹாஷிம் அல்லவா அவர்களில் முன்னவரும், தலைவரும் ஆவார்…… அவர்களிலும் சிறப்பானவர் யாரென்று பார்த்தால் மிகவும் மரியாதைக்குரியவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!…………..

ஒரு நாள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவின் அருகில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களுக்கு முன்னால் அபூஜஹ்ல் பாய்ந்து வந்து அகங்காரத்தோடு அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தான். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதுவும் சொல்லாமல் நடந்துச் சென்றார்கள். சுற்றி இருந்து அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெரிய தந்தையார் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வேட்டைக்குச் சென்று கஃபாவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள். வேட்டைக்குச் சென்று திரும்பி வரும்போது கஃபாவுக்குச் சென்று தவாஃப் செய்து விட்டு வீட்டுக்குச் செல்வது ஹம்ஸா அவர்களின் வழக்கம்.

அப்போது தனக்கு முன்னால் இரண்டு பெண்கள் ‘முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூஜஹ்ல் நடந்துக் கொண்டதை ஹம்ஸா அறிந்தால் என்ன நடக்கும்?’ என்று பேசிக் கொண்டு செல்வதைக் கவனித்தார்கள்.

அவர்களை நிறுத்தி விவரம் கேட்ட ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆத்திரத்தோடு கஃபாவுக்குச் சென்றார்கள்.
பள்ளிவாசலின் ஒரு புறத்தில் அபூஜஹ்ல் அமர்ந்திருந்தான். நேராக அவனிடம் சென்று, தன்னுடைய வில்லை அவனுடைய தலைக்கு நேராக குறி வைத்துக் கொண்டு சொன்னார்கள் ‘நான் முஹம்மத் அவர்களின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டேன், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்னைத் தடுத்து நிறுத்துங்கள், பார்க்கலாம்!’

அங்கிருந்த குறைஷிகள் துள்ளி எழுந்து கேட்டனர் ‘அபூயஃலா (ஹம்ஸா) என்ன சொல்கிறீர்?’

இச்சம்பவத்தின் மற்றொரு அறிவிப்பு கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபா மலை ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கே வந்த அபூஜஹ்ல் நபி பெருமானார் அவர்களை அவமதித்தான். பலவாறு இழித்துரைத்தான். ஆனால் நபி பெருமான் அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. அப்துல்லாஹ் பின் ஜுதான் என்பவரின் பணிப்பெண் வீட்டிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்துக்குப் பின் வேட்டையிலிருந்து திரும்பி வந்த ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு வழக்கம்போல கஃபாவை தவாஃப் செய்து வி்ட்டு அங்கே இருந்த குறைஷிகளிடம் உரையாடினார். அப்போது அந்தப் பணிப்பெண் ‘அபூஉமாரா!’ சற்று முன் அபுல் ஹகம் (அபூஜஹ்ல்) உங்களுடைய சகோதர புத்திரர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என்ன செய்தான் தெரியுமா……..? என்று கேட்டார்.

Mahabba Campaign Part-69/365

அப்பெண்மணி நடந்ததை விவரித்தார். அதைக் கேட்டு ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சினத்துடன் அபுஜஹ்லை நோக்கிச் சென்றார்கள். மஸ்ஜிதின் ஒரு பக்கத்தில் அபூஜஹ்ல் தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். நேராக அவனிடம் சென்ற ஹம்ஸா அவர்கள், தனது வில்லால் அவனது தலையில் அடித்தார்கள். பின்னர் ‘நீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திட்டுகின்றாயா? நானும் இப்போது அவர்களுடைய மார்க்கத்தில் இணைந்து விட்டேன். நான் சத்திய வாசகத்தை — கலிமா உரைக்கின்றேன். உனக்கு தைரியம் இருந்தால் என்னிடம் பேச வா’ என்றார்கள்.

உடனே அபூஜஹ்லின் பனூ மக்ஸூம் குடும்பத்தினர் எழுந்தனர். அவர்களை எதிர் கொள்ள ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தயாரானார்கள். அபூஜஹ்ல் தலையிட்டு ‘ஹம்ஸா அவர்களை விட்டு விடுங்கள். நான் அவரது சகோதர புத்திரரை துன்பத்திற்குள்ளாக்கி விட்டேன்’ என்றான்.

வீடு திரும்பிய ஹம்ஸா அவர்களிடம் பலரும் “ஹம்ஸா! உண்மையிலேயே நீங்கள் அந்த ஸாபிஈ அவர்களின் மதத்தில் சேர்ந்து விட்டீர்களா? குறைஷிகளின் தலைவரான நீங்கள் முன்னோர்களின் மதத்தை நிராகரிக்கின்றீர்களா? இதைவிட இறப்பது நல்லதல்லவா?” என்று கேட்டனர். ஹம்ஸா அவர்களின் உள்ளத்தில் கருத்து மோதல் தொடங்கியது.

பின்னர் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் “அன்றிரவு போன்ற மன அழுத்தத்தை ஒருபோதும் நான் அனுபவித்ததில்லை. ஷைத்தானின் தூண்டுதலால் மிகவும் கலக்கமடைந்தேன்.”

இறுதியாக ‘அல்லாஹ்வே! நான் தேர்ந்தெடுத்த பாதை சரியானதாக இருந்தால் இந்தக் கொள்கையை என் இதயத்தில் உறுதிபடுத்துவாயாக! இல்லை என்றால் எனக்கொரு நல்வழிகாட்டு” என்று பிரார்த்தித்தார்கள்.

மறுநாள் காலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று “நான் பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன். என்ன செய்வததென்று எனக்குத் தெரியவில்லை. என் மனதுக்கு ஆறுதல் தரும் எதாவது சொல்லுங்கள். நான் கேட்பதற்கு ஆசைப்படும் நேரமிது” என்றார்கள் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆறுதலாகப் பேசினார்கள். இஸ்லாம் மார்க்கத்தின் இனிமையையும், இறை மறுப்பின் இழப்பையும் எடுத்துக் கூறினார்கள். அல்லாஹ்வின் நற்செய்தியையும். எச்சரிக்கையையும் சொன்னார்கள்.

ஹம்ஸா அவர்களின் இதயத்தில் இஸ்லாம் நுழைந்தது. அல்லாஹ் அவருக்கு ஈமானை வழங்கினான். உடனே அவர்கள் சொன்னார்கள் “தாங்கள் சத்தியவான், உண்மையான தூதர் என்று நான் சாட்சி சொல்கின்றேன். இந்த மார்க்கத்தை நாம் பரப்ப வேண்டும். நான் பழைய நம்பிக்கையில் தொடர்ந்தால் ஆகாயத்தின் மேற்கூரையைின் வாழும் உரிமை எனக்கு இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன்.”

ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நம்பிக்கை வலுவானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனான உடன்படிக்கையும் மிக்க உறுதியானது.

வலிமை மிகுந்த ஒருவர் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்ததால் எதிர்ப்பாளர்கள் தங்களுடைய சூழ்ச்சிகளை சற்று ஒதுக்கி வைத்தனர்.

ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட சூழலை விளக்கி திருக்குர்ஆனின் அல்பஃத்ஹ் அத்தியாயத்தின் இருபத்தி ஆறாவது திருவசனம் அருளப்பட்டது.

“காஃபிர்கள் மூடத்தனமான வைராக்கியத்தை தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அந்நேரம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருளினான். மேலும் பயபக்தியுடைய வாக்கியத்தின் மீது அவர்களை நிலை பெறச் செய்தான். அவர்கள் அதற்கு மிகத் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (ஸூரத்துல்ஃபத்ஹ் 26)

இஸ்லாமைத் தழுவிய ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு பாடினார்கள் “ஹமித்துல்லாஹ ஹீன ஹதா ஃபுஆதி ……….. இறைவா உன்னை நான் போற்றுகின்றேன்……… உன்னதமானதாரு மார்க்கத்ததை எனக்கு வழங்கினாய்……. சரியான பாதையைக் காட்டுவதில் உன்னதமானவன் அல்லாஹ் ……….. அடிமைகளுக்கு எப்போதும் அவன் கருணை காட்டுவான்……… இறைவனின் செய்தியைப் படிக்கும் அறிவுள்ள மனிதன் அதைத் தன் இதயத்தில் பாதுகாப்பான்…….. அஹ்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்திகள் வார்த்தைகளும், பொருளும் இணைந்த தெளிவான வசனங்கள்……… அவை அனுசரிக்கப்படுபவை…….. உறுதியற்ற வார்த்தைகள் அவற்றை மறைக்காது.”

Mahabba Campaign Part-70/365

ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு இஸ்லாமைத் தழுவியது குறைஷிகளுக்கு மிகுந்த எரிச்சலூட்டியது. சூழ்நிலைக்கேற்ப திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படுவதும் அவர்களுக்குத் தலைவேதனையாக மாறியதுஃ

எனவே நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படியும் எதிர் கொள்ள வேண்டும், தாக்குதல்களை எந்த வகையாகவும் வடிவமைக்கலாம் என்று குறைஷிகள் முடிவெடுத்தனர்.

‘நம்மவர்களில் செய்வினை, ஜோதிடம் மற்றும் கவிதைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரைத் தேர்வு செய்து முஹம்மத் அவர்களிடம் அனுப்பி பேசச் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் எவ்வாறு பதில் சொல்கிறார்கள் என்பதை வைத்து அவர்களுடைய ஞானம் எத்தகையது என்பதைத் தெரிந்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம்’ என குறைஷிகள் தீர்மானித்தனர்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசுவதற்குத் தகுதியானவர் யார்?

எல்லாரும் ஒருமித்த கருத்தில் சொன்னார்கள் ‘உத்பத் பின் ரபீஆ! அவர்தான் தகுதியான ஆள்.’

அவரை அழைத்து வரச் செய்து அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உத்பா சந்தித்துப் பேசினார். “என் சகோதர புத்திரனே! நீங்கள் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர், கண்ணியத்துக்குரியவர், ஆனால் உங்களின் நபித்துவ அறிவிப்பு இந்த மக்கள் மீது மிகப் பெரிய சுமையை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் தம் முன்னோர்களை நிராகரித்து விட்டனர். அவர்கள் அறிவீனர்களாக்கி விட்டனர். அவர்கள் தமது தெய்வங்களை மறுத்துரைக்கின்றனர். நான் கேட்கின்றேன், நீங்கள் அப்துல்லாஹ்வை விட உயர்ந்தவரா? அப்துல் முத்தலிபைவிடச் சிறந்தவரா? அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்றால் அவர்கள் யாரும் இப்படியெல்லாம் செய்யவில்லையே! அல்லது நீங்கள்தான் அவர்களைவிட உயர்ந்தவர் என்றால் சொல்லுங்கள்! இவ்வளவு பழிக்கப்பட்ட எவரும் எங்குமில்லை. தெய்வங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள், ஒற்றுமையை அழிக்கிறார்கள், அரபிகளுக்கு மத்தியில் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள். கடைசியாக எல்லாரும் ‘குறைஷிகளில் ஒரு மந்திரவாதி வாதி வந்திருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் விபரீதமாகும். ஆயுதம் தாங்கி சண்டையிடும் நிலை உருவாகும். நான் சில விஷயங்களைச் சொல்கின்றேன். அவற்றில் உங்களுக்கு எது வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்!”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “என்ன தருவீர்கள்? சொல்லுங்கள்!”

உத்பா சொன்னார்: “நீங்கள் பொருளாதாரத்தை விரும்பினால் முடிந்த அளவு வசூல் செய்து உங்களைப் பணக்காரர் ஆக்குவோம்.
அல்லது தலைமைத்துவம்தான் விருப்பம் என்றால் உங்களைத் தலைவராக்கி, உங்களைப் பின் தொடர்கின்றோம். அல்லது அரச பதவி வேண்டுமென்றால் உங்களை மன்னராக அங்கீகரிக்கின்றோம். அல்லது ஏதாவது அபாயத்தில் சிக்கி இருந்தால் எவ்வளவு செலவானாலும் மருத்துவம் செய்யலாம். எந்த மருத்துவரை வேண்டுமானாலும் கொண்டு வரலாம்.”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தையும் கவனமாகக் கேட்டு விட்டு, “அபூவலீதே! சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடித்து விட்டீர்களா? இனி நான் சொல்வதைக் கேட்பீர்களா?” என்று கேட்டார்கள்.

