The biography of Prophet Muhammad – Month 2

Admin August 26, 2022 No Comments

The biography of Prophet Muhammad – Month 2

Mahabba Campaign Part-31/365

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்தாவது குழந்தை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர்கள் மகள்களில் இளையவர் மற்றும் மக்களில் மிகப் பிரபலமானவர். அன்னை ஃபாத்திமா நாயகி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முப்பத்தைந்தாவது வயதில் பிறந்தார். குறைஷிகள் கஃபாவைப் புனரமைத்துக் கொண்டிருந்த நேரமது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்போது வயது நாற்பத்தொன்று என்ற கருத்தும் உண்டு.

அன்னை ஃபாத்திமா நாயகி அவர்கள் தம் தந்தைதயவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்டசாலி மகள் ஆவார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகளிடம் அனைத்து இரகசியங்களையும், துயரங்களையும் பகிர்ந்துக் கொள்வார்கள். சில நேரங்களில் தாயாரைப் போல தலையிட்டு உரையாடுவார்கள். இதனால் அவர்கள் “உம்மு அபீஹா” – சொந்தத் தந்தையின் தாய் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்கள். ஃபாத்திமா என் ஈரல் துண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள்.

நபித்துவத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட சோதனைகளை நேரில் கண்டு, அனுபவித்து வளர்ந்த அன்னை அவர்கள், தமது தந்தையார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் மகன் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்தார்கள். ஹஸன், ஹுஸைன், முஹ்ஸின் என்ற மூன்று ஆண் குழந்தைகளும் ஜெய்னப், உம்முகுல்தூம் என்ற இரண்டு பெண் குழந்தைகளுமாக ஐந்து குழந்தைகள் அலீ – ஃபாத்திமா தம்பதியினருக்குப் பிறந்தன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அன்பு மகள் ஃபாத்திமாவை “சுவனத்து ராணி” என்று அறிமுகப்படுத்தினார்கள். மேலும் பல சிறப்புப் பெயர்களாலும் அழைத்தார்கள். பத்தூல், ஸஹ்ரா என்பவை அவற்றில் பிரபலமானவை. மிக அதிகமான முஸ்லிம்கள் தம் பெண் குழந்தைகளுக்கு இடும் பெயர் ஃபாத்திமா என்பதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மவ்த்தாகி ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஹிஜ்ரி பதினொன்றாம் ஆண்டில் அன்னை அவர்களும் இறையடி சேர்ந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பப் பரம்பரை அன்னை ஃபாத்திமா நாயகி வழியாகத் தொடர்கிறது.

மகன் அப்துல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆறாவது குழந்தை. நபித்துவத்துக்குப் பிறகு இவர் பிறந்தார். மகன் காஸிம் அவர்களைப் போலவே மகன் அப்துல்லாஹ்வும் இளம் பிராயத்திலேயே மரணமடைந்து விட்டார்கள். அப்துல்லாஹ் அவர்களுக்கு தய்யிப், தாஹிர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. தாஹிர், தய்யிப் என்ற பெயர்கள் வேறு இரண்டு ஆண் மக்களுடையது என்பதை முன்னணி வரலாற்றாசிரியர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரேபியாவில் அக்காலத்தில் பிறந்த குழந்தைகளை பாலூட்டி வளர்ப்பதற்காக வளர்ப்புத் தாயார்களிடம் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மனைவி அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் அன்புச் செல்வங்களுக்குத் தாமே பாலூட்டி வளர்த்தார்கள்.

ஒரு முறை அன்னை அவர்கள் தமது குழந்தையின் மரணம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “மார்பில் பால் சுரக்கிறது, குழந்தை இருந்திருந்தால் கொடுத்திருப்பேனே!” என தமது துயரத்தைப் பகிர்ந்துக் கொண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சுவனப் பெண்கள் மகனுக்கு சுவனத்தில் பாலூட்டுகின்றனர். மகன் பால் உறிஞ்சும் சப்தம் கேட்கவில்லையா?” என்று கூறி ஆறுதல்படுத்தினார்கள்.

ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண் குழந்தைகளுக்கு இரண்டு ஆடுகள் வீதமும், பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆடு வீதமும் அகீகா கொடுப்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆண் மக்கள் இளம் பிராயத்தில் மரணமடைந்தபோது “பரம்பரை முறிந்தவர்” என்று சிலர் குற்றஞ்சாட்டினர். இவ்வாறு குற்றஞ்சாட்டியவர்களில் முக்கியமானவர் குறைஷிப் பிரமுகரான ஆஸ் பின் வாயில் என்பவராவார். பரிகாசம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தது அல்லாஹ்வின் திருமறை அல்குர்ஆன். “நபியே! தங்களுக்கு ஏராளமான அருட்கொடைகளை நாம் வழங்கியுள்ளோம். தாங்கள் தங்களுடைய இரட்சகனை தொழுங்கள். அவனுக்காக பலியிடுங்கள். நிச்சயமாக தங்களைப் பரிகசிப்பவர்கள்தான வாரிசற்றவர்கள்” புனித குர்ஆன் நூற்றி இரண்டாவது அத்தியாயமான அல்கவ்தரின் கருத்துகள் இவை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இலட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் உலகில் தெளிவான பரம்பரை வரலாற்றுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். உலகில் வேறு எவரும் இவ்வளவு துல்லியமான குடும்ப பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பெற்றிருக்க முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா ஆகியோரின் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு புதிய விருந்தினர் வந்தார்.

Mahabba Campaign Part-32/365

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா ஆகியோரின் குடும்பத்தில் புதிதாக ஒருவர் வந்தார். அவர் வேறு யாருமல்ல! உக்காழ் சந்தையிலிருந்து வாங்கிய ஜெய்த் எனும் அடிமைப் பாலகர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பண்பையும், வாழ்க்கையையும் விளக்கும் மற்றொரு நிகழ்வும் இங்கே உள்ளது. ஜெய்த் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி அவர்களின் வாழ்வில் எப்படி வந்தார்? என்று பார்ப்போம்.

ஹாரிஸா அரேபியாவின் புகழ்பெற்ற கல்ப் கோத்திரத்தைச் சார்ந்த ஷுராஹீலின் மகன். அவரது மனைவி ஸுஅதா, தய்யி கோத்திரத்தைச் சார்ந்த சஅலபாவின் மகள். ஹாரிஸா-ஸுஅதா தம்பதியினரின் அன்பு மகன் ஜெய்த். அவர்களுடையது பணக்காரக் குடும்பம். ஒரு நாள் ஸுஅதா தனது மாமா வீட்டுக்கு மகன் ஜெய்துடன் சென்றார். வழியில் வைத்து பனூ கைன் பின் ஜஸ்ர் என்ற ஆயுதம் ஏந்திய கொள்ளையார்களால் ஸுஅதாவும், மகனும் பிடிக்கப்பட்டனர். தங்களை விடுவிக்க கொள்ளையர்களிடம் அவர்கள் கெஞ்சினர். ஸுஅதாவை விட்டு விட்டு ஜெய்தை அவர்கள் கொண்டு சென்றனர். ஜெய்தை அடிமைச் சந்தையில் விற்பனை செய்தல் அவர்கள் நோக்கம்.

அதிர்ஷ்டவசமாகத் தப்பிய சுதா வீட்டுக்கு வந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். ஹாரிஸாவும், சகோதரர் கஅபும் எல்லா இடங்களிலும் ஜெய்தைத் தேடினர். வலிமை மிக்க கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரிஸா மகனைக் கண்டுபிடிக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தினார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஜெய்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மகனை இழந்து ஹாரிஸா தவித்தார். என்றாவது ஒரு நாள் மகனைக் கண்டுபிடிப்பேன் என்று சபதமேற்றார். என்ன விலை கொடுத்தும் ஜெய்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். தன் மகன் கிடைப்பது வரை வாழ்க்கையை அனுபவிப்பதை தவிர்ப்பதாக சபதம் செய்தார். அவரது கோத்திரமும் அவரோடு இணைந்து தொடர்ந்து தேடுதல் நடத்திக் கொண்டிருந்தது. தனது அன்பு மகன் உயிரோடு இருக்கின்றாரா? இறந்து விட்டாரா? என்ற எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர் மனமுடைந்து போனார். ஹாரிஸா தமது மகனின் இழப்பில் தவித்து கவிதைகள் இயற்றிப் பாடி நடந்தார். இந்நிகழ்வு ஒரு மகன் மீது தந்தை கொண்டிருந்த அன்புக்கோர் உதாரணமாக அமைந்துள்ளது. ஜெய்த் காணாமல் போனதும், ஹாரிஸாவின் கவிதைகளும் இன்றும் வாசிக்கப்படுகின்றன.

கொள்ளையர்கள் ஜெய்தை அடிமையாக்கி வேற்று நாட்டுக்கு நாடு கடத்தினர். மக்காவின் புகழ்பெற்ற உக்காழ் சந்தைக்கு விற்கப்படும் அடிமையாக ஜெய்த் வந்து சேர்ந்தார்.

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதோ ஒரு நோக்கத்துக்காக உக்காழ் சந்தைக்கு வந்தார்கள். அடிமைகள் மத்தியில் வசீகர முகச் சாயலில் ஜெய்தைக் கண்டார்கள். ஜெய்தின் சாயலும், பாவனையும் நபி அவர்களைக் கவர்ந்தது. வீட்டுக்கு வந்து மனைவி அன்னை கதீஜா நாயகி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். “அவரை வாங்கலாம், மகனாக வளர்க்கலாம், அவருக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது” என்றார்கள். அன்னை அவர்கள் சம்மதித்தார்கள். கணவரின் ஆவல்கள்தான் அன்னையவர்களுக்கு எப்போதும் முக்கியம் அல்லவா!

அன்னை கதீஜா நாயகி அவர்கள் தமது சகோதரர் ஹிஸாமின் மகன் ஹக்கீமை அழைத்து ஜெய்தை வாங்கி வர பணம் கொடுத்து அனுப்பினார்கள்.

சந்தைக்கு வந்த ஹக்கீம் நானூறு திர்ஹம்கள் கொடுத்து ஜெய்தை வாங்கி, அன்னையவர்களிடம் ஒப்படைத்தார். நபித்துவத்துக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிகழ்வு நடைபெற்றது என அலி அல்குஸாஇ அறிவிக்கிறார்கள். அப்போது ஜெய்தின் வயது எட்டு. அப்படியானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்போது வயது இருபத்து எட்டு ஆகும்.
அதுமுதல் ஜெய்தின் எஜமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எஜமானி அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். ஜெய்த் புதிய சூழலுக்கு விரைவாகத் திரும்பினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நல்லதொரு பரிசைக் கொடுக்க முடிந்ததில் அன்னையவர்கள் அகமகிழ்ந்தார்கள். நல்லதொரு ஊழியரும், அன்பான மகனும் கிடைத்ததில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

தனது உண்மையான பெற்றோரைவிட அதிகமாக நேசிக்கும் ஒரு தாய், தந்தையைப் பெற்றதால் ஜெய்தும் மிக்க ஆனந்தம் கொண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனான தொடர்ச்சியான அருகாமை ஜெய்தின் இதயத்தில் “என் எஜமானர் சாதரண மனிதர் அல்ல, அவர்களுக்கு ஏதோ பெரிய விஷயங்கள் வர இருக்கின்றன” என்ற உணர்தல்களை ஏற்படுத்தியது.

Mahabba Campaign Part-33/365

அப்துல் முத்தலிபின் பேரரான அல்அமீன் அவர்களின் அடிமைப் பணியாளர் ஜெய்துக்கு மக்கா நகர மக்களும், நகர மக்களுக்கு ஜெய்தும் நன்கு அறிமுகமாயினர். குடும்பத்தைப் பிரிந்த கவலை ஜெய்தை அலட்டவில்லை. நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருப்பதில் ஜெய்துக்குப் பெருத்த மகிழ்ச்சி. தாய், தந்தை, சகோதரர்கள் என அனைவரும் இங்கே அவருக்குக் கிடைத்துள்ளனர். மேலும் அசாதாரணமான பல அனுக்கிரகங்கள் தமக்குக் கிடைக்கிவிருக்கிறது என்று அவரது உள்ளுணர்வு கூறியது.

ஹஜ் சீசன் வந்தது. பல நாடுகளிலிருந்து மக்கள் மக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். வந்தவர்களில் கல்ப் கோத்திரத்தினரும் இருந்தனர். அவர்களில் சிலர் தற்செயலாக ஜெய்தை சந்தித்தனர். ஜெய்தும் தன் கோத்திர மக்களைப் புரிந்துக் கொண்டார். அவர்கள் புதிய எஜமானர் மற்றும் வீட்டைக் குறித்து ஜெய்திடம் விசாரித்துத் தெரிந்துக் கொண்டனர். எஜமானர் வீட்டில் தாம் மிகுந்த சந்தோஷமாகவும், சுகமாகவும் இருப்பதாகத் தம் குடும்பத்தாரிடம் தெரிவிக்கக் கேட்டுக் கொண்ட ஜெய்த், கவிதை ஒன்றை எழுதி அவர்களிடம் கொடுத்து தமது வீட்டாரிடம் ஒப்படைக்கக் கூறி விட்டு தனது உரிமையாளரான நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார் ஸெய்த்.

கல்ப் கோத்திரத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். செய்தி அறிந்தால் ஹாரிஸாவும், குடும்பத்தினரும் ஆனந்தத்தில் திளைப்பர் என்று கருதிய கல்ப் கோத்திர ஹஜ் பயணிகள் ஹஜ் முடிந்ததும் விரைவாகத் திரும்பிச் சென்று அந்தக் கவிதையை ஜெய்தின் தந்தை ஹாரிஸா அவர்களிடம் ஒப்படைத்தனர். தமது மகன் உயிருடன் இருப்பதை அறிந்து ஹாரிஸாவும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். தனது மகனை அடிமையாக விட்டு வைக்கக் கூடாது, விரைவில் அவரை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஹாரிஸா தீர்மானித்தார். ஹாரிஸா தனது சகோதரர் கஅபுடன் ஒரு பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மக்காவுக்குப் பயணமானார்.

ஜெய்தின் உரிமையாளர் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து ஹாரிஸா கூறினார் “மரியாதைக்குரியவரே! அப்துல் முத்தலிப் மற்றும் ஹாஷிமின் பேரரே! தாங்கள் இந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். குறைஷிகள் இறைவனின் விருந்தினர்ளை ஏற்று உபசரிப்பவர்கள். இறைவனுடைய வீட்டின் பாதுகாவலர்கள். தாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்கள், அடிமைகளை விடுவிப்பவர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களுடைய மகனை விடுவிக்க நாங்கள் இங்கே வந்துள்ளோம். அவர் இங்கே தங்களிடம் இருக்கிறார். தாங்கள் விரும்பும் அளவுக்கு மீட்புத் தொகை வழங்கவும் தயாராக உள்ளோம், எங்களுக்குக் கருணை காட்டுங்கள்!”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? உங்களுடைய எந்த மகன் எங்களிடத்தில் இருக்கிறார்?” என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

“தங்களுடைய வேலைக்காரர் ஜெய்த் என் மகன், நான் அவருடைய தந்தை ஹாரிஸா, இவர் என் சகோதரர் கஅப்” என்று விளக்கினார் ஹாரிஸா.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மரியாதையுடன் நடந்துக் கொண்டார்கள். “ஜெய்த் உங்களுடைய மகனாக இருந்தால் அவரை நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். தாங்கள் ஜெய்தின் தந்தையாக இருந்தால் மீட்புத் தொகை எதுவும் தராமலேயே அவரை அழைத்துச் செல்லுங்கள், அவரை அழைத்து விசாரிக்கின்றேன். அவர் உங்களுடன் வர தயாராக இருந்தால் அழைத்துச் செல்லுங்கள். அவர் என்னுடன் இருக்க விரும்பினால் வற்புறுத்தி பலவந்தவமாக அவரை அழைத்துச் செல்லக் கூடாது” என்றார்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஹாரிஸா ஒப்புக் கொண்டார். ஜெய்த் அழைத்து வரப்பட்டார். அவர் தனது தந்தையையும், சிறிய தந்தையையம் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். ஹாரிஸாவும் மகிழ்ச்சியடைந்தார். சந்திக்கவே முடியாது என்று கருதியிருந்த அன்பு மகன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இதோ கண் முன்னே நிற்கிறார். நம்ப முடியாததொரு மறு சந்திப்பு!

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெய்திடம் “மகனே! இவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.

“இவர் எனது தந்தை ஹாரிஸா பின் ஷராஹீல், அவர் எனது சிறிய தந்தை கஅப்” என்றார்கள் ஜெய்த்.

“மகனே! இவர்கள் தங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றனர். தாங்கள் இவர்களுடன் செல்கின்றீர்களா? அல்லது எங்களுடன் இங்கேயே இருக்கின்றீர்களா? விருப்பம்போல தீர்மானிக்கலாம் என்றார்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

Mahabba Campaign Part-34/365

யோசிக்க ஒன்றுமில்லை, ஜெய்த் சொன்னார் “நான் இங்கேயே இருக்கின்றேன். தங்களை விட்டு விட்டு நான் எங்கும் போகவில்லை. நீங்கள்தான் எனக்கு எல்லாம். நீங்கள்தான எனக்கு தாயும், தந்தையும்!”

ஹாரிஸாவும், சகோதரரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர். இப்படியொரு பதிலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. “மகனே! தாயையும், தந்தையையும் விட்டு விட்டு அடிமையாக வாழ விரும்புகிறீர்களா?” உங்கள் வீடு மற்றும் குடும்பத்தை விட அடிமைத்தனத்தைத் தேர்ந்தெடுக்கின்றீர்களா? என்ன ஆச்சரியம்! என்று கேட்டார் ஹாரிஸா.

“ஆம்! என் தந்தையே! இவர்களை விட்டு ஒருபோதும் நான் வரமாட்டேன். எதிர்காலத்தில் இந்த மாபெரும் மனிதரிடமிருந்து பல அற்புதங்களை எதிர்பார்க்கின்றேன்” என்று பதிலுரைத்தார் ஜெய்த்.

இவ்வளவு தூரம் நேசிக்கும் ஒருவரிடமிருந்து பிரித்தெடுத்து என் மகனை எப்படி நான் அழைத்துச் செல்வது? ஹாரிஸா சிந்தித்தார்.

ஜெய்தின் நம்பிக்கையையும், கீழ்படிதலையும் மீண்டும் புரிந்துக் கொண்ட நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெய்தின் கை பிடித்து புனித கஃபாவின் முற்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஹாரிஸாவும், கஅபும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அங்கே இருந்த குறைஷித் தலைவர்கள் முன்னிலையில் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். “என் அன்பு மக்களே! இவர் ஹாரிஸாவின் மகன் ஜெய்த். இவரை எனது வளர்ப்பு மகனாக அறிவிக்கின்றேன். இவர் எனக்கு வாரிசாவார். என்னுடைய சொத்தில் இவரும், இவருடைய சொத்தில் நானும் வாரிசுரிமை பெற்றவர்களாக இருப்போம்.”

அன்றைய நாட்களில் முக்கிய அறிவிப்புகளை கஃபாவின் முற்றத்தில் வைத்து வெளியிடுவதும், மக்கத்துத் தலைவர்கள் கஃபாவிவின் முற்றத்தில் கூடி விஷயங்களை விவாதித்து முடிவெடுப்பதும் வழக்கம்.

ஜெய்த் இனி அடிமை இல்லை, அல்அமீன் அவர்களின் வளர்ப்பு மகன் என்று ஹாரிஸாவும், கஅபும் நிம்மதியடைந்தனர். எப்படியானாலும் தம் மகனை அல்அமீன் அவர்களிடமிருந்து பிரிக்க முடியாது. அவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் அன்பின் ஆழத்தை ஹாரிஸாவம், கஅபும் உணர்ந்தனர். அவர்கள் ஜெய்தை மக்காவில் விட்டு விட்டு ஊர் திரும்பினர்.

மகனைக் கூட்டிக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற ஆறுதலுடன் ஊர் சென்றடைந்து, குடும்பத்தார்களிடம் தகவலைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் ஜெய்தின் குடும்பத்தினர் அடிக்கடி மக்கா வந்து அவரைச் சந்தித்துச் சென்றனர்.

ஜெய்த் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்த நல்லதொரு சாட்சியாக வரலாற்றில் ஜெய்த் இடம் பிடித்தார். நுபுவ்வத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஜெய்த் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். தந்தை ஹாரிஸாவும் இஸ்லாமைத் தழுவினார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிழல்போல் பின்தொடர்ந்த ஜெய்த் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள். புனித குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரேயொரு நபித்தோழர் ஜெய்த் என்ற புகழையும் பெற்றார்கள்.

நுபுவ்வத்துக்கு முன்னரும், பின்னரும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த சில அபூர்வ மனிதர்களில் ஜெய்தும் ஒருவர். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணம், வாழ்க்கை, நடத்தை பற்றிய செய்திகளை அறியத் தரும் முக்கியமான நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவாகவும் ஜெய்த் திகழ்ந்தார்கள். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையின் ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களிலும், சோதனை நிறைந்த நாட்களிலும் ஜெய்த் ஒரு சாட்சியாகவும், முன்னிலையாகவும் இருந்தார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று வாசிப்பில் இந்த அதிர்ஷ்டசாலி பல முறை வருவார்கள். குடும்ப வாழ்க்கையின் அழகிலும், போர் களத்தின் துணிச்சலிலும் வரலாற்றில் அவருக்கென ஓர் தனி இடம் உண்டு. ஒரு ஆளுமையின் மகத்துவத்தைக் குறிக்கும் இத்தகைய நிகழ்வு உலக வரலாற்றில் அரிதாகவே இருக்கும்.

ஜெய்த் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எத்தகைய அந்தஸ்துகளை பெற்றார்கள் என்பது குறித்து பின்னர் இன்ஷா அல்லாஹ் வாசிக்கலாம்.

இப்போது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொதுவாழ்க்கைத் தலையீட்டின் மற்றொரு அத்தியாயத்திற்குச் செல்வோம்.

Mahabba Campaign Part-35/365

 

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் அனைவராலும் மதிக்கத்தக்க, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு இளைஞராக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது மதிப்பை, நடுநிலைத் தன்மையை நிரூபிக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும். அவற்றில் மிக முக்கியமானது புனிதமிகு கஃபத்துல்லாஹ்வை புனர் நிர்மாணம் செய்த நிகழ்வு.

கஃபத்துல்லாஹ்வின் முற்றத்தில் சமையல் அல்லது வேறு ஏதோவொரு தேவைக்காக பெண் ஒருவர் தீ மூட்டினார். அதிலிருந்து தீப்பொறியொன்று கஃபாவைப் போர்த்தி இருந்த கிஸ்வா — போர்வை மீது விழுந்து பற்றி எரிந்தது. இந்தத் தீ விபத்தில் கஃபாவின் கட்டமும் சேதமடைந்தது. இதனால் கஃபாவை புனர் நிர்மாணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கஃபா புனரமைப்புக்கு வேறு இரண்டு காரணங்களையும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
1. மலைகள் சூழ்ந்த தாழ்வான பகுதியில் கஃபா அமைந்துள்ளது. பலத்த மழை பெய்யும்போது கஃபாவை வெள்ளம் சூழும். இவ்வாறு பல முறை பெருமழை வெள்ளத்தில் சிக்கிய கஃபாவின் சுவர்கள் சிதிலமடைந்தன.

2. கஃபாவில் நடைபெற்ற கொள்ளை. கஃபாவின் உள்ளே ஒரு கிணற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன இரண்டு மான் சிற்பங்களையும், விலையுயர்ந்த ரத்தினங்களையும், விலைமதிப்பற்ற பொருட்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். பின்னர் குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த துவைக் என்பவரின் வீட்டிலிருந்து அவை மீட்கப்பட்டன. சில திருடர்கள் இவற்றை தனது வீட்டு வளாகத்தில் விட்டுச் சென்றதாக அவர் கூறினார். ஆனால் தீவிர விசாரணையில் துவைக்தான் உண்மையான கொள்ளைக்காரன் என்பது தெரிய வந்தது. அதனால் அவரது கையைத் துண்டித்துத் தண்டித்தனர். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமலிருக்க புனித கஃபாவை புனரமைப்பது அவசியமாயிற்று.

இந்த நேரத்தில் வேறொரு சாதகமான சூழ்நிலை உருவாயிற்று. ரோம் மன்னருக்குச் சொந்தமான கப்பலொன்று கற்கள், மரங்கள், இரும்பு ஆகிய மதிப்புமிக்க கட்டுமானப் பொருட்களுடன் எத்தியோப்பியா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. ஜித்தா அருகே கப்பல் வந்துக் கொண்டிருந்தபோது பலத்த புயல் வீச, கப்பல் ஜித்தா துறைமுகத்தில் நங்கூரமிட வேண்டியதாயிற்று. கட்டுமானப் பொருட்களுடன் பாகூம் என்ற கட்டுமானக் கலை வித்தகரும் கப்பலில் இருந்தார்.

சரக்குகளுடன் கப்பலொன்று ஜித்தா துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் செய்தியை குறைஷிகள் அறிந்தனர். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்து வலீத் இப்னு முகீரா தலைமையான குழுவொன்று துறைமுகத்துக்குச் சென்று கப்பல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது. கட்டுமானப் பொருட்களை விலைக்குத் தருவதாகவும், பாகூமின் ஒத்துழைப்பைத் வழங்குவதாகவும் கப்பல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

கஃபத்துல்லாஹ்வைப் புனரமைக்கத் தேவையான பொருட்கள் தயாராகி விட்டது. இனி கஃபாவின் சுவர்களை இடிக்க வேண்டும். ஆனால் அவர்களில் யாரும் இடிக்க முன் வரவில்லை. இறுதியாக ஒரு கல்லை மட்டும் பெயர்த்தெடுக்க வேண்டும், பின்னர் மூன்று நாட்களுக்கு கல்லைப் பெயர்த்தவருக்கு ஏதாவது தீங்கு நிகழ்கிறதா? என காத்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானித்தபடி கல்லை அகற்றினர். மூன்று நாட்கள் காத்திருந்தனர். இடித்தவருக்கு ஏதும் நிகழவில்லை. அதை நல்ல அறிகுறியாக எடுத்துக் கொண்டு கஃபாவின் சுவர்களை இடிக்க முடிவு செய்தனர்.

வலீத் இப்னு முகீரா, ஆயித் பின் அம்ர் அல்மக்ஸூமி ஆகியோர் தலைமையில் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடந்தன. அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஆய்த் சுவரிலிருந்து ஒரு கல்லைப் பெயர்த்தெடுத்தார். அந்தக் கல் அவரது கரத்திலிருந்து சுயமாக நழுவி முதலில் இருந்த இடத்தில் ஒட்டிக் கொண்டது.

அவர்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். இச்சம்பவம், நல்ல வழியில் சம்பாதித்த செல்வத்தை மட்டுமே கஃபாவின் புனரமைப்புக்குச் செலவழிக்க வேண்டும் என்பதற்காக இறைவனிடமிருந்து வந்த நினைவூட்டல். எனவே கொள்ளை, சூதாட்டம், விபச்சாரம் மூலம் பெறப்பட்ட செல்வத்தை செலவழிக்கக் கூடாது என்று தீர்மானித்து அறிவித்னர்.

இந்த முடிவின்படி நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கட்டிய அடித்தளம் முழுவதையும் கட்டுவதற்கான தூய சொத்து குறைஷிகளின் கைவசம் இருக்கவில்லை. எனவே புனித கஃபத்துல்லாஹ்வின் வடக்குப் பகுதியிலுள்ள அரை வட்டப் பகுதியை மட்டும் அடித்தளமாக வைத்து கட்டுமானத்தைத் தொடங்கினர்.

கஃபாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததன.

Mahabba Campaign Part-36/365

கஃபாவின் ஒவ்வொரு பகுதியின் கட்டுமானத்தையும் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒதுக்குவதென்ற தீர்மானத்தின்படி, கஃபாவின் நுழைவாயிலும், அதனுடன் சேர்ந்த பாகங்களின் கட்டுமானப் பொறுப்பு பனூ ஸஹ்ரா மற்றும் அப்து மனாஃப் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்தப் பகுதியின் கட்டுமானத்தில் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணியாற்றினார்கள்.

ஹஜருல் அஸ்வத் முதல் ருக்னுல் யமானி வரையிலான பகுதிக்கான கட்டுமானப் பொறுப்பு பனூ மக்ஸூம் குடும்பத்திற்கும், மேற்பகுதியின் கட்டுமானப் பொறுப்பு பனூ ஸஹ்ம் மற்றும் பனூ ஜுமஹ் குடும்பங்களுக்கும், ஹஜருல் அஸ்வத் பகுதியின் கட்டுமானப் பொறுப்பு பனூ அப்துத்தார், பனூ உஸ்ஸா, பனூ அஸத், பனூ அதிய்யி குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.

ரோமானிய கட்டடக் கலை சிற்பி பாகூம் மற்றும் காப்டிக் வம்சத்தைச் சார்ந்த ஒரு தச்சர் ஆகியோரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கஃபாவுக்குச் சற்று தொலைவில் உள்ள மலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் சுவர்கள் கட்டப்பட்டன. பிற்காலத்தில் அந்த மலை “ஜபல் கஃபா” என்று அழைக்கப்பட்டது.

கற்கள் சுமந்துச் சென்று கொடுத்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முக்கிய பணியாக இருந்தது. துணியை தோளில் மடித்து வைத்து கல் சுமப்பது பற்றிய விவாதம் இந்த நேரத்தில்தான் ஏற்பட்டது.

கஃபாவின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், கஃபாவின் தென்கிழக்கு மூலையில் இருந்த ஹஜருல் அஸ்வதின் மறு சீரமைப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ஒவ்வொரு குடும்பத்தினரும் தூய்மைக்குப் பெயர் பெற்ற அந்த சுவர்க்கக் கல்லை அதன் இடத்தில் நிறுவதை பெருமைக்குரிய செயலாகக் கருதினர். எனவே அந்த உரிமை தமக்கே வேண்டுமென வாதாடினர். பனூ அப்துத் தார் குடும்பத்தினர் தமது குடிமக்களின் இரத்தத்தை ஒரு தட்டில் சேகரித்து, அதில் தங்கள் கைகளை நனைத்து “புனிதக் கல்லை நாங்கள்தான் நிறுவுவோம்” என சபதம் செய்தனர். பனூ அதிய்யி பின கஅப் குடும்பத்தினரும் இவ்வாறு செய்ய பிரச்சனை மேலும் தீவிரமடைந்து, பெரும் மோதலுக்கு வழி வகுத்தது.

குறைஷித் தலைவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண புனித கஃபாவின் முற்றத்தில் கூடி விவாதித்தனர். குறைஷிகளின் மூத்த தலைவரான அபூஉமைய்யா, முதியவரான முகீரா பின் அல்மக்ஸூமிடம் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொறுப்பை ஒப்படைத்தார்.

முகீரா கூறினார் “குறைஷித் தலைவர்களே! ஒரு தீர்வை நான் கூறுகின்றேன். இனி முதன் முதலாக கஃபாவின் வாசல் வழியாக யார் உள் நுழைகிறாரோ அவரிடம் இதற்கான தீர்வைக் கூறும் பொறுப்பைக் கொடுப்போம், அவர் ஹஜருல் அஸ்வதை அதற்கான இடத்தில் வைக்கட்டும்!” அவரது கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

முதலில் யார் வருகிறார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அதிக நேரமாகவில்லை, ஒருவர் வந்தார். அனைவரும் ஒரே குரலில் உரத்துக் கூறினர் “ஹாதா அல்அமீன்” – அல்அமீன் வருகிறார்கள்! “ரளீனா” – அவரது அபிப்ராயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்!

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர் மக்களின் விவாதங்களிலோ, தீர்மானங்களிலோ கலந்துக் கொண்டிருக்கவில்லை. பணிவோடு நடந்து வந்துக் கொண்டிருந்த அவர்களிடம் மக்கத்து மக்கள் வந்து “ஹஜருல் அஸ்வத் வைக்கும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முடிவெடுக்கும் பொறுப்பை ஏக மனதாகத் தங்களிடம் ஒப்படைக்கின்றோம்” என்று கூறினர்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெரிய துணியைக் கொண்டு வரச் சொன்னார்கள். அந்தத் துணியை தரையில் விரித்து அதில் ஹஜருல் அஸ்வதைத் தூக்கி வைத்தார்கள். கோத்திரத் தலைவர்களை அழைத்து எல்லாருமாகச் சேர்ந்து அந்தத் துணியைத் தூக்கச் சொன்னார்கள். ஹஜருல் அஸ்வத் வைக்குமிடம் வந்ததும் கல்லை எடுத்து அதன் இடத்தில் வைத்தார்கள். பிரச்சனை முடிந்தது. ஹஜருல் அஸ்வதை வைக்கும் நிகழ்வில் அனைத்து கோத்திரங்களுக்கும் பங்கு கிடைத்ததில் எல்லாருக்கும் மிக்க மகிழ்ச்சி. நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புத்திசாலித்தனமான முடிவுக்காக அனைவரும் அவர்களை வாழ்த்தினர்.

நிகழ்வுகளை நேரில் கண்ட மாபெரும் கவிஞரான ஹுபைரா பின் அபீவஹப் பாடினார்
“தஷாஜரதில் அஹியாவு ஃபீ பஸ்லி குத்ததி ………..
யருஹு பிஹா ரகபுல் இராகி வயக்ததீ ……..
பதினொன்று வரிகளைக் கொண்ட இக்கவிதை முழுவதும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமையையும், இந்நிகழ்வின் முக்கியத்துவத்தையும் கூறுகின்றன.