உத்பா : சொல்லுங்கள், கேட்கின்றேன்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பித்தார்கள் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறி திருக்குர்ஆனின் நாற்பத்தி ஒன்றாம் அத்தியாயத்தின் (ஸூரத்துல் ஹாமீம்) ஆரம்ப வசனங்களை ஓதினார்கள். “ஹாமீம். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடமிருந்து இறக்கியருளப்பட்டது. அரபு மொழியில் அமைந்த இக்குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன. நற்செய்தி கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கிறது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர், அவர்கள் செவியேற்பதுமில்லை…… இவ்வாறு ஓதிக் கொண்டே வந்து பதிமூன்றாவது வசனம் வரை ஓதினார்கள். “ஆகவே அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் ஆது, தமூது கூட்டத்தினருக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தை நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன் என்று நபியே! கூறுவீராக!”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், இந்த பதிமூன்றாவது வசனத்தைக் கேட்டவுடன் நபி அவர்களின் வாயைப் பொத்த முயற்சித்தார். “போதும்! இனி ஓத வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜதா செய்யும் வசனமான 38வது வசனம் வரை ஓதி விட்டு ஸுஜூதுச் செய்தார்கள்.

Mahabba Campaign Part-71/365

குர்ஆன் ஓதி முடிந்ததும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்பாவிடம் சொன்னார்கள் “நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்துக் கொள்ளலாம். வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?”

உத்பா எழுந்தார். அவர் தன்னை அனுப்பி வைத்த குறைஷிகளிடம் திரும்பிச் செல்லவில்லை.

உத்பாவைக் காணததால் அபூஜஹ்ல் சொன்னான் ”உத்பா முஹம்மத் அவர்களுடைய வலையில் வீழ்ந்து விட்டார் என்று தோன்றுகிறது. நல்ல உணவு கொடுத்து உபசரித்திருக்க வேண்டும். அதில் உத்பா மயங்கி விட்டார். அப்படி எதுவும் நிகழவில்லையென்றால் உத்பா திரும்பி வந்திருப்பார். எனவே நாம் சென்று அவரைப் பார்ப்போம்.”

அனைவரும் ஒன்றாக உத்பாவைத் தேடிச் சென்றனர். உத்பாவை சந்தித்து அபூஜஹ்ல் கூறினான் “நீங்கள் அந்த நபி அவர்களின் வலையில் விழுந்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது. அவருடைய விருந்தோம்பல் உம்மை ஆச்சரியப்படுத்தி விட்டதோ! உங்களுக்கு தேவை என்ன என்பதை எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் செய்து தருகின்றோம்.”

கோபமடைந்த உத்பா சபதம் செய்து சொன்னார். ‘நான் முஹம்மத் அவர்களுடன் இனி பேசச் செல்ல மாட்டேன். உங்களில் நான்தான் மிகப் பெரிய பணக்காரன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் முஹம்மத் அவர்களைச் சந்தித்தேன் என்று கூறி பின்னர் நடந்ததை விளக்கினார்.

‘நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?’ என்ற அவர்கள் உத்பாவிடம் கேட்டனர்.

“அங்கே ஓதப்பட்ட வார்த்தைகள் மிகத் தெளிவாக இருந்தன. ஆனால் அந்த கருத்து எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் ஆது, தமூது கோத்திரங்களுக்கு இறங்கியது போன்ற கடுமையான தண்டனைகள் இறங்கலாம் என்று ஓதியபோது நான் முஹம்மத் அவர்களின் வாயைப் பொத்தினேன். ஏனென்றால் முஹம்மத் அவர்கள் இதுவரைச் சொன்னவைகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உத்பா சொன்னதைக் கேட்டு குறைஷிகள் கோபமடைந்தனர். ‘இது என்ன கொடுமை! அரபியில் சொன்னது அரபியரான உங்களுக்குப் புரியவில்லையா?’ என்று கேட்டனர்.

உத்பா தொடந்து சொன்னார் “நான் அந்த வார்த்தைகளைக் கேட்டேன். அது கவிதையோ ஜோதிடமோ, சூனியமோ அல்ல. குறைஷிகளே! அவரை அவர் பாட்டுக்கு விட்டு விடுங்கள். அந்த நபி அவர்களின் வார்த்தைகளில் பல செய்திகள் உள்ளன. அவர் சொன்னபடி நடந்தால் அரபியர்கள் மேன்மையடைவர். வெற்றி பெற்றால் அரபியர்களின் வெற்றியும், அதிகாரமும் உங்களுடையதாகவும் இருக்கும்.

மற்ற விஷயங்களை விடுங்கள், இந்த விஷயத்தில் என்னைப் புரிந்துக் கொள்ளுங்கள். படைத்தவன் மீது சத்தியமாக! நான் அது போன்ற வார்த்தைகளை இதுவரைக் கேட்டதே இல்லை. பதில் சொல்ல என்னிடம் எதுவும் இருக்கவில்லை.

இதைக் கேட்டு குறைஷிகள் கூறினர். “அபூவலீதே! உங்களை அந்த நபரின் சூனியம் பாதித்துள்ளது.”

இவ்வளவு நடந்த பின்னரும் அவர்கள் ஆய்வு செய்து பார்க்கத் துணியவில்லை. வெறுப்பு மற்றும் பொறாமை வழியில் சிந்தித்தனர். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி ஒழிப்பது என்பது பற்றி ஆலோசித்தனர்.

ஒரு நாள் அந்தி சாயும் நேரத்தில் குறைஷிகள் கஃபாவின் முற்றத்தில் திரண்டனர். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து விவாதித்து ஒரு புதிய முடிவெடுத்தனர்.

‘அளனுப்பி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரவழைத்து பேசலாம், வாதாடலாம் , கேள்விக் கணைகள் தொடுக்கலாம்’ என்று முடிவெடுத்து ஒருவரை அனுப்பினர்.

அழைப்பு கிடைத்ததும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். பேசுவதற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அழைத்தவுடன் வந்தார்கள். விஷயங்களை புரிய வைக்க முடியும் என்று நபி அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்ததும் பேச்சு தொடங்கியது.

“முஹம்மத் அவர்களே! உங்களிடம் பேசுவதற்காக ஆளனுப்பி உங்களை வரவழைத்தோம். நீங்கள் இந்த நாட்டின் மீது சுமத்தியுள்ள பாரத்தைப் போன்று வேறு யாரும் சுமத்தவில்லை. இந்த நாட்டின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர். முன்னோர்கள் நிராகரிக்கப்பட்டனர். அவர்களின் நம்பிக்கை கேலிக்குரியதாக்கப்பட்டது, ஆட்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்தனர்,” இப்படிச் சொல்லி விட்டு உத்பா சொன்ன சலுகைகளை மீண்டும் எடுத்துக் கூறினர்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தையும் கேட்டார்கள். பிறகு……..

Mahabba Campaign Part-72/365

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசத் தொடங்கினார்கள் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்களுடைய செல்வம், பதவி, அதிகாரம் போன்றவற்றின் மீது மோகம் கொண்டு இந்த இலட்சியத்துடன் நான் வரவில்லை. அல்லாஹ் என்னைத் தன் தூதராக நியமித்துள்ளான். அவன் எனக்கு ஒரு வேதத்தை அருளினான். உங்களுக்கு நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் அறிவிப்பதற்காக என்னை அனுப்பி வைத்தான். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட செய்திகளை உங்களுக்கத் தெரிவித்தேன். உங்களுக்கு நான் அறிவுரை கூறுகின்றேன். அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இரு உலகிலும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவீர்கள். என்னை நீங்கள் புறக்கணித்தால் முடிவை அல்லாஹ்விடம் விட்டு விடுகின்றேன். பொறுமையுடன் விஷயங்களை நான் எதிர்கொள்வேன்”.

அப்போது அவர்களின் தன்மை மாறியது. அவர்களின் பதில் வேறு வகையாக அமைந்தது. “நாங்கள் மிகவும் நெருக்கடியில் இருக்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ எப்படிப் பார்த்தாலும் நாங்கள் இக்கட்டான நிலையில் இருக்கின்றோம்.

எனவே ஈராக்கியர்களுக்கும், ஷாம் வாசிகளுக்கும் கொடுத்தது போல எங்களுக்கும் ஆறுகளைத் தர இறைவனிடம் சொல்லுங்கள். இறந்த முன்னோரை உயிர்ப்பித்துக் கொண்டு வாருங்கள். மீண்டும் கிலாபின் மகன் குஸை அவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புங்கள். அவர் ஒரு நீதியுள்ள வயோதிகராக இருந்தார். நாங்கள் சொன்னதைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்றுக்கொள்வோம்”.

அதற்கு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் சொன்னவை போன்றவற்றைச் செய்ய நான் நியமிக்கப்படவில்லை. நான் எதற்காக நியமிக்கப்பட்டேனோ அதைச் செய்தேன். என்னிடம் தரப்பட்ட செய்தியை உங்களுக்கு எடுத்துரைத்தேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் இரு உலகங்களிலும் பாக்கியசாலிகள். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் விரும்பியதை முடிவெடுக்கலாம், அவற்றை நான் பொறுமையாகச் சகித்துக் கொள்வேன்” என்று பதிலுரைத்தார்கள்.

மீண்டும் அவர்கள் “இவற்றில் எதையும் செய்திட உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் உண்மையாளர் என்று கூற ஒரு வானவரை அனுப்பி வைக்க இறைவனிடம் சொல்லுங்கள். உங்களுக்கொரு மாளிகையும், தோட்டமும், தங்கம், வெள்ளி நாணயங்களின் புதையலும் தர அல்லாஹ்விடம் கூறுங்கள். வாழ்வாதாரத்தைத் தேடி நீங்கள் எங்களைப் போலவே கடைத் தெருக்களுக்கு நடந்துச் செல்கிறீர்கள். அதற்குப் பகரமாக எல்லாஹ்வற்றையும் இறைவனே நேரிடையாகத் தரக் கேளுங்கள். அப்போது உங்களுடைய மகத்துவத்தை நாங்கள் புரிந்துக் கொள்வோம்” என்று கூறினர்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் கூறுவது போன்று செய்ய நான் எண்ணவில்லை. அதற்காக அனுப்பப்பட்டவருமல்ல நான்! என்னுடைய இலட்சியம் எதுவோ அதை உங்களிடம் தெளிவாகக் கூறி விட்டேன். அதை ஒப்புக் கொண்டால் ஈருலகிலும் நீங்கள் பாக்கியசாலிகள். ஏற்காவிட்டால் நமக்கிடையில் அல்லாஹ் எதை விதித்திருக்கின்றானோ அதை பொறுமையோடு ஏற்றுக் கொள்வோம்!”

அவர்கள் மீண்டும் தொடர்ந்தனர். “அல்லாஹ் நாடினால் எதுவும் நிகழும் என்று சொன்னீர்கள் அல்லவா! அப்படியானால் வானத்திலிருந்து ஒரு துண்டை கீழே விழச் செய்யுங்கள். அப்போது உங்களை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். இல்லையெனில் உங்களை நாங்கள் ஏறு்றுக் கொள்ள மாட்டோம்.”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அதுவெல்லாம் அல்லாஹ்வின் புறத்திலுள்ளவை. அவன் உங்களுக்கு எதைச் செய்ய நாடுகின்றானோ அதைச் செய்வான்.”

“முஹம்மத் அவர்களே! நாம் இங்கே கூடியது, நாங்கள் கேட்டது, சொன்னது எதுவுமே உங்கள் அல்லாஹ்வுக்குத் தெரியாதா?” யமாமாவைச் சார்ந்த ஏதோ ஒரு ‘ரஹ்மான்’ தான் உங்களுக்கு இதையெல்லாம் சொல்லித் தருகின்றார் என்று கருதுகின்றோம். எனவே ஒருபோதும் தங்களை ஏற்றுக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே மன்னித்துக் கொள்ளுங்கள், இறை மீதாணையாக! நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். ஒன்று நீங்கள் அழிவீர்கள்; அல்லது நாங்கள் அழிவோம்!”

அப்போது சிலர் குறுக்கிட்டு கூறினர். “அல்லாஹ்வின் மகள்களான மலக்குகளை வணங்குபவர்கள் நாங்கள், எனவே அல்லாஹ்வையும், வானவர்களையும் ஒன்றாக கொண்டு வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து எழுந்தார்கள். கூடவே அபூஉமைய்யாவின் மகன் அப்துல்லாஹ்வும் எழுந்து நபி அவர்களுடன் நடந்துச் சென்றார்.