Mahabba Campaign Part-37/365

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் அனைவரையும் ஈர்க்கும் மையமாக வளர்ந்து வந்தார்கள். அதே நேரத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்க்கதரிசியின் வருகை பற்றிய விவாதங்கள் உலகின் பல பகுதிகளிலும் அதிகரித்துக் கொண்டிருந்தன. உலகம் முழுவதும் நன்மையின் தூதுவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அஞ்ஞானக் காரிருள் சூழ்ந்திருந்த உலகு விடியலுக்காக, சிறியதொரு வெளிச்சத் துணுக்கை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருநதது.

வாக்களிக்கப்பட்ட தீர்க்கதரிசி நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என்பதற்கான சில சாட்சியங்களைப் பார்ப்போம்.

வர இருக்கும் தீர்க்கதரியைக் குறித்து வேத பண்டிதர்களும், ஜோதிடர்களும் சர்சை செய்யத் தொடங்கினர். அப்போது மக்காவில் வாழ்ந்த தத்துவ வாதிகளும் தேடல்களை ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் மக்காவில் “புவானா” என்று பெயரிடப்பட்ட சிலையை மையமாக வைத்து ஆண்டுதோறும் நடைபெறும் சடங்கின் தொடர்ச்சியான ஒரு திருவிழா காலம் வந்தது. மிருகங்களை பலி கொடுத்தும், அர்சனைகள் செய்தும் கோலாகலமாக நடைபெறும் அவ்விழாவில் மக்கத்து மக்கள் அனைவரும் ஒன்று கூடுவர்.

அந்நேரத்தில் நான்கு பேர்கள் தனிப்பட்ட ஒரு விவாதத்துக்காக ஒன்று கூடினர். விவாதம் மற்றும் முடிவுகள் இரகசியமாக இருக்க வேண்டும். என்று அவர்களுக்குள் முடிவு செய்தனர். அவர்களின் விவாதத்தின் சாராம்சம் : “இப்போது நம் மக்கள் பின்பற்றும் கொள்கைகளையும், அனுஷ்டானங்களையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. நம்முடைய தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்திலிருந்து அகன்று வெகுதூரத்தில் மக்கள் சென்றுக் கொண்டிருக்கின்றனர். நன்மையும், தீமையும் செய்யாத சிலைகளை வழிபட்டு வருகின்றனர். இது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல!” சமூகத்தின் பொதுப் பார்வையிலிருந்து விலகி உண்மையைத் தேட வேண்டும் என அந்நால்வரும் சபதம் செய்தனர்.

வரகத் பின் நவ்ஃபல், உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ், உஸ்மான் பின் ஹுவைரித், ஜெய்த் பின் அம்ர் பின் நு.பைல் ஆகியோர் அந்நால்வர்.

வரகத் பின் நவ்ஃபல் வேதத்தைக் கற்றார். பல பகுதிகளுக்குப் பயணம் செய்து பண்டிதர்களைச் சந்தித்தார். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் பாதையைப் புரிந்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தனர். மக்காவில் புகழ்பெற்ற வேத அறிஞராகத் திகழ்ந்தார். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவப் பிரகடனத்தின்போது அவர்களுடன் உரையாடினார். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உற்சாகப்படுத்தினார்.

உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் ஏற்கவில்லை. அவர் சுதந்திரமாக உண்மையைத் தேடினார். அப்போதுதான் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நபித்துவத்தைப் பிரகடனம் செய்தார்கள். குறைஷித் தலைவர் அபூ ஸுஃப்யான் அவர்களின் மகளான உம்மு ஹபீபா இவரது மனைவி. ஆரம்ப கட்டத்தில் உம்மு ஹபீபா இஸ்லாமைத் தழுவினார். மனைவியைத் தொடர்ந்து உபைதுல்லாஹ்வும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். மக்காவில் முஸ்லிம்கள் படும் இன்னல்களைக் கண்ட உபைதுல்லாஹ், தமது மனைவியுடன் எத்தியோப்பியாவுக்குக் குடிபெயர்ந்தார். எத்தியோப்பியா வந்த அவர் சில கிறிஸ்தவப் பாதிரிகளின் வலையில் வீழ்ந்து கிறிஸ்தவரானார், கிறிஸ்தவராகவே இறந்தார். உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாமிலேயே மன உறுதியுடன் வாழ்ந்தார். பின்னர் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி எனும் பதவியால் அலங்கரிக்கப்பட்டார். இறை நம்பிக்கையாளர்களின் அன்னையானார்.

உஸ்மான் பின ஹுவைரித் பல ஆண்டுகளுக்கு முன்பே தமது சத்தியத் தேடலைத் தொடங்கினார். ஒரு திருவிழாவின்போது மேலே குறிப்பிட்ட மூவருடன் கலந்துக் கொண்டார். மக்கள் மது அருந்தியும், ஆடிப் பாடியும் ஒரு சிலையை மகிழ்விக்கின்றனர். ஆனால் அவர்கள் வணங்கிய அந்தச் சிலை நேராக நிலைத்து நிற்கவில்லை. நேராக வைத்தபோதெல்லாம் அது தலை கீழாக விழுந்தது. பல முறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை. “ஏன் இப்படி நடக்கிறது?” உஸ்மான் யோசித்தார். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று அவர் யூகித்தார். அன்றைய இரவுதான் அன்னை ஆமினா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த இரவு என்று பின்னர் அவர் தெரிந்துக் கொண்டார்.

பல முறை நேராக நிறுத்த முயன்றும் நிமிர்ந்து நிற்காத தெய்வமும், பல தெய்வக் கொள்யும், சிலை வணக்கமும் அர்த்தமற்றவை என்பதை அவர் உணர்ந்து ஒரு கவிதை யாத்தார். அப்போது அசரீரியாக ஒரு கவிதையைச் செவிமடுத்தார். சிலை தலை குப்புற விழுவதற்கான காரணம் அந்தக் கவிதையில் இருந்தது.

Mahabba Campaign Part-38/365

உஸ்மான் பின் ஹுவைரித் தமது சத்தியத் தேடலைத் தொடர்ந்துக் கொண்டிருந்தார். ரோமானியப் பேரரசர் சீசரை அவர் சந்தித்தார். அரேபியாவிலிருந்து வருகை தந்த அறிஞரை சீசர் வரவேற்று கவுரவித்தார். உஸ்மான் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ அறிவிப்புக்கு முன்பே அவர் மரணமடைந்“தார்.

நான்காமவர் ஜெய்த் பின் அம்ர் பின் நுஃபைல். இவர் ஒரு சிந்தனையாளர் மற்றும் தத்துவவாதி. அரேபியாவில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த தீச் செயல்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் சிலைகளை வணங்கவில்லை. பல தெய்வ இறைக் கொள்கையை ஏற்கவில்லை. சிலைகளுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதை ஒப்பவில்லை. பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துக் கொல்லும் நடைமுறைக்கு எதிராக நின்றார். கல்லறைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தார். கிறிஸ்தவ மதத்தையோ, யூத மதத்தையோ அவர் நம்பவில்லை. அவர் உண்மையான ஏக தெய்வ நம்பிக்கையையும், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தையும் ஏற்று வழி நடந்தார்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துக் கொள்கிறார்கள் : “ஒருமுறை கஃபாவின் சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டு குறைஷிகளே! நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தை நம்பிக்கை கொண்டவன் உங்களில் நான் மட்டுமே! என்று ஜெய்த் பின் அம்ர் அவர்கள் கூறினார்கள்!”

“அல்லாஹ்வே! உன்னை எப்படி வணங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்திருந்தால் நான் அப்படி உன்னை வணங்குவேன்” என்று ஜெய்த் அடிக்கடிக் கூறுவார். பின்னர் வாகனத்தின் மீதமர்ந்து ஸுஜூதுச் செய்வார்.

சத்தியத்தைத் தேடிய அவரது பயணத்தைக் குறித்து அப்துல்லாஹ் பின் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தியொன்று புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் தோன்ற முன்னர் உண்மை மார்க்கத்தைத் தேடியவராக அவர் சிரியாவுக்குச் சென்றார். அங்கே சந்தித்த ஒரு யூதப் பாதிரியாரிடம் அவர்களுடைய மதத்தைப் பற்றி விசாரித்தார். “நான் உங்களுடைய மதத்தில் சேரலாமா?” என்று கேட்டார். பாதிரியார் சொன்னார் “இன்று யூத மதம் முற்றாக உடைந்து சிதறி விட்டது. நீங்கள் தற்போதைய யூத மதத்தில் சேர்ந்தால் அல்லாஹ்வின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் ஆளாக நேரிடும்” என்றார். “இல்லை, இல்லை! நான் இறைவனுடைய கோபத்திலிருந்து தப்பித்து அவனுடைய திருப்தியைப் பெற்றிடவே இங்கு வந்துள்ளேன். எனவே வேறு ஏதாவது வழி சொல்ல முடியுமா?” என்று கேட்டார்கள் ஜெய்த் பின் அம்ர்.

பாதிரியார் சொன்னார் “ஹனீஃபி பாதையை — நேரான பாதையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”
“நேரான பாதை எது?” ஜெய்த் கேட்டார்.
அதுதான் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதை. அவர்கள் யூதரோ, கிறிஸ்தவரோ அல்ல. அவர் ஹனீஃபி பாதையை — நேரான பாதையைப் பின்பற்றினார். ஏகனான அல்லாவை மட்டும் வணங்கினார்.

ஜெய்த் மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார். அவரது தேடல்கள் முடியவில்லை. அப்போது ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரை சந்தித்தார். அவரும் யூதப் பாதிரியார் கூறியதையே எடுத்துச் சொன்னார்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதையைக் கேட்டறிந்த ஜெய்த், “இறைவா! நான் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பதையில் நிற்கின்றேன் என்பதற்கு நீயே சாட்சி!” என்றார்.

ஜெய்த் அவர்களின் சத்தியத் தேடலைக் குறித்து பின்வருமாறும் கூறப்பட்டுள்ளது. ஜெய்த் உண்மையைத் தேடி அலைந்தார். பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். அல்ஜஸீரா மட்டுமின்றி மவுசிலிலும் அலைந்தார். இறுதியாக பால்காஆ என்ற பகுதியை அடைந்தார். வேதங்களை ஆழ்ந்து கற்றறிந்த ஒரு அறிஞரைச் சந்தித்தார். அவரிடம் தமக்கு நேரான பாதையைக் காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

பாதிரியார் சொன்னார் “சகோதரரே! தாங்கள் தேடும் நேரான மார்க்கத்தை இன்று எங்கும் காண முடியாது. ஆனால் நேர் வழி காட்டும் உண்மையான ஒரு இறைத் தூதர் வரும் காலம் அண்மித்து விட்டது. தங்களுடைய சொந்த மண்ணிலேயே இந்தத் தூதுவர் தோன்றுவார் எனவே விரைந்து தங்களுடைய நாட்டுக்குச் செல்லுங்கள். அந்த புனிதருடன் சேர முயற்சி செய்யுங்கள்!”

Mahabba Campaign Part-39/365

கிறிஸ்தவப் பாதிரியார் சொன்னதைக் கேட்டு ஜெய்த் அகமகிழ்ந்தார். தமது தேடலின் முடிவை பெற்றிட வேண்டும் என்ற ஆவேசத்தோடு உடனடியாகத் தமது நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். பல வழிகளில் அலைந்து, பல கதவுகளைத் தட்டிய அவர், இறுதியாக தாம் தேடிய இலக்கை நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.

அவர் லக்ம் என்ற பகுதியை அடைந்தார். வழிப் பறிக் கொள்ளையர்கள் அவரைப் பிடித்தனர். மரணம் நிச்சயமானவுடன் “இறைவா! எனது இலக்கை அடைந்திட என்னால் முடியவில்லை. ஹனீஃபி மார்க்கத்தை பிரகடனப்படுத்திட என்னால்இயலவில்லை. என் மகன் ஸயீதுக்கு அந்தப் பாதையைத் தடுத்து விடாதே!”

கொள்ளையர்கள் அவரைக் கொலை செய்தனர். அவருடைய கடைசி வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஜெய்தின் மகனார் ஸயீது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி ஸஹாபி – நபித் தோழர் ஆனார். சுவனத்தை நற்செய்தியாகப் பெற்ற பதின்மரில் ஒருவராகவும் போற்றப்பட்டார்.

ஜெய்த் கொலை செய்யப்பட்ட செய்தி மக்கா வாசிகள் அறிந்தனர். அவரது மரணத்தை வரகத் பின் நவ்ஃபல் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துக்கம் மேலிட்ட அவர் பல இரங்கற் பாக்கள் எழுதினார். அவற்றில் ஜெய்த் அவர்களின் சத்தியத் தேடலின் ஆர்வத்தைப் பற்றி குறிப்பிட்டபின் “வ கத் துத்ரிகுல் இன்ஸான ரஹ்மது ரப்பிஹி வலவ் கான தஹ்தல் அர்ழி ஸப்ஈன வாதியா ……. நிச்சயமாக தாங்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்திப்பீர்கள். தாங்கள் ஏழு பள்ளத்தாக்குகள் தூரம் கொண்ட பூமியின் அடியில் இருந்தாலும் அல்லாஹ்வின் கருணையைப் பெறுவீர்கள்” என்று எழுதினார்கள்.

ஜெய்த் ஒரு சிறந்த ஒரு கவிஞராகவும் திகழ்ந்தார். ஏகத்துவத்தின் மகத்துவத்தைப் பறைசாற்றும் பல கவிதைகள் அவரது நூற்களில் இடம் பிடித்துள்ளன. அவரை உண்மையாதொரு ஏக இறை விசுவாசி என்று கருத வேண்டும். இப்ராஹீமீ மார்க்கத்தை விரும்பி, ஏகனான அல்லாஹ்வை மட்டும் வணங்கிடப் பிரியப்பட்டவர் அவர். பிற்காலத்தில் நபி பெருமான் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்த செய்தியை ஹதீஸில் காணலாம்.

“மறுமையில் அல்லாஹ் அவரை ஒரு சுதந்திர சமூகமாகக் கொண்டு வருவான்” என்றும், மற்றொரு அறிவிப்பில் “நான் சுவனத்துக்குள் நுழைந்தேன், அங்கு ஜெய்துக்குச் சொந்தமான இரண்டு தோட்டங்களைப் பார்த்தேன்” என்றும் நபி பெருமான் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெய்தைக் குறித்து சிலாகித்துரைத்தார்கள். எங்கெல்லாம் காரிருள் கவிந்திருக்கிறதோ அங்கெல்லாம் நேரான பாதையின் வெளிச்சக் கீற்றுகள் இருக்கும்.

ஒரு தீர்க்கதரிசியின் வருகைக்காக உலகு காத்திருக்கிறது. சிலர் நபிகளாரின் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குப் பயணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் வழியிலேயே உயிரிழந்தனர். சிலர் விரைந்து வந்து சேர்ந்து வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உலகு மொத்தமும் அந்தத் தூதுவரை வரவேற்கத் தயாராக இருந்தது. அனைத்து கண்களும் “திஹாமா” பள்ளத்தாக்கை நோக்கித் திரும்பின. திஹாமாவின் சிறு அசைவுகளை கூட காலம் கவனப்படுத்திக் கொண்டிருந்தது.

நபி பெருமான் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவப் பிரகடனத்துக்கு ஈராண்டுகளுக்கு முன் சிரியாவிலிருந்து வந்த யூதப் பாதிரியார் ஒருவர் மதீனாவின் பனூ குறைழா கோத்திரம் வசிக்குமிடத்தில் குடியேறினார். அவரது பெயர் இப்னு ஹய்யிபான். முற்றும் துறந்த துறவியான அவர் வேதங்கள் கற்றறிந்தவர். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மெல்ல மெல்ல அவர் மதீனத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவராக மாறினார்.

மழை பெய்யாவிட்டால் மதீனா வாசிகள் அவரை அணுகி “இப்னு ஹய்யிபான் அவர்களே! வெளியே வாருங்கள், எங்களுக்காக மழை வேண்டிப் பிரார்த்தனை செய்யுங்கள்!” என்பர். “பிரார்த்தனைக்கு முன் ஏதாவது தான தர்மங்கள் செய்யுங்கள்” என்று அவர் கூறுவார்.
“என்ன செய்ய வேண்டும்?” என்று ஊர்வாசிகள் கேட்பார்கள்.
கொஞ்சம் பேரீத்தம் பழம் அல்லது பார்லி அல்லது இவை போன்ற ஏதாவது கொண்டு வாருங்கள்” என்பார் அவர்
மக்கள் தான தர்மங்கள் கொண்டு வருவர்.
பின்னர் திறந்த ஓரிடத்தில் அவர்கள் கூடுவார்கள். இப்னு ஹய்யிபான் தலைமையில் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்வர். கூட்டம் கலைவதற்குள் மழை பொழியும். மதீனா வாசிகள் இது போன்ற அனுபவங்களைப் பலமுறை பார்த்துள்ளனர்.