Mahabba Campaign Part-73/365

அப்துல்லாஹ் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தையின் மகனும் ஆவார். அவர் கேட்டார், “முஹம்மத் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நமது மக்கள் பல வாக்குறுதிகளை தந்தனர். அவற்றில் எதனையும் தாங்கள் ஏற்கவில்லை. பின்னர், அவர்கள் அவர்களுக்காகச் சிலவற்றைக் கேட்டனர்ர். அவற்றையும் தாங்கள் நிறைவேற்றவில்லை. பின்னர், சில சொத்து, சுகங்களை எடுத்துக்காட்டி தங்களின் தகுதியை நிரூபிக்கக் கூறினர். அதையும் தாங்கள் அங்கீகரிக்கவில்லை. சில தண்டனைகளை எடுத்துக் காட்டச் சொன்னார்கள். அதையும் தாங்கள் செய்யவில்லை.

இப்போது நான் ஒன்றைச் சொல்கின்றேன், அதைச் செய்து காட்டுங்கள். வானத்திற்கு ஒரு ஏணியை அமைத்து, அதன் வழியாக மேலே ஏறுங்கள். பிறகு நான்கு மலக்குகள் பின்தொடர ஒரு வேத நூலுடன் வாருங்கள். இவற்றை நான் என் கண்களால் பார்க்கும்படி செய்தால் உங்களை நம்புகின்றேன். இல்லையேல் நான் நம்பமாட்டேன்” என்று கூறி விட்டு திரும்பி நடந்தார்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இவர்களை எப்படி நேர் வழியில் செலுத்துவது’ என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றார்கள்.

அபூஜஹ்ல் குறைஷிகளிடம் கூறினான் “முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாம் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் ஏற்றுக் கொள்ளாமல், நமது முன்னோர்களின் மதத்தை நிராகரித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். இறை மீதாணையாக! நான் ஒரு விஷயத்தை முடிவு செய்துள்ளேன். என்னால் சுமக்கக்கூடியதில் மிகவும் கனமான ஒரு கல்லை நான் எடுத்து வைப்பேன். நாளை முஹம்மத் கஃபாவின் முற்றத்தில் தொழுவதற்கு வருவார்கள். ஸுஜூதுச் செய்யும்போது, ​​அந்தக் கல்லைச் சுமந்து சென்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலையில் இடுவேன். அப்து மனாஃபின் மக்கள் என்னை என்ன செய்தாலும் பரவாயில்லை.”

“உன் விருப்பம் போல் செய்” என்றனர் அங்கிருந்தவர்கள்.

மறுநாள் காலை. அபூஜஹ்ல் சொன்னபடி ஒரு கல்லை கொண்டு வந்தான். வழக்கம் போல் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபவுக்கு வந்தார்கள். ஷாம் நாட்டுத் திசை நோக்கி திரும்பி, ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் மத்தியில் கஃபாவை நோக்கி நின்றார்கள். அதாவது கஃபாவின் வடக்குப் பக்கம் திரும்பி, தென் பகுதியில் நின்று தொழ ஆரம்பித்தார்கள்.

குரைஷிப் பிரமுகர்கள் காலையிலேயே தங்களுடைய இடத்தில் கூடியிருந்தனர். நடக்கப் போவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள். அபூஜஹ்ல் கல்லைச் சுமந்துக் கொண்டு சென்றான். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் வந்ததும் கல் கையில் ஒட்டிக் கொண்டது போல பயந்துபோய் பின்வாங்கினான். அவன் முகம் வெளிறியது. கல்லை வீசி எறிந்தான்.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷிப் பிரமுகர்கள் ஓடி வந்து அவனிடம் கேட்டனர் “அபுல் ஹகம்! என்ன நடந்தது?”

அவன் கூறினான்: “நான் சொன்னபடியே செய்யச் சென்றேன். அப்போது ஒரு பிரமாண்டமான ஒட்டகம் முஹம்மத் அவர்களுக்கு அருகே வாயைப் பிளந்துக் கொண்டு நின்றது. அவ்வளவு பயங்கரமான ஒட்டகத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அது என்னை விழுங்கத் தயாராகிக் கொண்டிருந்தது”.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அபூஜஹ்ல் என் அருகில் வந்திருந்தால், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனைப் பிடித்திருப்பார்கள்.

விரைவிலேயே திருக்குர்ஆன் குறைஷிகள் எழுப்பிய ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர் கொண்டு பதில் கொடுத்தது.

”இறந்தவர்கள் திரும்பி வந்து சொல்லட்டும்” என்று ஒருமுறை குறைஷிகள் சவால் விட்டார்கள்.

இது தொடர்பாக அல்குர்ஆன் பதிலளித்தது; “நிச்சயமாக ஒரு குர்ஆனைக் கொண்டு வந்து, மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைப் பிளந்தாலும், அல்லது இறந்தவர்கள் பேசும்படி செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்) எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்கு உரியன. எனவே அல்லாஹ் நாடினால் அனைவரும் முஃமின்களாகி விடுவர் என்பதை ஈமான் கொண்வர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் (தீய) செயல்கள் காரணமாக ஏதாவது கேடு வந்தடைந்துக் கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் (பேரிடர்) சம்பவித்துக் கொண்டே இருந்து (நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியில் மாறுதல் செய்ய மாட்டான்”

இது அல்ரஃத் அத்தியாயத்தின் முப்பத்தி ஒன்றாவது வசனத்தின் கருத்தாகும்..

Mahabba Campaign Part-74/365

பின்னர் குறைஷிகள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வாழ்க்கையை கேலி செய்து விமர்சிக்கத் தொடங்கினர். இந்த விஷயத்திலும் திருக்குர்ஆன் தலையிட்டது.

‘அல்-ஃபுர்கான்’ அத்தியாயத்தின் ஏழு முதல் பத்து வரையிலான வசனங்களின் பொருள் பின்வருமாறு. “இந்தத் தூதருக்கு என்ன? இவர் (நம்மைப் போலவே) உணவு உண்கிறார், கடை வீதிகளில் நடந்து செல்கிறார், இவருடன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?

அல்லது அவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது உண்பதற்குரிய தோட்டம் அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) மேலும் அநியாயக்காரர்கள் (முஃமின்களை நோக்கி) சூனியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை அன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகின்றனர்.

(நபி அவர்களே!) உங்களுக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துரைக்கின்றனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் வழி கெட்டுப் போய் விட்டனர். அவர்கள் (நேரான) மார்க்கத்தை இவர்களால் அடைய முடியாது.

(நபி அவர்களே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) சிறந்த (சுவனத்) தோட்டங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன். அவற்றின் கீழ் நீரருவிகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். மேலும் (அங்கு) உங்களுக்கு அரண்மனைகளை உண்டாக்குவான்.”

இதன் தொடராக சூரத்துல் ஃபுர்கானின் இருபதாம் வசனத்தையும் அல்லாஹ் அருள் செய்தான். “(நபி அவர்களே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்கள் எல்லாரும் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் இருந்தனர்.”

குறைஷிகள் எழுப்பிய ஒவ்வொரு விஷயத்தையும் பட்டியலிட்டு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதிர்வினை என்ன என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.

குறைஷித் தலைவர்கள் வரவழைத்துப் பேசியதைக் கண்டு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலைப்பட்டு முடங்கி விடுவார்கள் என அவர்கள் நினைத்தனர். ஆனால் ஒவ்வொன்றுக்கும் சரியான பதில் சொல்லப்படுவதை அவர்கள் கண்டனர்.

‘சூரத்துல் இஸ்ரா’ வின் தொண்ணூறு முதல் தொடங்கும் வசனங்களின் பொருளைப் படித்துப் பாருங்கள் “மேலும் அவர்கள் கூறினார்கள். பூமியிலிருந்து ஓர நீரூற்று எங்களுக்காகப் பீறிட்டு வரும்படிச் செய்யும் வரை உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.

அல்லது பேரீச்சம்பழ மரங்களும், திராட்சைக் கொடிகளும் உள்ளதொரு தோட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். அதன் வழியாக ஆறுகள் பாய்ந்தோடச் செய்ய வேண்டும்,

அல்லது நீங்கள் எண்ணுவதுபோல வானம் துண்டு துண்டாக எம் மீது விழச் செய்யும் வரை, அல்லது அல்லாஹ்வையும், மலக்குகளையும் நம் (கண்) முன்னால் கொண்டு வருகின்றவரை,

அல்லது ஒரு தங்க மாளிகை உங்களுக்கு ஆகும்வரை, அல்லது வானத்தின்தீது நீங்கள் ஏறுவது வரை (நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம். அங்கிருந்து) நாங்கள் ஓதக்கூடிய ஒரு வேதத்தை எங்களுக்குக் கொண்டு வந்து தரும் வரை நீங்கள் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்.”

இத்தகைய விவாதங்களுக்குப் பிறகு, நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது கல்லெறிய முயன்ற அபூஜஹ்லைக் குறிப்பிட்டும் திருக்குர்ஆன் ‘அல்அலக்’ அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் அருளப்பட்டது.

இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது முஸ்னத்தில் கீழ்கண்ட அறிவிப்பை பதிவு செய்துள்ளார்கள்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். “மக்கா வாசிகள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸஃபா மலையை பொன்னாக மாற்றவும், மக்காவின் மலைகளை விவசாய நிலமாக மாற்றவும் கேட்டார்கள்.

அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகி, ‘அல்லாஹ் தங்களுக்கு ஸலாம் கூறுகின்றான். தாங்கள் விரும்பினால் ஸஃபா மலையைத் தங்கமாக மாற்றித் தரலாம், ஆனால் அதன் பின்னரும் அவர்கள் உண்மையை ஏற்க மறுத்தால், இதுவரை எந்த மக்களையும் தண்டிக்காத விதத்தில் நாம் இவர்களைத் தண்டிப்போம். அல்லது, தாங்கள் விரும்பினால், அவர்களுக்கு கருணை மற்றும் மன்னிப்பின் வாயிலைத் திறப்போம்’ என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றார்கள். அப்போது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘யா அல்லாஹ், கருணையின் வாயிலைத் திறந்து தருவாயாக!”.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் மக்களின் கருணையை நோக்கமாகக் கொண்டு முடிவுகளை எடுப்பார்கள். மக்கள் கோரிக்கை வைக்கும் அற்புதங்களைச் செய்வதற்கு நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நியமிக்கப்படவில்லை.

சரியான, நேரான நம்பிக்கையின்பால் மக்களை அழைக்கவும். முன்மாதிரியான வாழ்க்கை வாழவும், அனைவரையும் சுவனப் பாதையில் அழைக்கவும்தான் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அவற்றை நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகச் சரியாக நிறைவேற்றினார்கள். நபித்துவத்துக்குத் தேவையான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். நித்திய சான்றாக நிலைத்திருக்கும் அத்தாட்சியாக அல்குர்ஆன் அருளப்பட்டது.

எந்த வகையிலும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தோற்கடிக்கவே முடியாது என்பது நாளுக்கு நாள் அவர்களுக்கு உறுதியாயிற்று.

அதனால் அவர்கள் சூழ்ச்சிகளுக்கான புதிய வழிகளைத் தேடினர்.

Mahabba Campaign Part-75/365

நழ்ர் பின் அல்ஹாரிஸ். குரைஷிகள் மத்தியில் மிகவும் கொடூர மனம் படைத்த முரடன். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல வழிகளில் சிரமத்தைத் தந்தவர்களில் முக்கியமான ஒருவன்.

ஒரு தடவை நழ்ர் குறைஷிகளிடம் சொன்னான் “குறைஷிகளே! உங்களுக்கு ஒரு பெரிய நெருக்கடி ஒன்று வந்து விட்டது. அதிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. முஹம்மத் அவர்கள் உங்களுக்கு மத்தியில் நல்ல பிள்ளையாக வளர்ந்தார்கள். அனைவருக்கும் திருப்தியான, விசுவாசமான, நேர்மையான நபராக மாறினார்கள். நடுத்தர வயதில் ஒரு புதிய கதையுடன் வந்தார்கள்.

அதனைச் சூனியம் என்று சொன்னீர்கள். ஆனால் அது சூனியம் அல்ல. அதற்கான எந்த அறிகுறியும் அவர்களது செயல்களில் இல்லை. சூனியம் செய்பவர்களின் ஊதலும், முடிச்சும் நமக்குத் தெரியாதா? பிறகு ஜோதிடம் என்றீர்கள். அது ஜோதிடமும் அல்ல. ஜோதிடர்களின் பாவனை பற்றி நமக்குத் தெரியாதா? பிறகு அது கவிதை என்றீர்கள். இறை மீதாணை! அது கவிதையும் அல்ல. நம்மில் பலர் கவிதைகளை யாத்துள்ளனர். கவிதைகளின் நடையும், அலங்காரமும் நமக்கு எத்துணை பரிச்சயமானவை.