நாட்கள் சென்றன. இப்னு ஹய்யிபான் நோய்வாய்ப்பட்டார். மக்கள் அவரை தரிசித்தனர். அவர் கேட்டார் “யூதர்களே! நான் என் சொந்த நாட்டையும், வீட்டையும் விட்டு விட்டு இங்கே வந்து எதற்காகக் குடியேறினேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

Mahabba Campaign Part-40/365

இப்னு ஹய்யிபான் மீண்டும் ஒரு தடவை கேட்டார் : “எல்லா வசதிகளையும் விட்டு விட்டு நான் ஏன் இங்கு வந்து தங்குகின்றேன்? என்பது உங்களுக்குத் தெரியுமா? ”

“எங்களுக்குத் தெரியவில்லை, தாங்களே கூறுங்கள்” என்றனர் மக்கள்.

அவர் சொல்லத் தொடங்கினார் “நான் இங்கு வருவதற்கு ஒரு காரணமிருக்கிறது. உலகுக்கு அனுப்பப்படவுள்ள இறைத் தூதர் வருவதற்கான நேரம் அண்மித்து விட்டது. அந்தத் தூதர் வாழ்வதற்காக வாக்களிக்கப்பட்ட பூமியும் இதுதான். அவர் புலம் பெயர்ந்து வர வேண்டிய இடமிது. அவர் வந்தால் அவருடன் இணைந்துக் கொள்ளலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். யூதர்களே! அந்த நபி வந்தால் விரைவாக அவரைப் பின்தொடர்ந்து, அவரை பின்பற்றுபவர்களாக மாறுங்கள். சத்தியத் தூதர் வரும்போது தவிர்க்க முடியாத சில போராட்டங்களும், இரத்தக் களரிகளும் ஏற்படும். அதை நீங்கள் தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். அவர் சத்தியத்தின் தூதராகவும், இறுதி நபியாகவும் இருப்பார்.”

இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்கவும், வரவேற்கவும் காத்திருந்த நல்லவரான இப்னு ஹய்யிபான் மரணமடைந்தார். ஆனால் இறுதியாக அவர் சொன்ன வார்த்தைகள் பலரது நினைவில் நிலைத்து நின்றது.

ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த உஸைத் பின் ஸஅத், அவரது சகோதரர் ஸஅலபா மற்றும் நண்பர் உஸைத் பின் ஹுழைர் ஆகியோர் இப்னு ஹய்யிபான் அவர்களின் பேச்சை மதித்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றினர்.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்தார்கள். முதலில் யூதர்கள் நபி அவர்களுக்கு எதிராகத் திரும்பினர். பனூ குறைழா போருக்குப் பின்னர் அவர்களது அணுகுமுறை மாறியது. அப்போது சிலர் கூறினர் : “இவர் நமது புண்ணிய புருஷர் இப்னு ஹய்யிபான் அறிவித்த உண்மையான நபி என்பதில் சந்தேகமில்லை.” அவ்வாறு ஏராளமானோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து இஸ்லாமைத் தழுவினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ அறிவிப்பு திடீரென நடந்த ஒரு நிகழ்வல்ல! உலகமும், காலமும் ஒரு மறுமலர்ச்சி நாயகனை எதிர்பார்த்துக் காத்திருந்தன. இறுதி நபியாக மகத்துவம் மிக்க ஒருவர் நியமிக்கப்படுவார் என்பதை வேதங்களும், அறிஞர்களும் நினைவூட்டிக் கொண்டிருந்தனர்.

அந்த உன்னதமிக்க நபர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என அடையாளம் காணப்பட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுயமாகவே தாம் ஒரு பெரும்பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற நம்பிக்கையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தனர்கள். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த தருணத்தில் நபித்துவப் பிரகடனம் வந்தது.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ட கனவுகள் அவர்களுடைய பணிக்கான முன்னறிவிப்புகளாக அமைந்தன. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறும்போது “தெய்வீக வெளிப்பாட்டின் (வஹி) ஒரு பகுதியாக ஆரம்பத்தில் நல்ல கனவுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அவர்கள் கண்ட கனவுகள் பகல் வெளிச்சம்போல நிஜமாயின

இக்காலத்தில் பல தரிசனங்கள் அவர்களுக்கு ஏற்பட்டன. அவை அவர்களுக்குள் தீவிரமான சிந்தனையைத் தூண்டின. நபித்துவம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு சுமார் ஆறு மாதங்கள் தரிசனங்களுடைய காலமாக இருந்தது என ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

கனவுகள் ஒன்றில், இருவர் பின்தொடர ஒருவர் பக்கத்தில் வந்தார். அவர்கள் மிக உன்னிப்பாக நபி அவர்களை நோட்டமிட்டனர். ஒருவர் மற்றவரிடம் கேட்டார் “நாம் நினைத்தவர் இவர்தானா?” இந்தக் கனவைக் கண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மறுநாள் அபூதாலிபிடம் தாம் கண்ட கனவைக் கூறினார்கள் நபி அவர்கள். “கவலைப்பட வேண்டாம், இது வெறுமொரு கனவு” என்று அபூதாலிப் ஆறுதல் கூறினார்.

அந்தக் கனவு மீண்டும் மீண்டும் வந்தது. அபூதாலிடம் விவரத்தைச் சொன்னபோது அவர் நபி அவர்களை பிரபலமான மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பரிசோதித்தார். கால்களையும், தோளையும் பிரத்யேகமாக சோதித்து விட்டுச் சொன்னார் : “அபூதாலிப் அவர்களே! தாங்கள் கவலைப்படத் தேவையில்லை, உம்முடைய சகோதர புத்திரருக்கு ஒன்றும் ஆகவில்லை, இவர் உத்தமர்களில் உத்தமரான ஒருவர், இவர் மூலமாக பல நல்ல விஷயங்கள் வர உள்ளன. பேய் பிடித்தல் போன்ற எதுவும் இவருக்கு ஒருபோதும் ஏற்படாது. இந்த நல்லவரிடம் நாமூஸின் (ஜிப்ரீல்) வருகை மிக அருகில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள் இவை”

Mahabba Campaign Part-41/365

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மாறுதலான ஒரு முதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்களைப் பார்த்தவர்கள், அவர்களைப் பற்றிக் கேட்டவர்கள் அவர்களிடம் இறைத் தூதுத்துவத்தை எதிர்பார்த்தனர்.

இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸைப் பின்வருமாறு வாசிக்கலாம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “மக்காவில் ஒரு கல் இருந்தது. நபித்துவத்துக்கு முன்பே அக்கல் எனக்கு ஸலாம் சொல்லும். இப்போதும் அக்கல்லை நான் அறிவேன்.” அந்த ஒரு கல் மட்டுமல்ல! வேறு பல பொருட்களும் நபித்துவத்துக்கு முன்பே அவர்களை வாழ்த்தின. ஸலாம் கூறின.

அலி ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள் : “நாங்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மக்காவின் மலை மற்றும் மரங்கள் நிறைந்த புற நகர் பகுதிகளுக்கு நடந்துச் செல்வோம். அப்போது ஒவ்வொரு மரமும், மலையும் “அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸூலல்லாஹ்!” என்று அவர்களுக்கு ஸலாம் சொல்லும்.

இன்னொரு அறிவிப்பில் : “எந்தவொரு மரம் அல்லது குன்றின் அருகில் நடந்துச் செல்லும்போதும் அவை நபி அவர்களுக்கு ஸலாம் சொல்லும். அந்த ஸலாமை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது” என்று காணலாம்.

இவை போன்ற பல நிகழ்வுகள் வரலாற்று நூற்களிலும், ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி நடக்குமா? என்று சந்தேகம் கொள்ளக் கூடாது. இவை போன்றவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வால் முஃஜிஸாவாக (இயற்கைக்கு மாறான அற்புதமாக) வழங்கப்பட்டனவாகும். உயிரற்ற ஜடப் பொருட்கள் உயிருள்ளவை போல விவேகத்தோடு நடந்துக் கொண்ட நிகழ்வுகளும் முஃஜிஸாவின் ஒரு பகுதியாகும்.

அல்லாஹ்வுக்குப் பயந்து உருண்டு செல்லும் பாறைகளைக் குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ்வைப் போற்றாத, புகழாத எப்பொருளும் இல்லை எனவும் அல்குர்ஆன் சொல்கிறது. மேற்சொன்ன நிகழ்வுக்கு இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்ன விளக்கத்தின் ஒரு பகுதி இது.

நபித்துவம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பல அசரீரிச் செய்திகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவிமடுத்தார்கள். வானுலகில் தென்பட்ட சில விசேச வெளிச்சங்களையும் கவனித்தார்கள்.

ஒரு தடவை தமது அன்பு மனைவி அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் : “கதீஜா! நான் சில அசாதாரணமான விஷயங்களைச் செவியேற்கின்றேன். எனக்கு ஏதாவது நிகழுமோ என கவலைப்படுகின்றேன்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அன்னை அவர்கள் “என் அன்பே! கவலைப்படாதீர்கள். அல்லாஹ் மீது ஆணையாக! தங்களுக்கு நல்லதைத் தவிர வேறெதுவும் நிகழாது, தாங்கள் நேர்மையாக நடக்கிறீர்கள், குடும்ப உறவுகளைப் பேணுகிறீர்கள். எனவே ஆபத்தான எதுவும் நடக்காது” என்று ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிறிது சிறிதாக சில மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்தன. அல்லாஹ் தனது தூதரை மாபெரும் பணி ஒன்றை மேற்கொள்வதற்காகப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தான். உலகம் முழுவதையும்ம் கையளிக்கும் வகையில் அவர்களை தயார் செய்துக் கொண்டிருந்தான்.

அந்த சமயங்களில் நபி அவர்கள் தனியாகப் பயணிக்கும்போது வனப் பகுதிகளிலிருந்து யாரெல்லாமோ “அல்லாஹ்வின் திருத் தூதர் அவர்களே!” என்று அழைத்து ஸலாம் கூறுவார்கள்.

பின்னர் தனிமையை அவர்கள் விரும்பத் தொடங்கினார்கள். அல்லாஹ்வை நினைத்தும். வணங்கியும் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். இந்தத் தனிமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதல்ல. அல்லாஹ்விடமிருந்து ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக வந்து சேர்ந்ததாகும். இந்தத் தனிமை, சமூக அவலங்களைக் கருத்திற் கொண்டு தியானத்தைத் தேர்ந்தெடுத்த தத்துவவாதிகளைப் போலவோ, சில திட்டங்களின் ஒரு பகுதியாகவோ உருவான வன வாசம் போன்றதல்ல.

இவ்வாறான எந்தத் திட்டமிடலுமின்றி அல்லாஹ்வின் இறுதித் தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது இந்தத் தனிமை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்தத் தனிமை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

மக்காவில் உள்ள ஜபலுன் நூர் மலை உச்சியில் உள்ள ஹிரா குகையில் தனித்திருக்க வேண்டும் என் உள்ளுணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது.

صَلَّى اللهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ يَارَبِّ صَــــلِّ عَــلَيْـــــــهِ وَآلِـــــهِ وَسَـــلِّمَ

Mahabba Campaign Part-42/365

ஹிரா மலைக் குகைக்கு சில தனிச் சிறப்புகள் உண்டு. ஒன்று : அதன் உள்ளே அமர்ந்தால் கஃபாவை நேரடியாகப் பார்க்கலாம். இரண்டு : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அந்தக் குகையில் இருந்து தியானம் செய்துள்ளார்.

ஹிரா குகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை இமாம் குலாயி பின்வருமாறு கூறுகிறார்கள்: ஒவ்வொரு வருடமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் ஒரு மாதம் தனிமையில் கழிப்பார்கள். முன்னர் குறைஷிகள் மத்தியில் குகையில் தனித்திருக்கும் வழக்கமும் இருந்தது.

தஹன்னுஸ் : சிலைகளைத் தவிர்த்தல், அல்லது தஹன்னுஃப் : சிலைகளை விட்டு விட்டு நேரான பாதையைத் தேடுதல் என இந்தத் தனிமை அந்தக் காலத்தில் அறியப்பட்டது.

ஒரு மாதத் தனிமையைத் தொடர்ந்து அங்கு செல்பவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு வழங்குவார்கள். தியானத்தை முடித்து விட்டு கீழே இறங்கினால் நேராக கஃபாவுக்குச் செல்வார்கள். கஃபாவை ஏழு தடவைகள் அல்லது ஏழுக்கும் அதிகமாக பல தடவைகள் தவாஃப் செய்வார்கள். பிறகு வீட்டுக்குச் செல்வார்கள்.

ஒரு தடவை ஹிரா குகைக்குச் சென்றால் எத்தனை நாட்கள் அங்கே தங்கி இருப்பார்கள் என்பது குறித்து பல கருத்துகள் உள்ளன. மூன்று நாட்கள், ஏழு நாட்கள். ரமழானில் அந்த மாதம் முழுக்க என்பவை பிரபல கருத்துக்கள். ஆனால் ஒரு மாதத்திற்கு அதிகமாகத் தங்கியதாக எந்தக் குறிப்புகளும் இல்லை. தங்குவதற்குத் தேவையான பொருட்களுடன் குகைக்குச் செல்வார்கள். குறிப்பாக ஒரு வகையான கேக் மற்றும் ஜெய்தூன் (ஒலிவ்) எண்ணெய் கொண்டு செல்வார்கள் என வரலாற்றுக் குறிப்புகளில் காணலாம்.

ஹிரா குகையில் தங்கியிருந்த காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பு மனைவி கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். நபி அவர்கள் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் தீர்ந்திருக்கலாம் என்று தோன்றினால் உடனடியாகத் தேவையானவற்றைக் கொடுத்தனுப்புவார்கள். சில நாட்களில் அன்னை அவர்கள் சாதனங்களுடன் மலை ஏறிச் சென்று கொடுப்பார்கள்.

வீட்டிலிருந்து நான்கு மைல் தொலைவில் ஜபலுன் நூர் உள்ளது. குகையை அடைய அடிவாரத்தில் இருந்து எண்ணூற்று எழுபது மீட்டர் உயரமுள்ள செங்குத்தான மலையில் ஏறிச் செல்ல வேண்டும். அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு முறைகூட கோபத்தையோ, வெறுப்பையோ தன் அன்புக் கணவர் மீது வெளிப்படுத்தியதில்லை. முழு மனதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பணிவிடை செய்வதில் திருப்தி அடைந்தார்கள். அன்புக் கணவருக்குப் பணிவிடைகள் செய்வதற்காக அன்னை அவர்கள் சில நாட்களில் குகைக்குச் சென்று தங்கியதும் உண்டு.

சில நேரங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குகைக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்னை கதீஜா நாயகி அவர்கள் நாட்களை கணக்கிடுவார்கள். பின்னர் ஜபலுன் நூரை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு மலையடிவாரத்துக்குச் சென்று மலைமீது பார்த்துக் கொண்டு நிற்பார்கள். சிறிது நேரத்துக்குப் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருவார்கள். மிக்க மகிழ்வோடு இருவரும் சந்தித்துப் பேசி மகிழ்வர்.

அன்று இருவரும் மலையடிவாரத்திலேயே தங்குவார்கள். அன்னை அவர்கள் வீட்டிலிருந்து தம்முடன் எடுத்துச் சென்ற உணவு, பதார்த்தங்களை வழங்கி உபசரிப்பார்கள். விடியற்காலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் மலைக் குகைக்குச் செல்வார்கள். அன்னை அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்கள். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை அவர்களுடன் மலையடிவாரத்தில் இரவு தங்கிய இடத்தில் பிற்காலத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அந்தப் பள்ளிவாசலுக்குப் பெயர் ”மஸ்ஜிதுல் இஜாபா”.

சில நாட்களில் அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மலை மீதேறிச் சென்றுப் பார்க்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணாமல் பரிதவித்து சப்தமிட்டு அழைப்பார்கள். பதில் கிடைக்காவிட்டால் சேவகர்களை அனுப்பித் தேடுவார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலையின் ஏதாவது ஒரு பகுதியில் சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருப்பதைக் காணுவர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் கைவசமிருந்த உணவுப் பொருட்களை யாருக்காவது தானம் செய்து விட்டு எதிர்பார்த்ததைவிட முன்னதாக மலை இறங்கி வீட்டுக்கு வருவார்கள். ஏதேனும் விசேசமான அனுபவங்கள் ஏற்பட்டால் அவற்றை மனைவியிடம் எடுத்துரைப்பார்கள். பொறுமையாக அவற்றைக் கேட்டு விட்டு அன்னையவர்கள் தமது அன்புக் கணவரை ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்துவார்கள்.

Mahabba Campaign Part-43/365

ஹிரா குகையில் தங்கி இருந்த காலத்தில் எந்த வகையான வணக்க, வழிபாடுகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபட்டார்கள்? பல்வேறு கருத்துக்களை அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

எட்டு வகையான அபிப்ராயங்களைக் கூறுகின்றனர்.

1. முந்தைய நபிமார்களின் வணக்க, வழிபாடுகளைச் செய்தார்கள் என்று கூறும் அறிஞர்கள், எந்த நபியின் வணக்க வழிமுறைகளைப் பின்பற்றினார்கள் என்பதை வரையறுத்துக் கூறவில்லை

2. இப்னுல் புர்ஹான் அவர்கள் அனைத்து நபிமார்களின் தந்தையான ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிபாட்டு முறையைக் கைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

3. இமாம் ஆமூதி அவர்கள் ஷெய்குல் அன்பியா” என்ற பெயர் கொண்ட நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிபாட்டு முறையைக் கைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

4. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வழிபாட்டு முறை. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அல்லாஹ்வின் கலீல்” என்ற பட்டப் பெயர் கொண்ட நபி ஆவார்கள். மேலும் இப்ராஹீமீ வழிமுறையைக் கூறும் குர்ஆன் வசனம் பின்னர் அருளப்பட்டது.

5. “கலீமுல்லாஹ்” என்ற பெயர் கொண்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிபாட்டு முறை

6. “ரூஹுல்லாஹ்” என்ற பெயர் கொண்ட நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிபாட்டு முறை.

7. முந்தைய நபிமார்கள. கைக் கொண்ட வழிபாட்டு முறைகளின் தொகுப்பு.

8. அல்லாஹ்வால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இவற்றில் கடைசிக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அக்காலத்திலும் சில விசேசமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அந்த வழிகாட்டுதல்களின்படி வணக்க, வழிபாடுகளை மேற்கொண்டார்கள்” என்று கூறுகின்றார்கள்.

அக்காலத்தின் முக்கிய வழிபாடு : அல்லாஹ்வைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை. அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் அவனது மகத்துவங்களைப் பற்றி சிந்தித்தல் ஆகும்.

இந்த கால கட்டத்தை ஆன்மீகச் சடங்குகளை (ரியாழா) செய்து முடிப்பதற்கான தவக் காலம் (கல்வத்) என்றுரைப்பவர்களும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் : உலக வாழ்க்கையின் விவகாரங்களிலிருந்து விலகி இறை சிந்தனையில் (தஃபக்குர்) செலவிடுதல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா மலையில் தங்கி இருந்தபோது நாளுக்கு நாள் பல்வேறு ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

அம்ர் பின் ஷுரஹபீல் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அன்பு மனைவி அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொன்னார்கள் “நான் தனிமையில் இருக்கும்போது என் முன்னால் விசேசமான சில ஒளிக் கதிர்கள் தோன்றும், சில உரையாடல்களைச் செவியேற்பேன். முஹம்மத் அவர்களே! நான் ஜிப்ரீல் என்று கூறும் சப்தங்கள் கேட்கும். கதீஜா! ஏன் இப்படி? எனக்கு ஏதாவது நிகழுமோ என அஞ்சுகின்றேன்.” அன்னை அவர்கள் “பயப்படத் தேவையில்லை தங்களுக்கு தீங்கு எதுவும் நடக்காது” என்பார்கள்.

சிறிது நேரம் கழித்து அங்கே வந்த அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நடந்த சம்பவத்தை அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா எடுத்துரைத்தார்கள். “வரகத் பின் நவ்ஃபல் அவர்களைச் சந்தித்து இந்த விஷயத்தைக் குறித்து கேளுங்கள். அவர் சிறந்த வேத அறிஞர்” என்றார்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

பிறகு வரகத் பின் நவ்ஃபல் அவர்களைச் சந்தித்து அவரிடம் விரிவாகச் செய்திகளைச் சொன்னார்கள். நான் ஜிப்ரீல் என்ற குரல் பற்றிச் சொன்னபோது வரகத் “ஸுப்பூஹுன்….. ஸுப்பூஹுன்….. சிலை வணக்கம் நிறைந்த இந்நாட்டில் ஜிப்ரீல் என்ற பெயர் கூறப்படுகிறது அல்லவா! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் இடையிலான பணியை நிர்வகிக்கும் தூதர்தான் ஜிப்ரீல். எனவே கவலைப்பட வேண்டாம் மகனே!” என்றார்.

மற்றொரு நாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தனியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது “அஸ்ஸலாம்….” என்றதொரு குரல் கேட்டது. விரைந்து வீட்டுக்குச் சென்று அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் விஷயத்தைச் சொன்னபோது “அஸ்ஸலாம் என்பது சாந்தியின் செய்தியல்லவா! எனவே நல்லது மட்டுமே நடக்கும். கவலைப்பட ஒன்றுமில்லை” என்று ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் புதிய அனுபவங்களை வரகத் இப்னு நவ்ஃபலிடம் கூறியபோது, “மகிழ்ச்சியாக இருங்கள் மகனே! மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த நாமூஸ்தான் தங்களையும் பின்தொடர்கிறார்” என்று கூறினார்.

Mahabba Campaign Part-44/365

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக நபித்துவப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட முதற் கட்டத்தைக் குறித்து ஹதீஸ் நூற்கள் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளன.

ரமழான் மாத இறுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், திங்கட் கிழமை இரவு மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நபி அவர்களின் முன் தோன்றினார்கள். மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கும், பூமிக்கும் மத்தியில் அந்தரத்தில் நின்றார்கள்.

அவர்கள் இருவரில் ஒருவர் மற்றவரிடம் “இவர்தான் நாம் நினைத்த ஆள் அல்லவா?” என்று கேட்க, அடுத்தவர் “ஆம்! இவரேதான்” என்று பதில் கூறினார். “அப்படியானால் இவரை வேறு ஒருவருடன் எடை போட்டுப் பார்ப்போம்” என்று கூறி, எடை போட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடையில் அதிகமாக இருந்தார்கள். அடுத்து ஒருவருக்கு பதிலாக பத்து பேர்களை வைத்து எடை போட உத்தரவு வந்தது. அப்போதும் நபி அவர்கள் முன்னிலையில் இருந்தார்கள். நூறு பேரை வைத்து எடை போட்டபோதும் அதே நிலைதான். இறுதியாக வான தூதர்கள் கூறினர் “புனித கஃபாவின் இறைவனால் முழு சமூகமும் இவரின் மறு புறம் வைக்கப்பட்டாலும் இவர்தான் அதிக எடை உள்ளவராக இருப்பார்.”

பின்னர் முத்து மற்றும் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பிரத்தியேக விரிப்பு விரித்து அதன் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர வைக்கப்பட்டார்கள். “இந்த நபரின் உள் புறத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்” என்று ஒருவர் கூற நெஞ்சகத்தைக் கீறி பொதுவாக மனிதனில் இருக்க சாத்தியமான ஷெய்தானிய அம்சம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலிலிருந்து அகற்றப்பட்டது. ஒருவர் கூறினார் “உட்புறத்தை நன்றாகக் கழுகிச் சுத்தப்படுத்துங்கள்” பிறகு உடலின் திறக்கப்பட்ட பகுதி தையல் போடப்பட்டது. தொடர்ந்து நபி அவர்கள் நேராக அமர வைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களிடம் நபித்துவப் பணி ஒப்படைக்கப்பட்டது. மேலும் தைரியம் பெறத் தேயைான அனைத்தும் வழங்கப்பட்டன.

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”ஓதுங்கள்!” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான் ஓதுபவன் அல்ல!” என்றார்கள். உடனே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுக்கமாகக் கட்டி அணைத்தார்கள். அந்த இறுக்கத்தின் தாக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்ந்தார்கள்.

மீண்டும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி அவர்களிடம் ”ஓதுங்கள்!” என்று சொன்னார்கள். “நான் ஓதுபவன் அல்ல!” என்றார்கள் நபி அவர்கள். மூன்று தடவைகள் இவ்வாறு நடந்தன. பின்னர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸூரத்துல் அலகின் முதற் பகுதியை ஓதினார்கள். “படைத்த இரட்சகனின் திருநாமத்தால் ஓதுவீராக! அவன் மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! அவன் மிகுந்த சங்கையானவன். அவன் எழுதுகோலால் கற்றுத் தந்தான்……”

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தவொரு ஆசிரியரிடமும் எழுதவோ, வாசிக்கவோ கற்றுக் கொள்ளாததால் “நான் ஓதுபவன் அல்ல” என்று சொன்ன சொற்றொடர் மிகுந்த சிந்தனைக்குரியது. ஆனால் “அல்லாஹ்வின் திருநாமத்தால் ஓதுவீராக!” என்று சொன்னபோது நபி அவர்கள் மறுக்கவில்லை. ஏனெனில் அப்போது ஓதும் திறனை அல்லாஹ் அப்பெருமகனாருக்கு வழங்கி இருந்தான். சுருக்கமாகச் சொன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் அல்லாஹ் அவர்களுக்கு நேரிடையாக வழங்கியவை ஆகும்.

“உம்மிய்யி” என்ற அரபுச் சொல்லுக்கு எழுத்தறிவில்லாதவர் என்பது பொருள். ஆனால் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விஷயத்தில் உம்மிய்யி என்ற வார்த்தைக்கு அப்படிப் பொருள் இல்லை. மற்றவர்களைப் போன்று சாதாரண முறையில் அன்னார் அறிவைப் பெறவில்லை என்று அர்த்தம். நடைமுறைப்படி எதையும் கற்காமல் அனைத்து அறிவுகளையும் கையாண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுத் திறனை அனைவரும் வியந்தனர்.

ஹிராக் குகையிலிருந்து புனித குர்ஆனைப் பெற்றுக் கொண்டு நபி அவர்கள் வீட்டுக்கு நடந்துச் சென்றார்கள். பாதையின் இரு மருங்குகளிலும் இருந்த கற்கள் மற்றும் மரங்கள் நபி அவர்களுக்கு ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தன. பெற்ற வேதத்தின் எடையும், ஒப்படைக்கப்பட்ட பொறுப்பும் மிகப் பெரியதாக இருந்ததால் அவர்களது இதயம் நடுங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் விரைந்து நுழைந்து “கதீஜா என்னைப் போர்த்துங்கள்……. என்னைப் போர்த்துங்கள்” என்று கூற, அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி அவர்களைப் போர்வை கொண்டு போர்த்தினார்கள்.

தமக்கு ஒரு உன்னதமானதொரு பாக்கியம் கிடைத்திருக்கிறது என்ற எண்ணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் பணியின் தீவிரம் அவர்களை பாதித்தது. அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அருகிருந்து ஆறுதல் வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்தினார்கள்.

صَلَّى اللهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

Mahabba Campaign Part-45/365

கேரளாவின் தலைசிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், ஆற்றிங்ஙல் மக்தூமியா அரபுக் கல்லூரி முதல்வரும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பின் தேசிய தலைவரும்மான Dr. முஹம்மத் ஃபாரூக் நயீமி அல்புகாரி அவர்கள் “மஹப்பத் காம்பைன்” என்ற தலைப்பில் அண்ணல் நபி முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றுச் செய்திகளை 365 நாட்கள் தினமும் தொகுத்துத் தருகின்றார்கள்.

இன்று தொடர் 45

சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லத் தொடங்கினார்கள் : “கதீஜா……. நான் கனவில் காணும் ஒருவரைப் பற்றித் தங்களிடம் அடிக்கடி கூறுவேன் அல்லவா! அவர் ஜிப்ரீல்தான். இன்று அவர் நேரிடையாக என்னிடம் வந்தார்……. என்று ஹிரா குகையில் நடந்த சம்பவங்களைச் சொல்லிவிட்டுக் கடைசியாக “என் அன்பே! நான் மிகவும் பயந்து போய் விட்டேன்.” என்றார்கள்.

அப்போது அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் “பயப்படாதீர்கள், தங்களுக்கு நல்லதே நடக்கும். ஏனெனில் தாங்கள் குடும்ப உறவுகளைப் பேணுகிறீர்கள், உண்மையை மட்டுமே பேசுகிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், பிறர் நம்பி ஒப்படைக்கும் பொருட்களைப் பாதுகாத்துத் திருப்பித் தருகிறீர்கள், அனாதைகளை ஆதரிக்கிறீர்கள் பிறரின் துக்கங்களுக்குப் பரிகாரம் காண்கிறீர்கள். எனவே அல்லாஹ் மீது சத்தியமாக! அவன் தங்களைக் கைவிட மாட்டான். அல்லாஹ் வழங்கியதை ஏற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சத்தியமாக மட்டுமே இருக்க முடியும்” என்று கூறினார்கள்.

அன்புக் கணவரை ஆசுவாசப்படுத்தி, ஓய்வெடுக்க வைத்து விட்டு அன்னை கதீஜா அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து உத்பாவின் பணியாளர் அத்தாஸை சந்தித்தார்கள். அவர் நீநவா நாட்டைச் சேர்ந்தவர். தூய கிறிஸ்தவர். “அத்தாஸ்! ஒரு விஷயத்தைக் குறித்து எனக்கு திட்டவட்டமான பதிலைத் தருவீர்களா? ஜிப்ரீல் அவர்களைப் பற்றித் தங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்கள்.

“குத்தூஸுன்……. குத்தூஸுன்…… தூய்மையானவர், புனிதமானவர். சிலைகளை வணங்கும் இந்த மண்ணில் ஜிப்ரீலுக்கு என்ன வேலை?” அத்தாஸ் கேட்டார்

“தங்களுக்குத் தெரிந்த தகவல்களை வைத்து ஜிப்ரீல் என்பவர் யார்” என்பதைச் சொல்வீர்களா?” அன்னை அவர்கள் மீண்டும் கேட்டார்கள்.

அத்தாஸ் சொன்னார் : “அவர் அல்லாஹ்வின் நம்பிக்கைக்குரிய தூதர். தீர்க்கதரிசிகளுக்கு இறைவனின் செய்திகளைத் தெரிவிக்கும் வானவர். மூஸா, ஈஸா ஆகிய தீர்க்கதரிசிகளின் நெருங்கிய நண்பர்.”

அன்னை கதீஜா நாயகி அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்துக் கொண்டு வேத அறிஞர் வரகத் பின் நவ்ஃபலைச் சந்தித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு நடந்தவற்றை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டபின் வரகத் சொன்னார் : “சந்தோஷப்படுங்கள். மர்யமின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் முன்னறிவிப்புச் செய்த இறைத் தூதர் தாங்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருகை தந்த நாமூஸ் அல்லது ஜிப்ரீல் அவர்கள்தான் தங்களிடமும் வந்துள்ளார். சந்தேகத்துக்கு இடமின்றி தாங்கள் மார்க்கப் பிரச்சாரம் ஒப்படைக்கப்படும் ஒரு நபி. ஜிஹாதுச் செய்ய தாங்கள் கட்டளை இடப்படுவீர்கள். மக்கள் உங்களை விமர்சிப்பார்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும், பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியது வரும். அந்நேரத்தில் நான் உயிரோடு இருந்தால் உங்களுக்கு வலுவான ஆதரவைத் தருவேன்.”

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள் “நான் இந்த விட்டு வெளியேறும் நிலை ஏற்படுமா?”

“ஆம்! சத்தியத்தைக் கொண்டு வந்த அனைத்து தீர்க்கதரிசிகளும் விமர்சிக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர்.” என்ற வரகத், இருக்கையிலிருந்து எழுந்து நபி அவர்களின் தலையில் கை வைத்து வாழ்த்தினார். நாட்கள் அதிகம் செல்ல முன்னர் வரகத் பின் நவஃபல் இவ்வுலகிலிருந்து விடை பெற்றுச் சென்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களும் வீடு திரும்பினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலேயே மூன்று தினங்கள் தங்கி இருந்தார்கள். தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பின் மகத்துவத்தைப் பற்றிய எண்ணங்கள் மிகைத்தது. இப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்த அச்சம், இனி அவர்களை எப்போது பார்ப்போம் என்ற ஆவலுக்கு மாறியது. பயமும், பரிதவிப்பும் விலகி ஜிப்ரீல் அவர்களை எதிர்பார்க்கும் மனநிலை வந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கஃபாவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அசரீரிக் குரல் கேட்டது. சுற்று முற்றும் பார்த்தார்கள் யாரும் தென்படவில்லை. “யாமுஹ்மத்! முஹம்மத் அவர்களே!!” என்று ஒரு அழைப்புக் குரல் கேட்டது. நபி அவர்கள் தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்தார்கள்.

அதோ…… ஹிராக் குகையில் பார்த்த வானவர் ஜி்ப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்! ஒரு அற்புதமான காட்சி. எங்கும் தொடாமல் அந்தரத்தில் ஒரு பிரமாண்டமான இருக்கையில் ஜி்ப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஆகாயம் பூமியை ஆலிங்கனம் செய்வது போன்றதொரு காட்சி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரைந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

صَلَّى اللهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

Mahabba Campaign Part-46/365

வீட்டுக்கு வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “கதீஜா……. காய்ச்சல் வந்ததுபோல மிகவும் சூடாக இருக்கிறது. என்னை சற்று குளிர்ச்சி பெறச் செய்யுங்கள்…..” என்றார்கள்.

அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் குளிப்பதற்கு குளிர்ந்த நீர் தயார் செய்து கொடுத்தார்கள். குளித்து விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓய்வெடுக்கச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து அங்கே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமாட்டில் அமர்ந்துக் கொண்டு “போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுங்கள், மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உமது இறைவனை பெருமைபடுத்துங்கள்! உங்களுடைய ஆடைகளைத் தூய்மைப்படுத்துங்கள்! அசுத்தத்தை வெறுத்து ஒதுக்குங்கள்! அதிகத்தை (திரும்ப)ப் பெற்றுக் கொள்ளலாம் என்று கருதி (யாருக்கும்) உபகாரம் செய்யாதீர்கள்! உங்களுடைய இறைவனுக்காக பொறுமையைக் கடைபிடியுங்கள்! ஆனால் (ஸூர் எனும் குழலில் ஊதப்பட்டால் — அப்போது அந்த நாள் கடினமானதாக இருக்கும்.” திருக்குர்ஆனின் 74வது அத்தியாயமான அல்முத்ததிர் ஓதினார்கள்.

ஹிரா குகையில் வைத்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உரையாடிய நிகழ்வை இமாம் ஜைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்:

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நறுமணம் வீசும் அழகிய வடிவில் தோன்றி, “முஹம்மத் அவர்களே! அல்லாஹ் தங்களுக்கு வாழ்த்துச் சொன்னான். மேலும் அவன் கூறினான் : மனித, ஜின் இனங்களுக்கு நீங்கள் என்னுடைய தூதர் ஆவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற ஏக இறை நம்பிக்கைபால் மக்களை நீங்கள் அழைக்க வேண்டும்.

தொடர்ந்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது குதிகாலால் பாறையில் உதைத்தார்கள். அந்த இடத்தில் ஒரு நீரூற்று பீறிட்டு வந்தது. அந்தத் தண்ணீரில் உழூச் செய்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். பிறகு தாம் செய்ததுபோலச் செய்யும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார்கள். இவ்வாறு தொழுகைக்கு முன்னர் உடலைச் சுத்தம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள்.

பின்னர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபாவை நோக்கி நின்றார்கள். தம்முடன் நிற்கவும், தொழுவதைப் பின்பற்றவும் சொன்னார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுவதைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தொழுதார்கள். பின்னர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். வழியில் நின்ற மரங்களும், கற்களும் அவர்களை வரவேற்று அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! தங்கள் மீது இறைவனின் சாந்தி ஏற்படுவதாக! என ஸலாம் கூறின.

வீட்டு வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்த சம்பவங்களை அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார்கள். சம்பவங்களைச் செவிமடுத்த அன்னை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியின் கரம் பிடித்தார்கள். இருவரும் சேர்ந்து ஸம்ஸம் கிணற்றை நோக்கி நடந்தார்கள். உழூச் செய்யும் முறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பிரியமிகு மனைவிக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அண்ணல் அவர்கள் சொல்லிக் கொடுத்ததைப்போல அன்னை அவர்கள் உழூச் செய்தார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள். அதைப் பார்த்து அன்னை கதீஜா நாயகி அவர்களும் தொழுதார்கள். உழூ மற்றும் தொழுகையை நிறைவேற்றிய முதல் நபராகவும், நம்பிக்கையாளராகவும் அன்னை அவர்கள் ஆனார்கள்.”

இந்த நேரத்தில் வெளியே விவாதங்கள் தொடங்கின. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத் தூதராக நியமனம் செய்யப்பட்ட செய்தி பல இடங்களில் சர்ச்சைக்குரிய பொருளாக மாறியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். யுக புருஷனை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் தமக்குள் செய்தியைப் பகிர்ந்துக் கொண்டனர். இச்செய்தியை உறுதிப்படுத்த வெளியூர்களில் இருந்த மக்காவாசிகள் ஊருக்குத் திரும்பி வந்தனர். சிலர் செய்தியறிந்து வர மக்காவுக்கு ஆளனுப்பினர்.

சந்தைகளிலும், மேய்ச்சல் புறங்களிலும் விவாதங்கள் நடந்தன. மனிதர்கள் மட்டுமின்றி ஜின்கள் மற்றும் கால்நடைகளும் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டன.

உலகம் முழுவதுமுள்ள உயிர்கள் அனைத்தும் கருணை பொழியும் ஒரு மகாத்மாவுக்காக காத்திருந்தது போல நீதியும், நியாயமும் இல்லாது போன பகுதிகள் நீதியின் தூதருக்காகக் காத்திருந்தன.

அடிமைச் சந்தையில் விற்கப்பட்ட மனிதர்களும், தாங்க முடியாத அளவுக்கதிகமான பாரத்தைச் சுமந்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த விலங்குகளும் தங்கள் உரிமைகளுக்காக அழுதுக் கொண்டிருந்தனர். சில நாட்களாக தங்களுக்கு விடுதலை வாங்கித் தர ஒருவர் தோன்றி விட்டார் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் ஒரு நிம்மதியை உணர ஆரம்பித்தனர்.

உலகின் பல பகுதிகளிலும் நடந்த, இறைத் தூதரின் நியமன விளம்பரங்களை இனி வாசிப்போம் இன்ஷா அல்லாஹ்!

Mahabba Campaign Part-47/365

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையார் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் கூறுகிறார்கள் :

“நாங்கள் வியாபார நிமித்தம் எமன் நாட்டுக்குச் சென்றோம். குறைஷிப் பிரமுகரான அபூஸுஃப்யானும் எங்களுடன் இருந்தார். அவருடைய மகன் ஹன்ழலா மக்காவிலிருந்து அவருக்கொரு கடிதம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதத்தில் “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுகிறார். நம் அனைவரையும் அவருடைய பாதைக்கு அழைக்கின்றார்.” என்று எழுதப்பட்டிருந்தது.

அபூஸுஃபயான் அந்தக் கடித விவரத்தைப் பலருடன் பகிர்ந்துக் கொண்டார். இதனால் எமனில் செய்தி பரவியது.

எமன் நாட்டைச் சார்ந்த முக்கியமான பாதிரியார்களில் ஒருவர் செய்தியறிந்து எங்களிடம் வந்தார். “மக்காவில் தோன்றிய நபிகள் நாயகம் அவர்களின் பெரிய தந்தையார் ஒருவர் உங்கள் குழுவில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் உண்மையா?” என்று கேட்டார்.

“ஆம்! நான்தான்.” என்றேன்.

“அப்படியானால் உங்களிடம் சில விஷயங்களைக் குறித்து கேட்பேன், உண்மையான தகவலை எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்” என்றார் பாதிரியார்.

நான் ஒப்புக் கொண்டேன்.

அவர் கேட்க ஆரம்பித்தார் : “உங்களுடைய சகோதர புத்திரர் எப்போதாவது பொய் சொன்னதுண்டா?”

“இல்லை! அவர் பொய் சொன்னதில்லை, யாரையும் ஏமாற்றியதுமில்லை. மக்காவிலுள்ளவர்கள் அவரை அல்அமீன்-நம்பிக்கையாளர் என்று அழைக்கின்றனர்.

“அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவரா?” என்பது அடுத்த கேள்வி.

ஆம்! தெரிந்தவர் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அபூஸுஃப்யான் அதை மறுத்துரைப்பரோ என்று சந்தேகப்பட்டேன். எனவே “அவர் எழுதவும், படிக்கவும் கற்கவில்லை” என்று சொன்னேன்..

இப்படிச் சொன்னதும் அவர் துள்ளியெழுந்தார். தனது மேலங்கியைக் கழற்றினார். “யூதர்களின் கதை முடிந்தது” என்று கூவினார்

தொடர்ந்து அப்பாஸ் பின் முத்தலிப் கூறுகிறார்கள் : “நாங்கள் எங்கள் தங்குமிடங்களுக்குத் திரும்பினோம். அபூஸுஃப்யான் சொன்னார் “அபுல் ஃபழ்ல்! உங்கள் சகோதர புத்திரரின் விஷயம் யூதர்களை நடுங்க வைத்திருக்கிறதல்லவா!”

”ஆமாம். நானும் அதைக் கவனித்தேன். அபூஸுஃப்யான்! தாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“இல்லை! நான் அதை ஏற்க மாட்டேன். அந்த நபிகளாரின் ராணுவம் குதாய் பள்ளத்தாக்கு வழியாக வந்து மக்காவைக் கைப்பற்றும் வரை நான் ஏற்க மாட்டேன்” என்று சொன்னார்.

“என்ன சொல்கிறீர்கள் அபூஸுஃப்யான்?” என்றேன்.

அவர் சொன்னார் : “குதாய் வழியாகக் குதிரைப் படை வருமா என்பது எனக்குத் தெரியாது. நானறியாமல் திடீரென என் மனதில் தோன்றியதைச் சொன்னேன்.”

(சுமார் இருபதாண்டுகளுக்குப் பின்னர் மக்கா வெற்றி நடந்தது. குதாய் பள்ளத்தாக்கு வழியாக இஸ்லாமின் குதிரைப் படை மக்காவுக்குள் நுழைந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாஸ் அபூஸுஃப்யானிடம் சொன்னார்கள் : “அப்போது நீங்கள் அன்று சொன்ன ராணுவம் அதோ வருகிறது. உங்கள் நேரம் நெருங்கி விட்டது.”

“ஆம்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று நான் சொன்ன வார்த்தைகளை மறக்கவில்லை. நான் இஸ்லாமை ஏற்றுக் கொள்கின்றேன்“” என்று பதிலுரைத்த அபூஸுஃப்யான் மக்கா வெற்றி தினத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.)

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் வேறொரு அறிவிப்பை இப்னு அஸாகிர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்கள்.

“முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ அறிவிப்புக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நாங்கள் எமனுக்குச் சென்றோம். நாங்கள் ஒரு அரச குடும்பத்தினரிடம் தங்கி இருப்பது வழக்கம். அஸ்கலான் அல்ஹிம்யரி என்ற வயதான அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் எங்களது புரவலராக இருந்தார். நான் எமன் செல்லும்போல்லாம் அவருடன் தங்குவேன். அவர் எங்களிடம் மக்காவின் செய்திகளைக் குறித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார். “குறிப்பிடத்தக்க செய்தியுடன் மக்காவில் யாராவது வந்திருக்கிறார்களா?” என்று பேச்சினூடாகக் கேட்பார். “இல்லை” என்று நான் பதிலிறுப்பேன்.

வழக்கம்போல இந்தத் தடவையும் அவருடன் தங்கினோம். அவரது பார்வை மற்றும் செவித் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். நான் அவரை நெருங்கிச் சென்றேன். “குறைஷி சகோதரரே! அருகில் வாருங்கள். உங்கள் பெயரையும், குடும்பத்தையும் பற்றி தெளிவாகக் கூறுங்கள்” என்று சொன்னார்.

நான் எனது குடும்பப் பரம்பரையைச் சொன்னேன்.

“போதும், போதும்! நீங்கள் பனூ ஸஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்தவரல்லவா! அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கின்றேன். அந்தச் செய்தி உங்களுடைய வியாபாரத்தைவிட உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று அஸ்கலான் அல்ஹிம்யரி கூறினார்.

“அந்த மகிழ்ச்சிக்குரிய நல்ல செய்தி எது?” என்று அவரிடம் நான் கேட்டேன்.

Mahabba Campaign Part-48/365

ஹிம்யரி சொல்லத் தொடங்கினார் : “நான் சொல்லப் போவது மிகுந்த நம்பிக்கைக்குரிய செய்தியும், ஆச்சரியம் மிகுந்த செய்தியுமாகும். ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு புனிதமான நபரை உங்களுடைய நாட்டில் அல்லாஹ் தனது தூதராக நியமித்துள்ளான். அவர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர். அந்தத் தூதருக்கு ஒரு புனித நூலும் அருளப்பட்டுள்ளது. உருவ வழிபாட்டை அவர் தடுத்து நிறுத்துவார். சத்தியத்தைப் போதிப்பார். நேர்மையானவராக இருப்பார். தீமையிலிருந்து விலகி இருப்பதோடு, தீமைக்கு எதிராகச் செயல்படுவதற்கு அழைப்பும் விடுப்பார்.”

நான் கேட்டேன் : “அவர் யார்? எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்?”

ஹிம்யரி “அவர் அஸத், ஸுமாலா, சர்வ், தபாலா ஆகிய கோத்திரங்களைச் சார்ந்தவர் அல்ல. அந்தத் தூதர் ஹாஷிம் குடும்பத்திலிருந்து வந்துள்ளார். அப்போது நீங்கள் அவருடைய உறவினர்களாவீர்கள். அப்துர் ரஹ்மான் அவர்களே! விரைவில் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். அந்த ஆளுமையை அணுகுங்கள். உங்கள் சொந்தக்கரானாக மாறுங்கள். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். அவரைச் சந்திக்கும் எனது வாழ்த்துக்களை் கூறுங்கள்” என்று கூறி விட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரவேற்றும், வாழ்த்துரைத்தும் ஒரு கவிதை யாத்துப் பாடினார். அக்கவிதையை நான் நன்றாக மனதில் பதித்து வைத்துக் கொண்டேன்.

எனது வணிகத்தை விரைவாக முடித்துக் கொண்டு ஊர் திரும்பினேன். ஊருக்கு வந்தவுடன் எனது உயிர் நண்பர் அபூபக்ர் அவர்களைச் சந்தித்து செய்திகளைக் கூறினேன், விவரங்கள் கேட்டேன்.

“நமது அன்பிற்குரிய தோழர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவத்தைப் பிரகடம் செய்துள்ளார்கள்” என்று அபூபக்ர் சொன்னார்கள்.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தேடி கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லம் சென்றேன். அங்கே சில நண்பர்களுடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றார்கள். “நன்மையை ஏற்றுக் கொள்ளத் தகுதியான ஒருவரை உங்களுடைய முகத்தில் நான் பார்க்கின்றேன்” என்றார் நபி அவர்கள்.

நான் ஆச்சரியத்துடன் “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

என்னிடம் சொல்வதற்காக ஒரு உன்னதமான செய்தியுடன் தாங்கள் வருகை தந்திருக்கிறீர்கள், அப்படித்தனே!?” என்று திருப்பி என்னிடம் கேட்டார்கள்.

நான் உற்சாகத்துடன் நடந்த நிகழ்வுகளை, செய்திகளை அவர்களிடம் சொன்னேன்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “ஹிம்யரி ஒரு சிறப்பான மனிதர். என்னைப் பார்க்காமலேயே என்னை நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளர். என்னை ஒரு தடைவகூடப் பார்க்காமல் என் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உண்மையில் என்னுடைய சகோதரர்களாவர்.”

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித் தோழரானார்கள்.

அடுத்து புஸ்ரா நகரத்திலிருந்து வந்த செய்தி ஒன்றைப் பார்க்கலாம்.

மக்காவின் முக்கியமான வர்த்தகர்களில் ஒருவரான தல்ஹா பின் உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவத்தைப் பிரகடனம் செய்த நேரத்தில் வியாபாரத்திற்காக புஸ்ரா நகரத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் யூத தேவாலயத்திருந்து “வணிக விழாவுக்காக வெளியூர்களிலிருந்து புஸ்ரா நகருக்கு வருகை தந்திருப்பவர்களே! உங்களில் ஹரம் (மக்கா) நகரைச் சார்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?” என்றதொரு அழைப்பு விடுக்கப்படுவதைச் செவியேற்றேன்.

நான் சென்று “நான் ஹரமைச் சார்ந்தவன், எதற்காகத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டேன்.

யூதப் பாதிரியார் : “நபி அஹ்மத் தோன்றி விட்டாரா?” என்று கேட்டார்.

“யார் அது அஹ்மத்?” என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

அவர் சொன்னார் “அப்துல் முத்தலிபின் மகனான அப்துல்லாஹ்வின் மகன் அஹ்மத். வாக்குறுதியளிக்கப்பட்ட அந்தத் தீர்க்கதரிசி தோன்றும் மாதம் இதுவாகும். அவர் ஹரம் நாட்டிலிருந்து தோன்றுவார். அவர்தான் கடைசி நபி. அவர் பேரீத்த மரங்கள் நிறைந்த நாட்டுக்குப் புலம் பெயர்ந்து செல்வார். உடனே உங்கள் நாடான ஹரமுக்குத் திரும்பிச் செல்லுங்கள். மற்றவர்களுக்கு முன்பாக அந்தத் தூதுவரைப் பின்பற்றுங்கள்.