பின்னர் பைத்தியம் என்றீர்கள். அல்லாஹ் மீதாணை! அது பைத்தியமும் அல்ல!. எத்தனையோ பைத்தியங்களை பார்த்திருக்கிறோம். பைத்தியக்காரர்களின் சித்தப்பிரமை, நடத்தை, தவறான தன்மை எதுவும் இங்கு இல்லை. எனவே இது ஒரு பெரிய பிரச்சனைதான். எனவே அதற்கான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.”
(நழ்ர் பிற்காலத்தில் பத்ர் போரின்போது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்கொண்டு கொல்லப்பட்டான்.)

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னோர்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் சபைகளில் நழ்ர் வந்தமர்வான். அரசர்களின் கதைகளை கூறுவான். தொடர்ந்து நான் சொல்வது போன்ற கதைகளைத்தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் என்று வாதிடுவான்.

நழ்ர் ‘ஹியரா’ என்ற நாட்டுக்குச் சென்றிருந்தான். அங்கு வைத்து பாரசீக மன்னர்களின் வரலாறுகள் மற்றும் கதைகளை கேட்டுத் தெரிந்து வைத்திருந்தான். இவனது இந்தச் செயல் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அல்-கலம் என்ற அத்தியாயத்தின் மூலம் திருக்குர்ஆன் அவனது நடவடிக்கைகளுக்கு பதிலடி தந்தது.

நாழ்ரின் விளக்கங்களைக் கேட்ட குறைஷிகள் அவனையும், உக்பத் பின் அபீமுஅய்தையும் மதீனாவுக்கு அனுப்பினர். அங்குள்ள வேத பண்டிதர்களைச் சந்தித்து, அவர்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மை நிலையைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதுதான் பயணத்தின் நோக்கம்.

இருவரும் மதீனாவை அடைந்தனர். யூத பண்டிதர்களை சந்தித்துப் பேசினர். அவர்கள் சொன்ன தகவல்களைக் கவனமாகக் கேட்ட பின்னர் யூத பண்டிதர்கள் கூறினர்: “நாங்கள் கூறும் மூன்று விஷயங்களை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள். பதில் சரியாக இருந்தால், அந்த நபர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார். இல்லையேல் அவர் ஒரு போலியாக இருப்பார்.

1. ஆரம்ப காலத்தில் பயணம் செய்த ஆச்சரியம் நிறைந்த இளைஞர்கள் யார்?

2. உலகம் முழுவதும் பயணம் செய்து உதய-அஸ்தமனத்தைக் கண்டவர் யார்? அவருடைய கதைகள் என்ன?

3. ஆன்மாவைப் பற்றிய கருத்தென்ன?

மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னால், நீங்கள் சொல்லும் நபர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி. சொல்லவில்லை என்றால் அவர் ஒரு போலி.”

இருவரும் மக்கா திரும்பினர். குரைஷிகளிடம் விவரங்களைக் கூறினர். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து மேற்சொன்ன கேள்விகளைக் கேட்டனர்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ககள் நாளை சொல்கிறேன் என்றார்கள். ஆனால் ‘இன்ஷா அல்லாஹ்’ அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொர்வது விடுபட்டு விட்டது. பதினைந்து நாட்கள் கழிந்தன.

அப்போது காஃபிர்கள் கூறினர் “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்ன ஆயிற்று? நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகக் கூறி நாட்கள் பல ஆகிவிட்டதே!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிப்பட்ட முறையில் கவலைப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து ஒரு செய்தியை கொண்டு வந்தார்கள். ‘நாளைக்குச் செய்யலாம் என்று ஒரு விஷயத்தைக் கூறும்போது, ​​’இன்ஷா அல்லாஹ்’ என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைவு படுத்தினார்கள்.

பின்னர் ​எழுப்பப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் விரிவான பதில் அளித்து திருக்குர்ஆனின் பதினெட்டாவது அத்தியாயமான ‘அல்-கஹ்ஃப்’ அருளப்பட்டது.

Mahabba Campaign Part-76/365

முதல் கேள்விக்கான பதில் குகைவாசிகளான ‘அஷ்ஹாபுல் கஹ்ஃப்’.

இரண்டாவது கேள்விக்கான பதில் ‘துல்கர்னைன்’ பற்றிய விளக்கம்.

மூன்றாவது கேள்வியான ஆன்மாவைப் பற்றி நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தனர் குறைஷிகள். அல்குர்ஆன் அதன் எதார்த்தத்தைக் குறித்து விரிவாக பதிலளித்தது.

இந்த பதில்கள், விவாதங்களை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதற்கான தெளிவான காட்சியுமாகும். புதிய காலத்தின் இஸ்லாமிய எதிரிகளைக் குறித்து வரலாறு தீர்ப்பளிக்கட்டும். வேறு எந்த சித்தாந்தம் இவ்வளவு தெளிவான கருத்தியல் விவாதங்களை எதிர்கொண்டது? நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரசங்கத்தின் ஆரம்ப நாட்கள் வெளிப்படையான விவாதங்களாக இருந்தன.

கொள்கைகள் தோல்வியடையும்போது ​​​​வன்முறையை அவிழ்த்து விடுதல் என்பது அன்று முதல் வழக்கத்தில் உள்ள ஒன்று! மக்கா காஃபிர்களும் அதே வழியைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் அக்கிரமங்களும், வன்முறைகளும் எல்லை மீறின. கஃபாவின் முற்றத்தில் தொழுகை நடத்தும் சத்திய விசுவாசிகளை பல்வேறு வழிகளில் தாக்கத் தொடங்கினர். திருக்குர்ஆன் வாசிப்பவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டனர்.

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் குர்ஆன் வசனங்கள் ஓதுவதைக் கேட்டு அன்றைய சத்திய விசுவாசிகள் பலரும் குர்ஆனைக் கற்றனர். இந்த வழிமுறை எதிரிகளுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டியது.

அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை கொண்டு நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “உம்முடைய தொழுகையில் உரத்த குரலில் ஓதாதீர், மிக மெதுவாகவும் ஓதாதீர். இவை இரண்டுக்கும் இடையில் நடுநிலையான வழியைக் கடைபிடிப்பீராக!” (ஸூரத்துல் இஸ்ரா 110) என்று அறிவுறுத்தினான். எதிரிகளின் இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும், ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் கற்றலை இழந்து விடவும் கூடாது என்பதற்காக இத்தகைய நடுத்தர நிலை அல்லாஹ் அறிவுறுத்தினான்.

அல்குர்ஆன் இறை நம்பிக்கையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களால் செவியேற்பதையோ, ஓதுவதையோ தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறிருக்க, நபிமணித் தோழர்கள் ஒரு திட்டத்தைத் தமக்குள் பகிர்ந்து கொண்டனர். கஃபாவின் முற்றத்தில் வைத்து எதிராளிகள் கேட்கத் தக்க வகையில் குர்ஆன் ஓத வேண்டும். இதைச் செய்வது யார்?

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் அதை நிறைவேற்றுவதாக முன் வந்தார்கள். தோழர்கள் கூறினர் “அப்படிச் செய்தால் நீங்கள் தாக்கப்படலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே நம்மவர்களில் அதிக குடும்பச் செல்வாக்கு உள்ள ஒருவரால் இது நடத்தப்பட்டால், தாக்குபவர்கள் அவ்வளவு சீக்கிரம் தலையிட மாட்டார்கள்.”

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான் சென்று ஓதுகின்றேன், அல்லாஹ் என்னை பாதுகாப்பான்” என்று கூறினார்கள்.

விடியற்காலையில் (ளுஹா நேரத்தில்) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவுக்குச் சென்று, மகாமு இப்ராஹிமுக்குப் பக்கத்தில் நின்றார்கள். ஸூரத்துர் ரஹ்மான் என்ற குர்ஆன் அத்தியாயத்தை ஓதத் தொடங்கினார்கள்.

அங்கே கூடியிருந்த குறைஷிகள் ஒருவருக்கொருவர் ‘உம்மு அப்தின் மகன் என்ன சொல்கிறார்? ஆம்! முஹம்மது நபிக்கு அருளப்பட்ட நூலின் பகுதிகளை அவர் ஓதுகிறார்’ என்று சொல்லிக்கொண்டனர். அவர்கள் எழுந்து வந்து இப்னு மஸ்வூத் அவர்களைத் தாக்கத் தொடங்கினர். சிலர் முகத்தில் காயத்தை ஏற்படுத்தினர். அதைப் பொருட்படுத்தாமல் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேலும் கொஞ்சம் ஓதி விட்டு நண்பர்களிடம் திரும்பி வந்தார்கள்.

முகத்தில் இரத்தக் காயங்களுடன் தமது தோழர் வருவதைப் பார்த்த அவர்கள் ‘இதைத்தான் நாங்கள் பயந்தோம்’ என்றனர்..

உடனே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இப்போது அவர்களின் வன்முறை எனக்கு அற்பமாகத் தெரிகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் நாளையும் குர்ஆன் பாராயணம் செய்வேன்’ என்றார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை பகிரங்கமாக ஓதிய முதல் நபர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்கள்.

குர்ஆனின் வசீகரம் குரைஷிகளிடையே மேலும் விவாதப் பொருளாக மாறியது. கடுமையான எதிர்ப்பாளர்கள் கூட அதை ஒரு முறைக் செவி மடுத்தால் என்ன? என்று சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் குரைஷித் தலைவர்களான அபூஜஹ்ல், அபூசுஃப்யான் மற்றும் அக்னஸ் பின் ஷரீக் ஆகிய மூவர் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குர்ஆன் பாராயணத்தைக் கேட்க முடிவு செய்தனர்.

நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தொழுது கொண்டிருக்கும் போது இம்மூவரும் ஒருவரையொருவர் அறியாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதுவதைக் கவனமாகச் செவியேற்று விட்டுத் திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக மூவரும் சந்தித்தனர்.

‘நம்முடைய தோழர்கள் இதை அறிந்தால் நம்மைத் தவறாக நினைப்பார்கள். எனவே இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது’ என்று தீர்மானித்துக் கொண்டு அவர்கள் பிரிந்துச் சென்றனர்.

Mahabba Campaign Part-77/365

ஒருவரையொருவர் அறியாமல் மறுநாள் இரவும் குர்ஆன் கேட்க மூவரும் வந்தனர். ஆனால் திரும்பிச் செல்லும் வழியில் முந்திய நாள் போலவே சந்தித்தனர். அன்றும் இனிமேல் வரக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து பிரிந்துச் சென்றனர்.

மூன்றாம் நாளும் குர்ஆன் ஓதுவதை மறைந்திருந்து கேட்டுவிட்டு திரும்பிச் செல்லும்போது மூவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது “இதை நாம் மீண்டும் தொடரக் கூடாது. ஒரு உடன்படிக்கை செய்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறி பிரிந்துச் சென்றனர்.

மறுநாள் விடிந்ததும், அக்னஸ் தனது கைத்தடியை எடுத்துக்கொண்டு அபூசுஃப்யானை சந்தித்துக் கேட்டார். “முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுவதைக் கேட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” அபூ சுஃப்யான் திருப்பிக் கேட்டார் “உங்கள் கருத்து என்ன? அது சரியானதுதான் என்று கருதுகின்றேன். நான் கேட்டதில் சிலவற்றை புரிந்துகொண்டேன். சில எனக்குத் தெளிவாகப் புரியவில்லை” என்றார்.

“எனக்கும் அப்படித்தான்!” என்றார் அக்னஸ்.

பிறகு அக்னாஸ் அபுஜஹ்லின் வீட்டிற்குச் சென்றார். “நேற்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“நாங்களும் அப்துல் மனாஃப் (நபி அவர்களின் குடும்பம்) குடும்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் இரண்டு குதிரைகளைப் போன்றவர்கள். அவர்கள் செய்வதை நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். இப்படியிருக்க, அப்துமனாஃப் குடும்பத்தில் ஒருவருக்கு வஹீ மற்றும் நபித்துவம் கிடைத்தால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருபோதும் நம்ப மாட்டேன்” என்றான்.

குர்ஆன் அற்புதமானது என்றும், நபித்துவம் உண்மைதான் என்றும் மூவரும் உறுதியாக நம்பினார்கள். ஆனால் அவர்களின் சுயநலம் அதனை ஒப்புக் கொள்ள இடம் தரவில்லை. அபூஜஹ்ல் இந்த விஷயத்தில் மிகக் கண்டிப்பாக இருந்தான். அவன் காஃபிராக பத்ருப் போரில் கொல்லப்பட்டான். அபு சுஃப்யான் மக்கா வெற்றியின்போது முஸ்லிம் ஆனார். அக்னஸ் முஸ்லிம் ஆனார் என்று கூறப்படுகிறது.