தல்ஹா பின் உபைதில்லாஹ் ரழியல்லாஹு அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள் “ யூதப் பாதிரியார் சொன்ன வார்த்தைகள் என் இதயத்தில் பதிந்து விட்டன. வியாபாரத்தை விரைவாக முடித்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பினேன். பயணம் முழுவதும் பாதிரியாரின் வார்த்தைகள் என் உள்ளத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.”

Mahabba Campaign Part-49/365

தல்ஹா பின் உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேலும் கூறுகிறார்கள் :

“நான் ஊருக்கு வந்தவுடன் நிலவரங்களை விசாரித்தேன். “அப்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மத் அதாவது நம்முடைய அல்அமீன் அவர்கள் நபித்துவத்தைப் பிரகடனம் செய்துள்ளார்கள். அபூகுஹாஃபாவின் மகன் அபூபக்ர், நபி அவர்களை முதல் ஆளாக நம்பிக்கை கொண்டுள்ளார்” என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.

நான் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடிச் சென்றேன். புஸ்ராவில் வைத்து நடைபெற்ற சம்பவங்களை அவர்களிடம் விவரித்தேன். பின்னர் இருவருமாகச் சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றோம். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் சொன்ன அனைத்து தகவல்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு நபி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.”

அங்கே வைத்து தல்ஹா பின் உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலிமா சொல்லி இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் சுவனம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பிரபல நபித் தோழர்களில் ஒருவரானார்கள்.

நஜ்ரானிலிருந்து வந்த இன்னொரு செய்தியைப் பார்ப்போம்.

வேத பண்டிதர்கள் பலர் வாழ்ந்து மறைந்த இடம் நஜ்ரான். அவர்களில் ஒவ்வொரு பாதிரியாரும் முத்திரை வைத்த ஆவணங்களைப் பாதுகாத்து வந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ பிரகடன காலத்தில் ஒரு நாள் அங்குள்ள பாதிரியார்களில் முக்கியமான ஒருவர் கால் வழுக்கி கீழே விழுந்தார். உடனே அந்தப் பாதிரியாரின் மகன் “தொலை தூரத்தில் தோன்ற இருப்பவருக்கு நாசம் ஏற்படுவதாக!” என்று கூறினான்.

உடனே பாதியார், “மகனே! அப்படிச் சொல்லாதே. வர இருப்பவர் உண்மையான இறைத் தூதராவார். அவருடைய பெயரும், குணாதிசயங்களும் நம்முடைய வேதங்களில் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பின்னர் அந்தப் பாதிரியார் மரணமடைந்தார். மகன் வேத கிரந்தங்களையும், பழங்கால ஆவணங்களையும் ஆய்வு செய்தார். அவற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய ஏராளமான தகவல்களைப் பெற்றார். அதன் காரணமாக அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பிக்கை கொண்டார். மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுச் செய்தார். கவிதைகள் பாடிக் கொண்டு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்கச் சென்றார்.

மக்காவில் நபித்துவம் பிரகடனம் செய்யப்பட்டபோது உலகின் பல்வேறு பகுதிகளில் நபித்துவம் குறித்து செய்யப்பட்ட விளம்பரங்களை, அறிமுகங்களைப் பார்த்தோம்.

இனி மக்காவுக்குத் திரும்பிச் செல்வோம்.

நபித்துவப் பிரகடனத்துக்குப் பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மாதம்வரை வீட்டில் இருந்தார்கள். செயல் திறனுக்கான சுய தயாரிப்பு செய்வதைப்போல, அந்த நாட்கள் தொடர்ந்து வழிபாடுகள் நடத்தும் நாட்களாக இருந்தன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிமை மக்கா நகர் முழுக்க விவாதிக்கப்பட்டது.

“வழக்கமாக கஃபாவின் முற்றத்தில் இருக்கும் அல்அமீனைக் காணவில்லை” என்றனர் சிலர்.

வேறு சிலர் நாட்டில் “தொண்டு செய்யும் தலைவரைக் காணவில்லை” என்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த தந்தை வழி சகோதரர்களும், அத்தைகளும் குடும்பத்திற்குள் விவாதம் செய்தனர்.

அந்த நேரத்தில் அல்லாஹ்விடமிருந்து “வஅன்திர்…….. நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்…..”என்ற கட்டளை வந்தது. அழைப்புப் பணியை எங்கே, எப்படித் தொடங்குவது என்பதை விளக்கும் இறைவசனங்கள் அவை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த கட்டளையை உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள். தமது குடும்பத்தின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். விருந்தும் தயார் செய்யப்பட்டது. நாற்பது முதல் நாற்பத்தைந்து குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபா மலை மீது ஏறி நின்று குடும்பப் பிரதிநிதி அழைத்து “அப்து மனாஃபின் மக்களே! ஹாஷிமின் குழந்தைகளே! பெரிய தந்தையார் அப்பாஸ் அவர்களே! அத்தை ஸஃபிய்யா அவர்களே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தினரே! அன்பு மகள் ஃபாத்திமாவே! நான் அல்லாஹ்விடமிருந்து எதையும் உங்களுக்காகப் பெறவில்லை. என் செல்வத்திலிருந்து எதையாவது கேளுங்கள் தருகின்றேன். இந்த மலைக்குப் பின்னாலிருந்து ஒரு படை வருகிறது என்று நான் சொன்னால் என்னை நம்புவீர்களா?” என்று நபி அவர்கள் கேட்டார்கள்

“இன்று வரை முஹம்மத் அவர்கள் எங்களிடம் பொய் சொன்ன அனுபவம் எங்களுக்கில்லை. எனவே நாங்கள் நம்புவோம்” என்றனர் கூடி நின்றவர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “இப்போது நான் அறிவிக்கின்றேன் நான் அல்லாஹ்வால் உங்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையாளன்….”

Mahabba Campaign Part-50/365

“நான் உங்களுக்குத் தருவதைப் போன்ற நன்மைகளை அரபிகள் யாரும் அவர்களுடைய குடும்பங்களுக்கு வழங்கவில்லை. இரு உலகங்களிலும் சிறந்ததை உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கின்றேன். வெற்றியின்பால் உங்களை அழைக்கின்றேன். இந்த விஷயத்தில் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும்”.

அங்கே குழுமி இருந்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சைக் கவனமாகக் கேட்டனர். ஆனால் அபூலஹபுக்கு மட்டும் அந்தப் பேச்சு பிடிக்கவில்லை. “இதைச் சொல்வதற்காகவா எங்களை இங்கே அழைத்தீர்கள்? தப்பன் லக யா முஹம்மத் – தங்களுக்கு நாசம்!” என்று அவன் கூறினான்.

இதைக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருத்தப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களை சமாதானப்படுத்தினான். புனித குர்ஆன் அபூலஹப் சொன்ன அதே வார்த்தைகளால் அவனுக்கு பதிலடி கொடுத்தது. “தப்பத் யதா அபீ லஹப்…… அபூலஹபின் இரு கரங்களும் நாசமடைவதாக! அவனும் நாசமடையட்டும். அவனுடைய செல்வமும், அவனுடைய சம்பாத்தியங்களும் அவனுக்கு யாதொரு பயனும் அளிக்காது. வெகுவிரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான். விறகு சுமக்கும் அவனுடைய மனைவி — அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான்” என்ற குர்ஆனின் நூற்றிப் பதினொன்றாவது அத்தியாயம் இறங்கியது.

பின்னாட்களில் திருக்குர்ஆன் சொன்ன அனைத்தும் நடந்தேறியது.

சிறுவர் அலீ அந்தக் குடும்ப சங்கமத்தில் வைத்து நபி அவர்களை நம்பிக்கை கொண்டார்கள். “எந்தக் கட்டத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருப்பேன்” என்றும் கூறினார்கள்.

வீடு திரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வணக்கத்திலும், தியானத்திலும் தமது நேரத்தைச் செலவிட்டார்கள்.

ஸஃபா மலைமீது நின்று செய்த பிரசங்கத்தின் பலனைத் தெளிவாகக் காண முடிந்தது. மக்கா முழுவதும் புதிய மார்க்கம், நபி, ரஸூல் வஹீ பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.

“வஹீ” என்ற அரபுச் சொல்லின் முதன்மைப் பொருள் தெய்வீக போதனை மற்றும் தெய்வீக வெளிப்பாடு என்பதாகும். ஆனால் வெளிப்படையாக மார்க்கத்தின் தகவலைத் தெரிவித்தல் என்பது பொதுவான பொருளாகும்.

அகிலத்தைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் தன் தூதர்களுக்கு செய்திகளை எடுத்துரைக்கும் வழி. இதுவே வஹீயின் நோக்கமாகும். வஹீயை அதன் முழு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வதற்கு சாதாரண மக்களுக்கு வரம்புகள் உள்ளன. ஏனெனில் அதை அனுபவிக்கவோ, அனுபவித்தவர்களிடமிருந்து நேரடியாக புரிந்துக் கொள்ளவோ நமக்கு வாய்ப்பில்லை என்பதும் ஒரு காரணம்.

வஹீ பல்வேறு முறைகளில் வரும்.

1. கனவுகள் மூலம் பெறப்படும் சிறப்புச் செய்திகள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காணும் ஒவ்வொரு கனவும் விடியல் புலருவதைப் போல நிஜமாகும். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கனவுகள் மூலம் தமது மகனை அறுத்துப் பலியிடும் கட்டளையைப் பெற்றார்கள்.

2. மலக்குகள் மூலம் நபிமார்களின் இதயத்தில் செய்தியைத் உதிக்கச் செய்தல். அப்போது மலக்குகள் காட்சியில் தோன்ற வேண்டியதில்லை. ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “பரிசுத்த ஆன்மா என் இதயத்தில் ஒரு செய்தியை தோன்றச் செய்தார். எந்தவொரு உடலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட உணவை பூர்த்தி செய்யாமல் இறப்பதில்லை. எனவே பயபக்தியுடன் இருங்கள். உங்கள் வளங்களை சட்டப்பூர்வமான, நேரான வழியில் சேகரியுங்கள். சிரமங்கள் ஏற்படும்போது இறைவன் அனுமதிக்காத முறைகளைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ்வுக்கு கீழ்படிவது மூலமாகத்தான் அவனிடமுள்ளது கிடைக்கப் பெறும்.”

3. மலக்கு தனது சுய உருவில் வந்து இறைச் செய்தியைத் தெரிவித்தல். அது சில நேரங்களில் மணியோசையுடன் இருக்கும். இது மிகவும் கடினமான வஹீயாக இருந்தது என ஹதீஸ்களில் காணலாம்.

மணியோசை என்பது வெறுமொரு மொழிபெயர்ப்பு மட்டுமே! அதன் சரியான வடிவத்தை, வெளிப்பாட்டை நாம் புரிந்துக் கொள்ள முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில் சொல்லப்பட்டுள்ள அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு இல்லை.

4. மலக்கு மனித வடிவில் வந்து செய்தி சொல்தல். அப்போது சபையில் உள்ளவர்கள் மலக்கு ஜிப்ரீலை பார்க்க முடிந்தது. ஆனால் வந்தவர் ஜிப்ரீல் அவர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.

ஈமான் மற்றும் இஸ்லாம் பற்றிக் கூறும் பிரபலமான ஹதீஸில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித உருவில் வந்ததைப் பற்றிய விளக்கம் உள்ளது. இந்த ஹதீஸை “ஹதீஸ் ஜிப்ரீல் — ஜிப்ரீலின் ஹதீஸ்” என்ற பெயரிலும் அறியப்படும்.

பல தடவைகள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திஹ்யதுல் கல்பி ரழியல்லாஹு அன்ஹு என்ற தோழரின் உருவ அமைப்பில் வந்துள்ளார்கள்.

Mahabba Campaign Part-51/365

5. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது உண்மையான உருவத்தில் தோன்றி செய்தியைத் தெரிவித்தல். இது மிக அரிதாகவே நடைபெறும். நபிமார்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உண்மையான வடிவத்தைப் பார்த்திருக்கிறார்கள். இரண்டு தடவைகள் மட்டும் ஜிப்ரீல் அவர்களை சுய வடிவில் பார்த்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

6. உதவியாளர்களின்றி அல்லாஹ் நேரடியாகச் செய்திகளை வழங்குதல். ஒரு திரைக்குப் பின்னாலிருந்து செய்திகள் பெறப்படும். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் அல்லாஹ்வின் உரையாடல் இப்படித்தான் இருந்தது.

7. உதவியாளர் அல்லது திரை இல்லாத அல்லாஹ்வின் உரையாடல். மிஃராஜின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அல்லாஹ் இவாறுதான் உரையாடினான். அன்றிரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் கண்டு செய்தியைப் பெற்றார்கள். இதைத்தான் அல்குர்ஆனின் “அந்நஜ்ம்” அத்தியாயம் ”(அல்லாஹ்) அவனுடைய அடியாருக்கு (வஹீ மூலம்) அறிவித்ததை எல்லாம் அறிவித்தான்” என்று எடுத்தியம்புகிறது.

8. தூக்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் செய்திகளை அறிவித்தல். இது கனவு வழி அல்லாமல் பிரத்யேகமாகச் செய்திகளை அறிவித்தலாகும். இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்துள்ள ஹதீஸ் ஒன்றில் இச்செய்தியைக் காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் “என் இறைவன் மிகவும் அழகான வடிவத்தில் என்னிடம் வந்து (நபி அவர்கள் கனவில் என்று கூறியதாக நினைக்கின்றேன்) ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். ‘என் இறைவனுக்கு அடிபணிந்தேன்’ என்று பதிலுரைத்தேன்.

‘மேலுலகில் எதைப் பற்றி விவாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று அல்லாஹ் கேட்டான்.

‘இறைவா நானறியேன்!’ என்றேன்.

அப்போது அவ்லாஹ் என்மீது பிரத்யேகமான அருளைப் பொழிந்தான். அப்போது சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமத்துக்கும் இடைப்பட்ட அனைத்தையும் நான் அறிந்தேன்”

9. தேனீக்களின் ரீங்காரம் போன்ற உணர்வுடன் இறைச் செய்திகளைப் பெறுதல். இந்த அனுபவம் குறித்து உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ள செய்தியை இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்துள்ள ஹதீஸில் காணலாம்.

10. ஆய்வு முறையில் விஷயங்களை அணுகும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இதயத்தில் வரும் தீர்ப்புகள் மற்றும் சொல்லும் முடிவுகள். இஜ்திஹாத் வஹீயின் கீழ் வருமா? என்பதில் அறிஞர்களிடம் பல கருத்துகள் உள்ளன. எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக் கூறினாலும் அது வஹீயின் அடிப்படையிலானது என்பதில் இதுவும் சேரும்.

இறைச் செய்திகளைப் பெறுவதில் வேறு முறைகளும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை செய்திகள் வழங்கப்படும் விதத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வஹீயில் 46 வகைகள் இருப்பதாக ஹதீஸில் காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்ற வஹீயின் மகத்துவத்தை அல்குர்ஆன் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறது. “விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்களுடைய தோழர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) வழிகெட்டு விடவுமில்லை, தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தன் இச்சைப்படி எதையும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. இதை வல்லமை படைத்தவர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.” (ஸூரத்துன் நஜ்ம் 1-5)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவு மற்றும் கூற்றுகளின் ஆதாரம் வஹீ ஆகும். இதனை எடுத்துரைக்கும் ஹதீஸ் ஒன்றை இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை மனப்பாடம் செய்வதற்காக அனைத்தையும் எழுதி வைப்பேன். அப்போது குறைஷிகளில் சிலர் என்னிடம் ‘நபி அவர்கள் சொல்வதை எல்லாம் எழுதுகிறீர்களா? கோபம் வரும்போதும், அல்லாத போதும் பேசும் மனிதரல்லவா அவர்கள்?’ என்று கூறினர். இதனால் நான் எழுதுவதை நிறுத்தி விட்டு, விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “எழுதுங்கள்! என் ஆன்மா யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னிடமிருந்து உண்யைல்லாத எதுவும் வெளி வருவதில்லை.”

Mahabba Campaign Part-52/365

வஹீ – இறைச் செய்தி பற்றி நாம் பார்த்தோம். இனி நபி என்றால் யார்? என்று பார்ப்போம்.

உலகின் அதிபதியான அல்லாஹ்வால் முதலிலேயே தீர்மானித்து அனுப்பி வைக்கப்படுபவர்கள் நபிமார்கள். ஏதாதொரு வகையில் கிடைக்கப் பெறுவதல்ல நபித்துவம். செயல்கள், ஞானம், கல்வித் தகுதி ஆகியவற்றால் கிடைப்பதுமல்ல. அவர் சிறப்பிற்குரிய இறைச் செய்தி கிடைக்கப் பெற்றவர். நபி என்ற சொல்லின் சாராம்சம் இதுதான். இறைச் செய்தியுடன் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் பணியும் ஒப்படைக்கப்பட்டால் அவர் ‘ரஸூல்’ என்று அழைக்கப்படுவார். அனைத்து ரஸூல்களும் நபிமார்கள்தான். ஆனால் எல்லா நபிமார்களும் ரஸூல்கள் அல்ல.