அபூஜஹ்லின் நம்பிக்கையை தெளிவுபடுத்தும் ஒரு அறிவிப்பை இப்னு கதீரில் காணலாம். முகீரா பின் ஷுஅபா ரழியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகிறார்கள் “இஸ்லாமை நான் புரிந்து கொண்ட முதல் நாளின் அனுபவம் கீழ்க்கண்டவாறு இருந்தது. நான் அபூஜஹ்லுடன் மக்காவின் ஒரு சந்தில் நடந்துக் கொண்டிருந்தேன். திடீரென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரே வந்தார்கள்.

உடனே அவர்கள் அபூஜஹ்லை நோக்கி, ‘அபுல் ஹகம்! நான் உன்னை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அழைக்கிறேன். அல்லாஹ்விடம் வா!’ என்று அழைத்தார்கள்.

அபூ ஜஹ்ல் கூறினான் ‘முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நீங்கள் எங்கள் கடவுளை மறுப்பதை நிறுத்திவிட்டீர்களா? தங்களுக்கு அழைப்புப் பணி கிடைத்திருப்பதாகச் சொல்வதை நான் நம்ப வேண்டுமா? அல்லாஹ் மீது சத்தியமாக! நீங்கள் சொல்வது உண்மைதான் என்று எனக்கு உறுதியாக நம்பிக்கை ஏறு்படும்போது நான் உங்கனைப் பின்தொடர்கிறேன்’ என்றான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு அபூஜஹ்ல் என்னிடம் கூறினான் ‘அல்லாஹ் மீது ஆணையாக! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வது உண்மை என்று எனக்குத் தெரியும். ஆனால் பனூ குஸைய் குடும்பத்தினர் நாங்கள்தான் கஃபாவின் திறவுகோல்களின் காவலர்கள் என்று கூறினர். அதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். ‘நத்வா’ ஆலோசனைக் கூட்டங்கள் எங்கள் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்றனர்.. நாங்கள் சரி என்று ஏற்றுக் கொண்டோம். நாங்கள்தான் ​கொடியேற்றுவோம் என்று கூறினர். அதையும் ஒப்புக் கொண்டோம். கஃபாவை தரிசிக்க வரும் புனிதப் பயணிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்தனர். நாங்களும் ஏற்பாடு செய்தோம். இவ்வாறு எங்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நபித்துவமும் கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்க எங்களுக்கு மனமில்லை.

இதுதான் அபூஜஹ்லின் பிரச்சனை. பொறாமையும், போட்டியும்தான்! இவற்றுக்கு மருந்து இல்லை.

இஸ்லாமின் புதிய கால விமர்சகர்கள் அறிவார்ந்த விவாதங்களுக்கு வருவதில்லை. மாறாக, கதையில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் முயற்சிக்கின்றனர். ஏனெனில் இஸ்லாத்தின் நம்பகத்தன்மை அவர்களைத் தொந்தரவு செய்கிறது. வரலாறு தெரியாததால் தான் 1500 வருடங்கள் கழித்து இஸ்லாத்தை விழுங்கி விடலாம் என்று அந்தச் சிலர் நினைக்கின்றனர்.

அல்குர்ஆனின் கருவையும் சாரத்தையும் அறிந்த மற்றொரு குரைஷித் தலைவரைப் பற்றி அடுத்ததாக வாசிக்கலாம், இன்ஷா அல்லாஹ்!.

Mahabba Campaign Part-78/365

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸூரத்துல் ஙஃபிர் அருளப்பட்டபோது அதனை கஃபாவின் அருகிலிருந்து ஓதிக் கொண்டிருந்தார்கள்.

வலீத் பின் முகீரா அந்த ஓதலைக் கவனமாகக் கேட்டுவிட்டு பனூ மக்ஸூம்களின் சபைக்குச் சென்றார். “இப்போது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய வசனங்களைக் கேட்டு விட்டு வருகின்றேன். அந்த வசனங்களைப் பற்றி நான் என்ன சொல்வது! கவிதைகள், காவியங்கள், ஜின் பாடல்கள் போன்ற அரபு மொழியின் எந்த இலக்கியத் துறையையும் உங்களை விட நான் நன்கறிவேன். இறை மீதாணை! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வசனங்கள் இவை எதற்கும் ஒப்பானதல்ல. அந்த வசனங்களில் ஒரு அற்புதமான இனிமை இருக்கிறது. ஒரு சிறப்பான தாளமிருக்கிறது. அதன் கிளைகள் காய்த்துக் குலுங்குகின்றன. அதன் வேர்கள் மண்ணின் ஆழத்தில் வேரூன்றியுள்ளன. அவை அனைத்து வார்த்தைகளையும் விட மிக்க உயர்வானது. நிச்சயமாக எதைக் கொண்டும் அதனை வெல்ல முடியாது. சந்தேகத்திற்கு இடமின்றி அதன் கீழுள்ள அனைத்தையும் அது வெற்றி கொள்ளும்.” என்று கூறி விட்டுச் சென்றார்!

வலீத் பின் முகிரா சொன்னவை குரைஷிகளிடையே விவாதப் பொருளாக மாறியது. வலீத் ஸாபிஇ ஆக மாறி விட்டார். அல்லது மதம் மாறி விட்டார் என்று கூறினர்.

‘குரைஷிகளின் சுகந்தம்’ என்று அழைக்கப்பட்ட வலீத் மதம் மாறினால் ஒட்டுமொத்த குரைஷிகளும் மதம் மாறும் சூழல் ஏற்படலாம். எனவே அபூஜஹ்ல் கூறினான் ‘நான் வலீதை வழிக்குக் கொண்டு வருகின்றேன்.’

வலீதின் வீட்டிற்கு வந்த அபூஜஹ்ல் வருத்தத்தோடு சொன்னான் ”சகோதரரே! உங்களிடம் ஒப்படைக்க குரைஷிகள் செல்வத்தைக் சேகரிக்கின்றனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாதங்கள் சுத்தமான முட்டாள்தனம் என்பதை நீங்கள் மக்களை நம்ப வைக்க வேண்டும்.”

“நான் பெரும் பணக்காரன் என்பது குறைஷிகளுக்குத் தெரியுமல்லவா!” என்று கேட்டார் வலீத்.

அபூஜஹ்ல் கூறினான் ‘இந்த விஷயத்தில் உங்களுடைய மறுப்பைக் கூறித்தான் ஆக வேண்டும்.’

“நான் எதைச் சொல்ல? முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகள் மனிதன் அல்லது ஜின்களுடைய வார்த்தைகளே அல்ல” என்றார் வலீத்.

அபூஜஹ்ல் கூறினான் “மக்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் மறுத்துச் சொல்லித்தான் ஆகவேண்டும்.”

“அன்பானவர்களே! மக்காவில் ஹஜ் காலம் வந்து விட்டது. எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வரத் தொடங்குவார்கள். பொதுவாக இங்கு தோன்றியவரைப் (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) பற்றி விசாரிப்பார்கள். அப்போது எல்லோருடைய கருத்துக்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பல்வேறு கருத்துக்களாக இருந்தால் மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே நாம் என்ன சொல்ல வேண்டும்?” என்று மக்கத்து மக்களிடம் கேட்டார் வலீத்.

“நீங்களே சொல்லுங்கள்” என்றனர் மக்கள்.

“இல்லை, நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன் என்றார் வலீத்.

சிலர் கூறினர்: “ஜோதிடர் என்று கூறலாம்.

வலீத்: இறைவனின் மீது ஆணையாக! அது உண்மை இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜோதிடருக்குரிய எந்த அறிகுறியும் இல்லை.

“பைத்தியம் என்று சொல்லலாம்.”

வலீத்: எத்தனை பைத்தியக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். அதற்கான எந்த அறிகுறியும் இங்கு காணப்படவில்லை.

”அவரைக் கவிஞர் என்று கூறலாம்”

வலீத்: கவிதையின் இலக்கியத் தரம், தாளம், அமைப்பு, கவர்ச்சி பற்றியெல்லாம் நமக்கு நன்கு தெரியும். பிறகு எப்படி கவிஞர் என குற்றஞ்சாட்ட முடியும்?

“துர்மந்திரவாதி என்று சொல்லலாம்.”

வலீத்: அது சூனியம் அல்ல. இதில் ஓதி ஊதல், முடிச்சுகள் எதுவுமில்லை. தொடர்ந்து வலீத் குர்ஆனின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.

உரையாடல் இப்படியே தொடர்ந்தது.

இறுதியாக, இப்போதைக்கு குற்றம் சாட்டப்படக்கூடிய ஒரேயொரு விஷயம் சூனியம் மட்டும்தான். மத நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற பெயரில் தந்தைக்கும், மகனுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் ஏற்படுகிறதல்லவா! எனவே சூனியக்காரர் என்றே கூறுவோம் என்று முடிவு செய்தனர்.

அனைவரும் இதற்குச் சம்மதித்து பிரிந்து சென்றனர்.

Mahabba Campaign Part-79/365

வியக்கத்தக்க மொழி நடையில் வலீத் பின் முகீராவின் சூழ்ச்சிகளுக்கு திருக்குர்ஆன் பதிலடி கொடுத்தது. ‘அல்முத்தஸிர்’ அத்தியாயத்தின் பத்து முதல் உள்ள வசனங்களின் பொருளைப் பின்வருமாறு படிக்கலாம்.

“(நபியே!) என்னையும் நான் தனித்தே படைத்த அவனையும் விட்டுவிடுங்கள். அவனுக்கு ஏராளமான பொருளைக் கொடுத்தேன். எந்நேரமும் அவனுடன் இருக்கக் கூடிய மக்களையும் (அவனுக்குக் கொடுத்தேன்.) அவனுக்கு வேண்டியதை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன். பின்னும் அவனுக்கு செல்வத்தை நான் அதிகமாக்க வேண்டுமேன்று ஆசைப்படுகின்றான்.

அவ்வாறல்ல! நிச்சயமாக நம்முடைய வசனங்களுக்கு முரண்பட்டவனாக அவன் இருக்கின்றான். விரைவிலேயே அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மீது நான் ஏற்றி விடுவேன். நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராக) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான். அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான். பின்னரும் அவன் அழிவானாக! பிறகும் அவன் (குர்ஆன் வசனங்களை) நோட்டமிட்டான். பின்னர் கடுகடுத்தான். (முகம்) சுளித்தான்.

பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான். இன்னும் பெருமை கொண்டான். ஆகவே இது மயக்கக்கூடிய சூனியமே அன்றி வேறில்லை என்றும், இது மனிதர்களுடைய சொல்லே அன்றி வேறில்லை என்றும் கூறினான். அவனை ஸகர் (எனும்) நரகில் புகச் செய்வேன். (நபியே!) ஸகர் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது (ஸகர்) எவரையும் மிச்சம் வைக்காது. விட்டு விடவும் செய்யாது. அது (சுட்டுக் கரித்து) மனிதனின் மேனியை உருமாற்றி விடும்……..

வலீதுடன் சேர்ந்து அபிப்ராயம் தெரிவித்தவர்களையும் திருக்குர்ஆன் சும்மா விடவில்லை. ‘அல்-ஹிஜ்ர்’ அத்தியாயத்தில் 91 92ம் வசனங்களின் சாராம்சத்தைப் பாருங்கள். “இந்தக் குர்ஆனை பலவாறாகப் பிரிப்பவர்கள் மீது (வேதனையை இறக்கி வைப்போம். உங்கள் இறைவன் மீது ஆணையாக! அனைவரையும் நாம் விசாரிப்போம்.” என்று எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப குர்ஆன் அருளப்படுவதைக் கண்டு இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் எரிச்சலடைந்தனர்..

புனிதப் பயணிகளிடம் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய உரையாடல் நபிகளாரின் புகழ் நாடெங்கும் பரவக் காரணமாக அமைந்தது. மக்காவுக்கு வருபவர்களிடம் குறைஷிகள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிக் கூறிய காரியங்கள், அப்பெருமகனாரைக் குறித்து ஆய்ந்து, அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமைந்தது.

தங்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வியுற்றபோது, ​​​​எதிர்ப்பாளர்கள் வன்முறையைத் தூண்டி விடுவதில் கவனத்தைச் செலுத்தினர். குறிப்பாக பலவீனமான ஏழை முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

அபூஜஹ்ல் எதற்கும் துணிந்து இறங்கினான். மரியாதைக்குரிய ஒருவர் விசுவாசியாகிவிட்டார் என்று தெரிந்தால் அவரை அவமானப்படுத்தவும், ஈமான் கொண்டவர் வர்த்தகராக இருந்தால் அவரது வர்த்தகத்தை நஷ்டப்படுத்தவும், ஏழையாக இருந்தால் அவரை தாக்கி காயப்படுத்தவும் ஆரம்பித்தான்.

தூய்மையான இதயம் படைத்த அடிமை பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமைத் தழுவினார்கள். பிலால் அவர்களின் உரிமையாளரான உமையாவுக்கு அது பிடிக்கவில்லை. எனவே பிலால் அவர்களை தன் வழிக்குக் கொண்டு வர இயன்றவரை முயன்று பார்த்தான் உமையா. ஆனால் பிலால் அவர்கள் இஸ்லாமைக் கைவிட உடன்படவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்கள்.

எனவே உமையா பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். அவர்களை இறுகக் கட்டி, கொதிக்கும் மணலில் படுக்க வைத்தான். அவர்களது நெஞ்சில் ஒரு கனமான கல்லை வைத்து, சாட்டையால் அடித்தான். ‘ஒன்று உங்களுடைய மரணம். அல்லது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடவுளை மறுத்துரைக் வேண்டும்’ என்று உமையா மிரட்டினான்.

“லாத்தையும், உஸ்ஸாவையும் நிராகரிக்கின்றேன், அஹத் …. அஹத் ….. இரட்சகன் ஒருவன் …. இரட்சகன் ஒருவன் …. என்று பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். உமையா கோபம் கொண்டு குரூரத்தைத் தீவிரப்படுத்தினான்.

அம்ர் பின் அல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். “நான் மக்காவில் நடந்துச் சென்று கொண்டிருந்தபோது, ​​பிலால் அவர்கள் அடிக்கப்படுவதைக் கண்டேன். பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அஹத் அஹத் என்று எவ்வளவு அதிகமாகக் கூறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களை உமையா கொடுமை செய்தான். கொதிக்கும் பூமியில் பிலாலின் உடல் துடித்துக் கொண்டிருந்தது. இடையிடையே அவர்கள் சுயநினைவை இழந்தார்கள். நினைவு திரும்பும்போது அஹத் …. அஹத் ….. என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.”

ஹஸ்ஸான் பின் தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். “நான் உம்ரா செய்வதற்காக கஃபாவுக்கு வந்தேன். அப்போது சிறுவர்கள் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நீண்டதொரு கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பிலால் அவர்கள் உரத்த குரலில் லாத், உஸ்ஸா, மனாதா, ஹுபுல், நாயிலா, புவானா ஆகிய கடவுள்களை நான் மறுக்கின்றேன் என்று கூறினார்கள். உடனே உமையாக்கள் வந்து பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பிடித்துக் கிடத்தினர்……….

Mahabba Campaign Part-80/365

முஜாஹித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் “குரைஷிகள் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, மக்காவின் மலைகளுக்கு இடையே அவரை இழுத்துச் செல்லும்படி சிறுவர்களிடம் கூறினர். சிறுவர்கள் அவர்களை இழுத்துச் சென்றனர். அப்போது பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அஹத், அஹத்’ என்று கூறிக்கொண்டே இருந்தார்கள்.

பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்னர் ஒரு முறை கூறினார்கள் “ஒரு இரவும் பகலும் தொடர்ந்து என்னைக் கட்டிப் போட்டு இழுத்துச் சென்றனர். என் தொண்டை வறண்டு போனது. என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை”.

பிலால் அவர்களைக் கொடுமைப்படுத்தும் காட்சியைக் கண்ட வரகத் பின் நௌஃபல் கூறினார், “பிலால் நீங்கள் அஹத், அஹத் என்று கூறுவதுதான் சரி! அல்லாஹ் தான் உண்மை!” என்றார்.

மேலும் உமையாவிடம், ‘நீங்கள் அவரைக் கொல்கிறீர்களா? அப்படி நடந்தால் பிலாலின் கல்லறையை கருணை இல்லமாகப் பரிபாலிப்பேன்” என்றார்.

பிலால் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டுக் கொண்டு அந்த வழியாக வந்த அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உமையாவிடம் கேட்டார்கள் “உமையா! இந்த ஏழையின் விஷயத்தில் நீ படைத்த இறைவனைப் பயப்பட வேண்டாமா? அந்த ஏழையை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்த எண்ணுகிறாய்?”

உமையா சொன்னான்: “நீங்கள்தான் இவரை நாசப்படுத்தினீர்கள். எனவே அவரைக் காப்பாற்ற உங்களால் முடிந்ததைச் செய்துக் கொள்ளுங்கள்.”

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள், “என்னிடம் ஆரோக்கியமான ஒரு கருப்பு அடிமை இருக்கிறார், உங்களுடைய மத நம்பிக்கையில் அவர் உறுதியாக உள்ளார். பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விடுவிப்பதற்கு ஈடாக நான் அவரை உனக்குத் தருகிறேன்”.

உமையா ஒப்புக்கொண்டான்.

இவ்வாறு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள். பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடிமைத் தளையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார்கள்.

முஹம்மது பின் சீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: “பிலால் ரழியல்லாஹு அன்ஹு முஸ்லிமாக மாறியதும் அவரது எதிரிகள் அவரை பாலைவனத்தில் படுக்க வைத்து அடிக்கத் தொடங்கினர், “என்னுடைய கடவுள் லாத் மற்றும் உஸ்ஸா என்று கூறுங்கள்” என்று மிரட்டினர். ஆனால் பிலால் அவர்கள் ‘அஹத், அஹத் – என் இறைவன் ஒருவன், அல்லாஹ் ஒருவன்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே வந்த அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், “ஏன் அவரை சித்திரவதை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். பின், ஏழு ஊகியா விலைக்கு பிலால் அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்து விட்டு விவரத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். “நானும் அதில் ஒரு பங்கு சேர்கின்றேன்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆனால் ஏற்கனவே அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்து விட்டார்கள்.

ஐந்து ஊகியா வழங்கப்பட்டது என்ற அபிப்ராயமும் உண்டு.

விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் துன்புறுத்தல்களை சகித்துக் கெண்டிருந்தனர். அவை ஒரு புறம் வலிகளையும், சங்கடங்களையும் தந்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆத்ம தைரியத்தின், உறுதியான நம்பிக்கையின் அறிவிப்புகளாக அவை அமைந்தன.

தான் ஏற்றுக் கொண்ட நம்பிக்கையின் பாதுகாப்பிற்காகத தன்னையே தியாகம் செய்த கப்பாப் பின் அல்அரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சற்று பார்ப்போம்.

ஸிபாவு பின் அப்துல் உஸ்ஸாவும், அவரது தோழர்களும் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்கள். “நீங்கள் வழி தவறி விட்டீர்கள் எனவும், புதிய வாதத்தைக் கொண்டு வந்த ஹாஷிம் குடும்பத்தைச் சார்ந்தவரைப் பின்பற்றுகிறீர்கள் எனவும் கேள்விப்பட்டோம் உண்மையா?”

கொல்லப் பட்டறையில் வேலை செய்துக் கொண்டிருந்த கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் “நான் வழி தவறவில்லை. நீங்கள் வணங்கும் கடவுள்களை விட்டுவிட்டு இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குகிறேன். அவ்வளவுதான்”.

கொல்லப் பட்டறையில் வேலை செய்யும் அடிமையான கப்பாப் அவர்களின் இந்தப் பதில் ஸிபாவுக்கு எரிச்சலூட்டியது. பட்டறையில் இருந்த ஆயுதங்களை எடுத்து கப்பாப் அவர்களை அடித்து காயப்படுத்தினார். கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு இரத்தத்தில் குளித்தார்கள். கப்பாப் முஸ்லிமான செய்தி மக்காவில் பரவியது. ஒரு அடிமை தனது விசுவாசத்தை வெளிப்படையாக அறிவித்ததை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

குரைஷிப் பிரமுகர்களான அபூஜஹ்ல், அபூசுஃப்யான், வலீத் ஆகியோர் தாருன் நத்வாவில் கூடி, வன்முறையை தீவிரப்படுத்த முடிவு செய்தனர்.

கப்பாப் அவர்களை தங்களது வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பை அவரது எஜமானி உம்மு அன்மாரின் சகோதரர் ஸிபாவுவிடம் ஒப்படைத்தனர்.

கப்பாபி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொளுத்தும் வெயிலில் சுட்டு பழுத்த மணலில் நிர்வாணமாக கிடத்தப்பட்டு, கனமான கற்களை அவர்கள் மீது வைக்கப்பட்டன.

பிறகு, “இப்போது முஹம்மது நபியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

“என் நபி அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்” என்றார்கள் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அடுத்து அவர்களது உடலில் இரும்புக் கவசத்தை அணிவித்து வெயிலில கிடத்தி “லாத் மற்றும் உஸ்ஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்பர்.

“அவை பற்றி நான் என்ன சொல்ல? அவை வெறும் இரண்டு கற்சிலைகள்” என்று பதிலளிப்பார்கள்.

இந்த பதிலைக் கேட்டவுடன் அவர்கள் தமது கொடூரத்தைத் தீவிரப்படுத்துவார்கள்……

Mahabba Campaign Part-81/365

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுமை படுத்தப்படும் காட்சியைக் காண நேர்ந்தது. அவர்களது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட மனமுருகி “அல்லாஹ்வே! கப்பாபை காப்பாற்று” என்று பிரார்த்தித்தார்கள்.

கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த அரத் என்பவரின் மகனாக நஜ்தில் பிறந்தார்கள். கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு மக்காவின் சந்தையில் விற்கப்பட்டார்கள். குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த உம்மு அன்மார் என்ற பணக்காரப் பெண் அவரை விலைக்கு வாங்கி, கொல்லப் பட்டறையில் சேர்த்து பயிற்சி அளித்தாள். இதனால் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் நன்கு அறியப்பட்ட கொல்லர் ஆனார்கள். அதன் மூலம் உம்மு அன்மார் பெரும் செல்வந்தரானார்.

கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவ வழிபாடுகளில் தொடக்கம் முதலே ஆர்வம் காட்டவில்லை, மேலும் விடுதலை பெறுவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தபோதுதான் ​​​​ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது நபித்துவ அறிவிப்பைப் பிரகடனம் செய்தார்கள்.

கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த உற்சாகமடைந்து, தமது தவ்ஹீதை அறிவித்தார்கள். இதனை உம்மு அன்மாரால் ஜீரணிக்க முடியவில்லை. அவள் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அடித்துத் துன்புறுத்தினாள். ஆனால் விரைவில் அவள் நோய்வாய்ப்பட்டாள். தினமும் ஒரு இரும்பு கம்பியை சூடாக்கி அதைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுக்க மருத்துவர் ஒருவர் பரிந்துரைத்தார். இந்த சிகிட்சை கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒத்தடம் கொடுக்கும்போது சூடாக்கப்பட்ட கம்பியின் வெப்பம் காரணமாக வலியால் அவள் துடிப்பதை கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காண நேர்ந்தது.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சித்திரவதைக் காலத்தை நினைவுபடுத்தும் ஒரு அறிவிப்பை பதிவு செய்துள்ளார்கள்.

கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் ”மக்காவில் நாங்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டோம். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். அவர்கள் ஒரு துண்டை மடக்கித் தலையணையாக வைத்து கஃபாவின் நிழலில் படுத்திருந்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்யவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று முகம் சிவக்கச் சொன்னார்கள் “உங்கள் முன்னோர்கள் எவ்வளவோ சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்களில் சிலரை எதிரிகள் இரும்புச் சீப்புகளால் வாரினார்கள். எலும்புகளில் இருந்து சதை பிய்ந்து வந்தது. மரத்தை பிளப்பது போல் வாளால் சிலரை இரண்டாக பிளந்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையை இழக்கவே இல்லை. நம்முடைய இந்தக் கொள்கை வளர்ச்சி அடையும். அப்போது ஸன்ஆவிலிருந்து ஹழரமவுத் வரை ஒருவர் பயணம் செய்தால் அல்லாஹ்வையும், தன்னுடன் இருக்கும் ஆட்டை ஓநாய் பிடிக்குமோ என்று மட்டும் பயந்தால் போதும்!

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். துன்புறுத்தலை முறியடித்து வரவிருக்கும் நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஊட்டினார்கள். தேவையான சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். இவை தான் பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறவுரைகளின் சாராம்சமாகும்.

கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை நன்றாகப் படித்தார்கள். மற்றவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரானார்கள்.

மக்காவில் சோதனைகளின் நாட்கள் தொடர்ந்தன. குரைஷிகளின் கொடூரமான பொழுது போக்குகளுக்கு ஏழை விசுவாசிகள் தொடர்ந்து பலியாகி வந்தனர். ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமி, அமீர் பின் ஃபுஹைரா மற்றும் அபு ஃபுகைஹா ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக மிகப் பெரிய சோதனையை எதிர்கொண்ட குடும்பம் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பம். தந்தையார் யாஸிர், தாயார் ஸுமையா, சகோதரர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் பெரும் இடர்களை எதிர்கொண்டனர்.

ஒரு நாள் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை குரைஷிகள் கூட்டமாகச் சேர்ந்து தாக்கினர். அதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களோடு அவர்களை பாலைவனத்தின் சுடு மணற்பரப்பில் பிடித்துக் கிடத்தினர். பின்னர் தண்ணீரில் மூழ்கடித்தனர். இதனால் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வெகு நேரம் மயங்கிக் கிடந்தார்கள். சுயநினைவு திரும்பியதும் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்துரைத்து, அவர்கள் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும்படி கூறினர். அரை மயக்கத்தில் கிடக்கும் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒப்புக்கொண்டு குறைஷிகள் சொன்னதைச் சொன்னார்கள். உணர்வு வந்தபோதுதான் தாம் செய்த தவறு தெரிய வந்து, அதனால் கவலை மீக்குற்று வெகு நேரம் அழுதுகொண்டிருந்தார்கள்.

Mahabba Campaign Part-82/365

அப்போது அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அருகில் வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொடுத்து “காஃபிர்கள் தண்ணீரில் மூழ்கடித்து ஏதாவது சொல்லும்படி உங்களை வற்புறுத்தினார்கள், இல்லையா? அது குறித்து கவலைப்பட வேண்டாம்” என்று ஆறுதல் கூறினார்கள்.

மேலும் திருக்குர்ஆன் அன்னஹ்ல் அத்தியாயத்தின் நூற்று ஆறாவது வசனமும் அருளப்பட்டது. “அவனுடைய உள்ளம் நம்பிக்கையைக் கொண்டு முற்றிலும் திருப்தி அடைந்தே இருக்க, எவருடைய நிர்பந்தத்தினால் அவன் நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமும் இல்லை” என்பதுதான் அந்த வசனத்தின் பொருள். இந்த வசனத்தைக் கேட்டு அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிம்மதியடைந்தார்கள்.

தொலைந்து போன தனது சகோதரர் அப்துல்லாஹ்வைத் தேடி யாஸிர் பின் ஆமிர் எமனில் இருந்து மக்காவுக்கு வந்தார். அவருடன் வந்த மற்ற இரண்டு சகோதரர்களான மாலிக் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் எமனுக்குத் திரும்பிச் சென்றனர்.

யாஸிர் மக்காவிலேயே குடியேறினார்கள். அவர்களுக்கு மக்காவில் அடைக்கலம் கொடுத்த அபூ ஹுதைஃபா அவர்கள் தனது மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு அடிமைப் பெண்ணை யாஸிர் அவர்களுக்கு கொடுத்தார்கள். அந்த அடிமைப் பெண்மணி யாசிரின் மனைவி சுமையா பின்த் கய்யாத். இத்தம்பதியரின் அன்பு மகன்தான் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாருல் அர்கமுக்குச் சென்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனைக் கேட்பார்கள். வீட்டிற்கு வந்து கற்றதை தமது தாயாரிடம் ஓதிக் காட்டுவார்கள்.. குர்ஆனைக் செவிமடுத்த தாயாரின் உள்ளத்திலும் ஈமானின் ஒளி புகுந்தது. ஒவ்வொரு வசனமும் அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்தியது. குறிப்பாக ‘மனித இனம் ஒரு ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உருவாயிற்று’ என்ற கருத்தைத் தரும் வசனம் அவரை மிகவும் ஈர்த்தது.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தனது மகனிடம் தெரிவித்தார்கள். தாயாரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு தாயாருடன் தாருல் அர்கமுக்குச் சென்றார்கள் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.. நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று, திருக்குர்ஆன் வசனங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை ஓதிய ஸுமய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தாருல் அர்கமில் இருந்து வீட்டுக்கு வந்து தமது கணவரிடம் நடந்த விவரங்களைச் சொன்னார்கள் ஸுமய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். அவரும் இஸ்லாமை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.

இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முதல் பத்து பேரில் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது.

தாங்கள் முஸ்லிமானதை யாஸிர் குடும்பம் ஒரு வருடம் ரகசியமாக வைத்திருந்தது. பின்னர் அவர்கள் ஈமான் கொண்டதை அறிந்த பனு மக்ஸூம் கோத்திரத்தாரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் இந்தக் குடும்பத்தினரின் கைகளைப் பிணைத்துக் கட்டி பல்வேறு கொடுமைகளைச் செய்தனர். அவர்களை பழைய நம்பிக்கைக்குக் கொண்டு வர பல முயற்சிகள் செய்தனர். ஆனால் எதுவும் பயன் தரவில்லை.

யாஸிர் குடும்பத்தின் ஒவ்வொருவரையும் குறைஷிகள் குரூரமாகக் கொடுமை செய்தனர். ஆனால் ஒவ்வொருவரும் உறுதியான நம்பிக்கையின் முடிவில்லாத உதாரணங்களாக அமைந்தனர்.

ஸுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அற்புதமான தைரியத்துடன் தாக்குதல்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு தொல்லையையும் சட்டை செய்யாமல் உறுதியாக நின்றார்கள். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கூறினார்கள். “யாஸிர் குடும்பத்தினரே! பொறுத்துக் கொள்ளுங்கள்,. உங்களுக்காக சொர்க்கம் தயார் செய்யப்பட்டுள்ளது.”

அருமை மகன் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை குறைஷிகள் தீயில் சூடாக்கிய இரும்புக் கம்பியால் சூடு வைத்து மயக்கமடையச் செய்தபோது தாயார் ஸுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கை எள் அளவும் தளரவில்லை.

எதிரிகள் அவர்களை விடாமல் தொடர்ந்து அடித்தனர். எந்த அடி அடித்தாலும் அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்பதை குறைஷிகள் உணர்ந்ததும் அபூஜஹ்லுக்கு கடும் கோபம் வந்தது. தன் ஈட்டியை எடுத்து அம்மாதரசியின் அடிவயிற்றில் குத்தினான். ஸுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சற்றும் பதறவில்லை, அவர்கள் வலியைக் மென்று விழுங்கினார்கள். சுவன உலகுக்குப் பறந்து சென்றார்கள்.

ஸுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாமின் முதல் தியாகி ஆனார்கள். பனூ மக்ஸூமின் அடிமைப் பெண் உலக முடிவு வரை இறை விசுவாசிகளுக்கு ஆற்றலாக, முன்மாதிரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். வரலாற்றில் துணிச்சல் மிக்க பெண் மணியாக உருவெடுத்தார்கள்.

விரைவில் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இவ்வுலகை விட்டுச் சென்றார்கள், யாஸிர் அவர்களின் சகோதரர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்பு எறிந்து கொல்லப்பட்டார்கள்.

இந்தக் கொடுமைகளின் காரணமாக அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி மனிதரானார்கள். அபூஜஹ்ல் பத்ர் போர்களத்தில் கொல்லப்பட்டபோது ​​நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மாரிடம் கூறினார்கள். “உங்களுடைய தாயாரைக் கொன்றவனை அல்லாஹ் கொன்று விட்டான்.”

Mahabba Campaign Part-83/365

ஸுமய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் போலவே இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக சித்திரவதைகளைச் சகித்துக் கொண்ட மாதரசி லபீபா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.

பனூ முஅம்மல் குடும்பத்தின் பணியாளராக இருந்த லபீபா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை குறைஷிகள் அடித்துத் துன்புறுத்தினர். அடியின் தாக்கத்தால் அவர் இறக்கும் நிலைக்கு வந்து விட்டார். அப்போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை விலைக்கு வாங்கிக் காப்பாற்றினார்கள்.

ரோமானிய வம்சாவளியைச் சேர்ந்த ஸின்னிரா அல்லது ஸன்பரா என்ற துணிச்சலான பெண்மணியையும் இந்த குழுவில் சேர்த்துத் வாசிக்க வேண்டும். குறைஷிகள் அவரை அடித்துக் குருடாக்கி விட்டு ‘லாத், உஸ்ஸா கடவுளர்களின் கோபத்தால்தான் இந்த துரதிர்ஷ்டம் உமக்கு ஏற்பட்டது’ என்று கூறினர்.

உடனே அந்த வீரப் பெண்மணி அல்லாஹ்வைப் புகழ்ந்துரைத்தார். மறுநாள் அவருக்குப் பார்வை திரும்பியது. எதிரிகள் அதை சூனியம் என்று குற்றம் சாட்டினர். இவரையும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விலைக்கு வாங்கி எதிரிகளிடமிருந்து விடுவித்தார்.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் விடுவிக்கப்பட்ட மற்றும் சிலர்: உம்மு உனைஸ், நஹ்தியா, நஹ்தியாவின் மகள், உம்மு பிலால், ஹமாமா ஆகியோர்.

இவர்களில் பெரும்பாலானோர் குறைஷிகளால் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விடுவித்தார்கள்.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தந்தை அபூகுஹாஃபா தனது மகனிடம் “பலவீனமான மற்றும் ஏழைகளான விசுவாசிகளை விடுவிப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? ஆரோக்கியமானவர்களை விடுவித்தால் உங்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பாவது கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.

மகன் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள். “வாப்பா நான் எனது சொந்த நலனுக்காக இவர்களை விடுவிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற மட்டுமே இதைச் செய்கின்றேன்”

இச்செயலைப் போற்றும் வகையில் அல்குர்ஆனின் அல்லைல் அத்தியாயத்தின் ஐந்து முதற் கொண்டுள்ள வசனங்கள் அருளப்பட்டன.

மக்காவில் விசுவாசிகளின் வாழ்க்கை கடினமாகிவிட்டது. எங்கு திரும்பினாலும் துன்புறுத்தல்கள், சித்திரவதைகள். ஏழைகள் படும் பாட்டைக் கண்டு கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலங்கினார்கள். இதற்கான தீர்வை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடிவுக்காகக் காத்திருந்தார்கள். சத்திய விசுவாசிகளை அவ்வப்போது ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு அவர்களிடம் “நீங்கள் எத்தியோப்பியாவுக்குப் புலம் பெயர்ந்து செல்லுங்கள். அது சத்திய பூமி. அதன் ஆட்சியாளர் நஜ்ஜாஷி நீதிமான். அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அல்லாஹ் உங்களுக்குத் தீர்வு தரும் வரை அங்கேயே இருங்கள்” என்று கூறினார்கள் காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஜல்லம் அவர்கள்.

இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் முதல் புலம் பெயர்தல் நிகழ்ந்தது. நபித்துவம் அறிவிக்கப்பட்ட ஐந்தாம் ஆண்டு ரஜப் மாதத்தில் இந்த வெளியேற்றம் நடந்தது. பன்னிரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றனர்..

முதல் ஹிஜ்ரத் சென்றவர்களின் பெயர்கள் பின் வருமாறு: உஸ்மான் பின் அஃப்பான் 2. உஸ்மான் அவர்களின் மனைவி ருகிய்யா (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள்) 3. அபூஹுதைஃபா பின் உத்பா 4. மனைவி சஹ்லா பின்த் சுஹைல் 5. ஸுபைர் பின் அல்அவ்வாம் 6. முஸ்அப் பின் உமைர் 7. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் 8. உஸ்மான் பின் மள்வூன் 9. அபூஸப்ரா பின் அபூரஹம் 10. ஹாத்தப் பின் அம்ர் 11. சுஹைல் பின் பைளா 12. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் 13. அபூஸலமா பின் அப்துல் அஸத் 14. அபூஸலமாவின் மனைவி உம்மு ஸலமா பின்த் அபீஉமைய்யா 15. ஆமிர் பின் ரபிஆ 16. ஆமிரின் மனைவி லைலா பின்த் அபீஹஸ்மா (ரழியல்லாஹு அன்ஹும்)

அபூஹஸ்மாவின் மகள் லைலா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள் “நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய சமயத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமுக்கு மிகுந்த விரோதியாக இருந்தார்கள். நாங்கள் நாடு துறந்துச் செல்ல ஒட்டகத்தின் மீது ஏறியபோது, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் கேட்டார்கள் “உம்மு அப்தில்லா எங்கே செல்கிறீர்கள்”?

நான் சொன்னேன் “நாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால் எங்களை நீங்கள் துன்புறுத்துகின்றீர்கள். எனவே நாங்கள் துன்புறுத்தப்படாத ஒரு நாட்டைத் தேடிச் செல்கின்றோம்.

அப்போது “அல்லாஹ் உங்களுடன் இருக்கட்டும் என்று கூறினார்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இவ்விவரத்தை என் கணவரிடம் கூறிவிட்டு ‘உமருக்கு ஏதோ மனஸ்தாபம் இருப்பது போல் தோன்றுகிறது’ என்றும் சொன்னேன்.

நான் சொன்னதைக் கேட்ட என் கணவர் “அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறுவார் என நினைக்கிறீர்களா? உமரின் கழுதை முஸ்லிமாக மாறினாலும் உமர் முஸ்லிமாக மாட்டார்” என்று கூறினார்.

Mahabba Campaign Part-84/365

அபூஹஸ்மா அவர்களின் மகள் லைலா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர் ஆமிர் பின் ரபீஆ அவர்களின் கருத்து மட்டுமல்ல. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி நன்கறிந்த அனைவரின் கருத்தும் அதுவே.

ஆனால் முஸ்லிம்கள் எத்தியோப்பியாவுக்கு புலம் பெயர்ந்த உடனேயே உமர் பின் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு இஸ்லாமை மனமுவந்து ஏற்றுக்கொண்ட காட்சியை மக்கா நகரம் கண்டது.

இஸ்லாமைத் தழுவிய மொத்த நபர்களில் நாற்பதாவது நபர் உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆவார்கள் எனவும், ஆண்களில் நாற்பதாவது நபராவார்கள் என்றும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன,

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட சந்தர்ப்பம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு அறிவிப்பைப் பின்வருமாறு வாசிக்கலாம். தமது உதவியாளர் அஸ்லம் அவர்களிடம் ‘நான் இஸ்லாமிற்கு மாறியதைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?’ என்று கேட்க, அஸ்லம், ‘ஆம், சொல்லுங்கள்’ என்றார்.

“ஒரு நாள் நான் அபூஜஹ்ல் மற்றும் ஷைபா ஆகியோருடன் இருந்தேன். அப்போது அபூஜஹ்ல் ‘குரைஷிகளே, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் கடவுள்களை நிராகரிக்கிறார்கள். நம்முடைய சகிப்புத்தன்மையை முட்டாள்தனமாகப் பார்க்கிறார்கள். நம் முன்னோர்களை நரக வாசிகள் என்று கூறுகிறார்கள். எனவே யாராவது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்தால் அவனுக்கு நூறு கருப்பு வெள்ளை ஒட்டகங்களையும், ஆயிரம் ஊகியா வெள்ளியையும் கொடுப்பேன்’ என்றான்.

உருவிய வாளுடன் நான் புறப்பட்டேன். வழியில் மக்கள் கூடி நிற்பதைக் கண்டேன். அவர்கள் ஒரு மிருகத்தை அறுக்கப் போகிறார்கள். சிறிது நேரம் அதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது கூட்டத்தின் நடுவிலிருந்து வந்த ஒரு செய்தியைக் கேட்டேன். ‘அல்லாஹ்விடம் அழைக்கும் இறையச்சமுள்ள மனிதரைக் கவனியுங்கள்’ என்பது அந்தச் செய்தியின் உள்ளடக்கம். இது எனக்கான செய்தி என்று நினைத்தேன்!

பின்னர் நான் அங்கிருந்து நகர்ந்துச் சென்றேன். அப்போது ஒரு ஆட்டு மந்தையைக் கண்டேன். அங்கிருந்தும் ஒரு கவிதைச் செய்தியைக் கேட்டேன். அதன் கருத்தும் ‘ஏகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்’ என்பதுதான்.
‘தயக்கம் ஏதுமின்றி இஸ்லாமுக்கு வர வேண்டும்’ என்ற கருத்துடன் அந்தக் கவிதை முடிந்தது. இதுவும் என்னைத்தான் குறி வைக்கிறது என்று எண்ணினேன்.”

மற்றொரு அறிவிப்பு கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவிய வாளுடன் சென்றுக் கொண்டிருந்தார்கள். வழியில் நுஐம் பின் அப்துல்லாஹ் அன்னஹ்ஹாம் அவர்களைச் சந்தித்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டு அதை ரகசியமாக வைத்திருந்த நுஐம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘எங்கே போகிறீர்கள்?’ என்று வினவினார்கள்

உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். ‘நான் அவரிடம் அந்த ‘ஸாபிஈ’ அல்லது நபியைத் தேடிச் செல்கின்றேன். நமது கடவுள்களை நிராகரிக்கின்ற, நமது மதத்தை விமர்சிக்கின்ற நபி அவர்களைக் கொலை செய்யப் போகின்றேன் என்று கூறினேன்.

என்னிடம் நுஐம் சொன்னார் ‘நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். இப்படி ஒரு கொலையை செய்தால், அப்துமனாஃப் குடும்பத்தினர் உங்களை இந்த பூமியில் நடமாட அனுமதிப்பார்களா? முதலில் உங்கள் வீட்டை சரி செய்யுங்கள்!’

‘என் வீட்டிற்கு என்ன?’ என்று கேட்டேன். நுஐம் கூறினார், உங்களுடைய மாமாவின் மகனும், சகோதரியின் கணவருமான ஸயீத் பின் ஸெய்தும், உங்களின் சகோதரி ஃபாத்திமாவும் முஸ்லிம்களாகி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுகிறார்கள். முதலில் அவர்களை சரியாக்குங்கள்!’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து உமர் அவர்களைத் திசை திருப்புவதற்காகவே நுஐம் இவ்வாறு கூறினார். உடனே நேராக சகோதரி வீட்டுக்குச் சென்றார்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அன்றைய நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நடைமுறையைக் கடைபிடித்தார்கள். ஏழைகளில் யாராவது ஈமான் கொண்டால், அவர்களை வசதிபடைத்தவர்களுடன் தொடர்புபடுத்துவார்கள். அவர்கள் ஏழைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பார்கள்.

இவ்வாறான இரண்டு முஸ்லிம்களின் பொறுப்பு ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வசம் இருந்தது. அந்த இருவர்களில் ஒருவர் கப்பாப் பின் அல்அரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு கோபத்துடன் தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார்கள். உள்ளே இருந்து குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டது.

திடீரென்று கதவு திறக்கப்பட்டதும் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு வீட்டில் எங்கோ ஒளிந்து கொண்டார்கள். குர்ஆனின் தாஹா அத்தியாயம் எழுதப்பட்ட பலகையை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மறைத்து வைத்தார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள் ‘நான் கேட்டுக் கொண்டு வந்தது என்ன மந்திரம்?’

‘நீங்கள் என்ன கேட்டீர்கள்? ஒன்றுமில்லையே!’

‘ஒன்றுமில்லையா? நீங்கள் இருவரும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை நான் அறிந்தேன்’ என்று கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைப் பிடித்தார்கள்.

Mahabba Campaign Part-85/365

கணவர் அடிபடுவதைக் கண்ட ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் குறக்கே பாய்ந்து சகோதரர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தடுத்து நிறுத்தினார். அதனால் கோபமுற்ற உமர் அவர்கள் சகோதரியை அடித்து காயப்படுத்தினார்கள். இரத்தம் வழிந்தோடியது.

ஃபாத்திமா மற்றும் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உறுதியான குரலில் சேர்ந்து சொன்னார்கள். ”நாங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டோம். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். நாங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புகிறோம்.”

சகோதரியின் முகத்தில் ரத்தம் வழிவதைப் பார்த்த உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனவேதனை ஏற்பட்டது. “நீங்கள் ஓதிக் கொண்டிருந்த பலகை எங்கே? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கற்பிக்கிறார்கள்? என்பதை படித்து பார்க்க விரும்புகின்றேன்” என்றார்கள் மென்மையாக! உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள்.

“நீங்கள் அதை நாசப்படுத்தி விடுவீர்கள் என்பதால் உங்களிடம் தர நாங்கள் பயப்படுகிறோம்” என்றார் சகோதரி ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.

“பயப்படாதீர்கள், தெய்வங்கள் சாட்சியாக நான் அதை உங்களிடம் திருப்பித் தந்து விடுவேன்” என்றார்கள் உமர்ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

மனமாற்றத்தைப் புரிந்துக் கொண்ட சகோதரி சொன்னார்கள் ”சுத்தமாய் வந்தால்தான் தர முடியும். தூய்மையுடன் மட்டுமே தொட வேண்டிய வசனங்கள் இவை”.

சகோதரியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்துவிட்டு சுத்தமாக வந்தார்கள். திருக்குர்ஆன் எழுதப்பட்ட பலகையைக் கொடுத்தார்கள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாஹா அத்தியாயத்தின் முதல் பகுதியை மனமொப்பி வாசித்தார்கள். எவ்வளவு அழகான வார்த்தைகள்! எவ்வளவு சிறப்பான இறைநூல்!

மற்றொரு அறிவிப்பின்படி, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்-ஹதீத் அத்தியாயத்தின் ஏழாவது வசனம் வரை ஓதினார்கள். அதன் கருத்துச் சுருக்கம் பின்வருமாறு. “நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்புங்கள். மேலும் அவன் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளானோ அவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்.”

ஓதி முடித்ததும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உரக்க அறிவித்தார்கள் “அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்…… அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்… ”

இதைக் கேட்டதும், மறைந்திருந்த கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியே வந்தார்கள். “உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே! நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரத்தியேகமான துஆவை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நேற்று நபி பெருமான் அவர்கள் ‘யா அல்லாஹ் அபுல்ஹகம் (அபூஜஹ்ல்) அல்லது உமர் பின் அல்கத்தாப் ஆகிய இருவரில் ஒருவர் மூலம் இஸ்லாமை வலுப்படுத்துவாயாக!’ என்று துஆச் செய்வதைக் கேட்டேன். அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத்தான்” என்று கூறினார்கள்.

வேறு ஒரு அறிவிப்பு கீழ்க்கண்டவாறு கூறுகிறது “கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களை நேரில் சந்தித்து எனது இஸ்லாமை அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்கள்.

கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் “நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களுடன் ஸஃபா மலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருக்கிறார்கள்”.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாருல் அர்கமுக்குச் சென்று வீட்டுக் கதவைத் தட்டினார்கள். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிற்பதைக் கண்டு, ஓடிச் சென்று ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வாசலில் உமர் அவர்கள் உருவிய வாளுடன் நிற்கிறார்கள்’ என்றார்.

பயந்து போன ஸஹாபாக்களிடம் அங்கிருந்த ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நல்ல எண்ணத்துடன் அவர் வந்தால் வரவேற்கலாம். தீய நோக்கத்துடன் வந்திருந்தால் அவருடைய வாளாலேயே அவரை அழிப்போம்’ என்று கூறி தைரியப்படுத்தினார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “கதவைத் திற.ந்து விடுங்கள். அவர் உள்ளே வரட்டும். அல்லாஹ் அவருக்கு நல்லதை விதித்திருந்தால் அவர் நேர்வழி பெறுவார்”

கதவு திறக்கப்பட்டது. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பேர் இருபுறமும் நின்று அவர்களது கைகளை இறுகப் பற்றிப் பிடித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் கொண்டு வந்தனர்.

நபியவர்களின் அறைக்குள் நுழைந்த உமர் அவர்களை விட்டுவிடச் சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு “உமரே! நீங்கள் வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்க, “அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வையும், அவனுடைய திருத்தூதரையும், அவன் கட்டளையிட்டதையும் நம்பி ஈமான் கொள்வதற்காக வந்துள்ளேன்” எற்றுரைத்தார்கள்.

உடனே நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹு அக்பர்……. என தக்பீர் முழக்கினார்கள். அதன் மூலம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிமாகி விட்டார்கள் என்பதை உணர்ந்த அனைவரும் சேர்ந்து தக்பீர் முழக்கினர். அந்த ஒலி மக்கத்துத் தெருக்களில் எதிரொலித்தது.

அத்துடன் மக்காவின் தீரர்களான உமர் மற்றும் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் எங்களுடன் இருக்கிறார்கள் என்ற தைரியம் சத்திய விசுவாசிகளுக்கு வந்தது.

Leave a Reply