ஒரு நபிக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளையும் நபியாக அனுப்பப்படவிருக்கும் நபருக்கு அல்லாஹ் ஏற்கனவே வழங்குகின்றான். நபித்துவ அறிவிப்புக்கு முன்னும், பின்னும் அவர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து சிறிய, பெரிய பாவங்கள் ஏற்படாது.

அவர்களுடைய பார்வை, கேள்வி, மற்றும் வாழ்க்கை வழக்கத்திற்கு மாறான மகத்துவம் மிக்கதாக இருக்கும். அல்அன்ஆம் அத்தியாயத்தின் நூற்றி இருபத்து நான்காம் வசனத்தில் இறைவன் கூறுகின்றான் : “தனது ரிஸாலத்தை — நபித்துவத்தை எவருக்குத் தருவது என்பதை அல்லாஹ் நன்கறிவான்”. அதாவது தகுதியான, பொருத்தமான நபர்களை தயார் செய்து நபிமார்களாக அல்லாஹ் நியமிக்கின்றான் என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

நபிமார்களின் எண்ணிக்கை குறித்து பல கருத்துகள் உள்ளன. அவற்றில் மிகப் பிரபலமான கருத்து : ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்பதாகும். அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸை இக்கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நபிமார்கள் எத்தனை பேர்?” என்று கேட்டேன்.

“ஒரு லட்சத்து நான்காயிரம் பேர்கள்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

“அவர்களில் ரஸூல்கள் எத்தனை பேர்?”

“முந்நூற்றுப் பதிமூன்று பேர்.”

“அவர்களில் முதலாமவர் யார்?”

“ஆதம்.”

“ஆதம் ஒரு தூதர் மற்றும் நபியா?”

”ஆம்!”

இந்த ஹதீஸ் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உட்பட பலர் இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர்.

நபிமார்களின் பரம்பரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைசியானவர்கள். எனினும் அனைத்து நபிமார்களுக்கும் அவர்கள்தான் தலைவர்.

ஐந்து ரஸூல்கள் ‘உலுல் அஸ்ம்’ என்ற உயர் பதவியில் உள்ளனர். நூஹ் அலைஹிஸ்ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் அந்த ஐவர். ‘உலுல் அஸ்ம்’ என்றால் அசாதாரணப் பொறுமை மற்றும் உறுதியுடையவர் என்பது பொருள்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடல் பிறப்பாலும், தவ்ஹீப் பிரச்சாரப் பணியிலும் கடைசி நபி ஆவார்கள். ஆனால் ஆன்மீக வட்டத்தில் அவர்களே முதன்மையானவர்கள். அனைத்து நபிமார்களின் தலைவரும் ஆவார்கள்.

எல்லா நபிமார்களும் குறிப்பிட்டதொரு காலத்திற்கு மற்றும் தேசத்திற்கு அனுப்பப்பட்டனர். நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யமன் நாட்டின் ஆது சமூகத்துக்கும், நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமூது சமூகத்துக்கும் நியமிக்கப்பட்டனர் என திருமறை அல்குர்ஆன் கூறுகிறது.

ஆனால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகு முழுவதற்குமாக அனுப்பப்பட்ட நபி ஆவார்கள். இதனைக் கூற அல்குர்ஆன் “காஃப்பதன் லின்நாஸ்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித இனத்துக்கு மட்டுமின்றி ஜின் இனத்துக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். ஜின்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து புனித குர்ஆனைச் செவியேற்று ஆச்சரியமடைந்தன. இக்கருத்தை உள்ளடக்கிய அல்குர்ஆன் அத்தியாயத்தின் பெயர் ‘ஸூரதுல் ஜின்’ என்பதாகும்.

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஜின் என்ற புகழ் பெற்ற மஸ்ஜித் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஜின்கள் அல்குர்ஆனைக் கேட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

அனைத்து நபிமார்களும் அழகிய முகத்தையும், வசீகரமான குரலையும் பெற்றிருந்தனர். நபிமார்கள் எல்லாரும் பிறந்து வளர்ந்த நாட்டில் வைத்து தமது நபித்துவத்தைப் பிரகடனம் செய்தனர். நபிமார்கள் அந்தந்த நாடுகளில் நன்கு அறியப்பட்ட நற்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நபிமார்களின் ஊரோ, குடும்பமோ, பெயரோ அனுப்பப்பட்ட மக்களுக்கு தெரியாமல் இருக்கவில்லை.

உலகில் மிகப் பிரபலமானதும், சிறப்பிற்குரியதாகவும் இருந்தது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பம்.

Mahabba Campaign Part-53/365

வஹீ மற்றும் நபித்துவம் ஆகியவை குறித்து நாம் படித்தோம்.

நபிமார்கள் அனுப்பப்படுவதன் நோக்கம் யாது? பதில் மிக எளிதானது. மனிதனைப் படைத்து, பராமரிக்கும் அல்லாஹ் தான் நினைத்ததை மனித குலத்துக்குக் கொண்டு சேர்க்க முடிவு செய்தான். அதற்காக மனிதர்களிலிருந்தே மனிதர்களுக்கு மத்தியில் தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள்தான் நபிமார்கள்.

மனிதர்களை வழி நடத்துவதற்கு எந்த வழியையும் கையாளும் ஆற்றலும், திறனும் பெற்றவன் அல்லாஹ். அதிலிருந்து அவன் தேர்ந்தெடுத்த வழிமுறை, முன்மாதிரியாக இருக்கும் தூதர்களை நியமிப்பதும், வேதங்களை வழங்குவதுமாகும்.

படைப்புகளில் மனிதனை விசேச இயல்பிலும், குணத்திலும் தனித்துவமாகப் படைத்தவன் இறைவன். அதற்கு உகந்த வாழ்க்கையை வாழ மனிதனுக்கு அவன் கட்டளையும் பிறப்பித்தான்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூமியில் இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரு தூதர் என்பதை நாம் எவ்வாறு தர்க்க ரீதியாகப் புரிந்துக் கொள்ளலாம்? நாம் சற்று சிந்திப்போம்…..

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார்கள். பெற்றோர் நற்குணம் கொண்டவர்களாகவும், மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களாவும் இருந்தனர். அவர்கள் பிறந்த மண்ணிலும், மக்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வாலிபத்தை அடைந்தார்கள். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார்கள்.

ஒட்டுமொத்த சமூகமும் அவர்களுக்கு உண்மையாளர், நேர்மையாளர் என்ற முகவரிகளைத் தந்து அழைத்தது. ஒரு நகைச்சுவைக்காகக்கூட அவர்கள் பொய் பேசியதே இல்லை. யாருடைய உரிமையையும் ஒரு நாளும் மீறியதில்லை. எந்தவொரு குற்றத்திலும் ஈடுபட்டதில்லை. எந்த கெட்ட குணத்தையும் வெளிக் காட்டியதில்லை. இவ்வாறு அவர்கள் நாற்பது வருடங்கள் சொந்த மண்ணில் வாழ்ந்தார்கள். இதற்கிடையில் மக்காவின் முக்கியஸ்தர்கள் உட்பட மதிப்புமிக்க பொருட்களின் பாதுகாவலராக ஆனார்கள். நெருக்கடி கட்டங்ளில் மத்தியஸ்தராகப் பணியாற்றினார்கள். இப்படிப்பட்ட நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான ஒருவர்தான் மக்கள் மத்தியில் ‘நான் இறைவனின் தூதர்’ என்று அறிவித்தார்கள்.

40 வருடங்களில் எந்தவொரு காரியத்துக்காகவும் பொய் சொல்லாத ஒருவர், மிகப் பெரியதொரு விஷயத்துக்காகப் பொய் சொல்வாரா? அதை நம்மால் ஜீரணிக்க முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்போது அவர்களது வாதம் உண்மையாகவே இருக்க வேண்டும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை.

மேலும் சிந்திப்போம். நான் ஒரு இறைத் தூதர் என்று சொல்லும்போது ஏதேனும் ஆதாரம் அல்லது சாட்சியம் ஆஜராக்கப்பட்டதா?

ஆம்! குர்ஆன் எனும் மாபெரும் மகத்தான நூல் ஆதாரமாக, சாட்சியமாகத் தரப்பட்டது. அது இறைவனின் வார்த்தை என்றும் கூறப்பட்டது.

அப்படிப்பட்ட ஒரு நூலை தாமே எழுதி இது இறைவனிடமிருந்தது வந்ததாகக் கூறுவது சாத்தியமா? இந்த நபர் முறையான கல்வியைப் பெறவே இல்லை. எந்வொரு பயிற்சியும் கொடுத்த ஆசிரியருமில்லை. எங்காவது திருடப்பட்டதா? அதற்கும் எந்த வாய்ப்புமில்லை. ஏனெனில் குர்ஆன் போன்று அதே மொழி, இலக்கிய நடை, உள்ளடக்கம் அல்லது பாணியில் உலகில் வேறு எந்த வேதமும் இல்லை.

நிகழ் காலத்தைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு புத்தகம் பதினைந்து நூற்றாண்டுகளாக அன்றாட வாழ்க்கையில் கோடிக் கணக்கான மக்களால் பரவலாகப் படிக்கப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது, பாராயணம் செய்யப்படுகிறது, அத்தகைய நூல் வித்தியாசமானது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியம்!

உங்கள் மனதில் தோன்றும் இவை போன்ற கேள்விகள் அனைத்தையும் முன் வைத்தாலும் இந்த நூலுக்கான தெய்வீகத் தன்மையில்தான் சென்றடையும். இன்றுவரை இதற்குச் சமமான ஒரு நூலை முன் வைக்க விமர்சகர்களால் முடியவில்லை என்பதும் இந்நூலின் இறைத் தன்மையை நிரூபிக்கிறது.

வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?

ஒரு நபியின் தீர்க்கதரிசனங்கள் ஆவணங்கள் ஆகும். எந்தவொரு வெளிப்படையான முடிவுகளாலும் விளக்கிச் சொல்ல முடியாத பல தீர்க்கதரிசனங்களை அவர்கள் முன் வைத்தார்கள். அவை யாவும் பகல் வெளிச்சம் போல நிஜமாயின. இத்தகைய தீர்க்கதரிசனங்களின் நீண்டதொரு பட்டியலை தயாரிக்க முடியும்.

இப்போது யாராவது இப்படிக் கேட்டால்…..

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற ஒரு நபர் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்களா? அல்லது வெறுமொரு கதாபாத்திரமா? இங்கேயும் பதில் மிக எளிதானது.

உலகில் ஒரு நபர் வாழ்ந்தார் என்பதற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கான வலுவான ஆதாரம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுக்கு மட்டும்தான் உண்டு!

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் இன்றுவரையுள்ள குடும்பப் பரம்பரைத் தொடரில் ஒரு நபர்கூட விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்ல! அவற்றைப் பதிவு செய்தவர்களின் வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் வரலாற்று அறிவியல் முன் வைக்கும் தர நிலைகளின் மூலமும் சரிபார்க்கவும் முடியும்.

Mahabba Campaign Part-54/365

இனி மக்கா நகருக்குத் திரும்பி வருவோம்.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறை அழைப்புப் பணியின் ஆரம்ப கட்டம். முதலில் தமது குடும்ப உறுப்பினர்களை இஸ்லாமின்பால் அழைத்தார்கள். “எந்தத் தலைவரும் தம் குடும்பத்தாரிடம் பொய்யுரைக்க மாட்டார். நான் முழு உலக மக்களிடம் பொய் சொன்னாலும் உங்களிடம் பொய் சொல்வேனா? உலகம் முழுவதையும் ஏமாற்றினாலும் உங்களை ஏமாற்றுவேனா?

அல்லாஹ் மீது ஆணையாக! உங்களுக்கு குறிப்பாக ஒட்டு மொத்த உலகுக்கும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். அல்லாஹ் மீது ஆணையாக! நீங்கள் உறங்குவதுபோல மரணம் அடைவீர்கள். உறக்கத்திலிருந்து எழுவதுபோல மீண்டும் பிறப்பீர்கள். நற்செயல்களுக்கு நன்மை கூலியாகக் கிடைக்கும். தவறுகளுக்குத் தண்டனை கூலி. ஒன்று முடிவில்லா சுவனம். அல்லது முடிவில்லா நரகம் கிடைக்கும்” என்று தம் குடும்பத்தாரிடம் கூறினார்கள்.

எல்லா தரப்புகளிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் பாக்கியம் செய்தவர்கள் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டனர். நேர் வழியைச் சுவைக்கும் பேறு பெற்றனர்.

முதற்கட்டத்தில் ஈமான் கொண்டவர்களை திருக்குர்ஆன், ”முஹாஜிர்களிலும், அன்ஸாரிகளிலும், ஆரம்ப கட்டத்தில் (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களையும் அவர்களைப் பின்பற்றி நற்செயல்களில் ஈடுபட்டவர்களையும் அல்லாஹ் திருப்திப்படுகின்றான். அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றனர். அவர்களுக்காக சுவனபதிகளை அவன் தயார் செய்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி இருப்பர். இதுவே மாபெரும் வெற்றியாகும். ” ஸூரத் அத்தவ்பா, வசனம் 100) என்று போற்றுகிறது.

ஆரம்ப கட்டத்தில் இஸ்லாமைத் தழுவியவர்களின் முறையான பட்டியலை உருவாக்குவது கடினம். பல தோழர்கள் தங்களைப் பற்றிக் கூறும்போது ‘நான் இஸ்லாமைத் தழுவிய இத்தனையாவது நபர்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால் இந்தப் பட்டியல் சரியாக இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்களின் புரிதலின் அடிப்படையில் அவ்வாறு சொல்லி இருக்கலாம்.

ஸஃத் பின் அபீ வகாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ‘இஸ்லாமின் முதல் மூன்று உறுப்பினர்களில் நானும் ஒருவன்’ என்று ஸஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். இந்த அறிவிப்பை இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் வரலாற்றின்படி முதல் நான்கு பேர்களில் ஸஃத் பின் அபீ வகாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இடம் பெறவில்லை. எனினும் ஆண்களில் மூன்றாவது நபர் என்ற எண்ணத்தில சொல்லியதாக இருக்கலாம். அல்லது பெண்கள், குழந்தைகள், வேலையாட்களை கணக்கிடாமல் சொன்னதாகவும் இருக்கலாம்.

இஸ்லாமைத் தழுவிய முதல் நான்கு பேர்கள் : அன்னை கதீஜா நாயகி, அபூபக்ர் ஸித்தீக், அலி பின் அபீதாலிப் மற்றும் ஜெய்த் பின் ஹாரிதா ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர். முதலில் இஸ்லாமைத் தழுவியவர்களை பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வேலையாட்கள் என்று பிரித்தால் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நபர் இந்த நான்கு பேரில் ஒருவராகத்தான் இருப்பார். இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் நாற்பதாவது நபராக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கணிக்கப்படுகின்றார்கள்.

முதற்கட்டத்தில் இஸ்லாமைத் தழுவிய எழுபத்தி இரண்டு நபர்களின் பட்டியல் பின்வருமாறு :

1. அன்னை கதீஜா நாயகி 2. அபூபக்ர் ஸித்தீக் 3. அலி பின் அபீதாலிப் 4. ஜெய்த் பின் ஹாரிதா 5. பிலால் 6. ஆமிர் பின் ஃபுஹைரா 7. அபூஃபுகைஹா 8. ஸக்ரான் 9. அம்மார் பின் யாஸிர் 10. ஸுமைய்யா 11. யாஸிர் 12. உம்மு ஐமன் 13. காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் 14. உதுமான் பின் அஃப்பான் 15. ஆமினா பின்த் கலஃப் 16. ஸஃத் பின் அபீவகாஸ் 17. தல்ஹா பின் உபைதில்லாஹ் 18. ஸுபைர் பின் அல்அவாம் 19. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் 20. அய்யாஷ் பின் ரபீஆ 21. முஸ்அப் பின் உமைர் 22. ஸுஹைல் பின் ஸினான் 23. உதுமான் பின் மள்வூன் 24. மிக்தாத் 25. அர்கம் பின் அல்அர்கம்.

26. உம்முல் ஃபழ்ல் 27. அபூராபிஃ 28. அபூஸலமா 29. உம்மு ஸலமா (ஹிந்த்) 30. அபூ உபைதா 31. கப்பாப் பின் அல்அரத் 32. குதாமா பின் மள்வூன் 33. ஸயீது பின் ஜெய்த் 34. ஃபாத்திமா பின்த் கத்தாப் 35. உத்பத் பின் கஸ்வான் 36. அப்துல்லாஹ் பின் மஸ்வூது 37. உமைர் பின் அபீவகாஸ் 38. உபைத் பின் ஹாரிஸ் 39. மஸ்வூத் பின் ரபீஆ 40. அப்துல்லாஹ் பின் மள்வூன் 41. அப்துல்லாஹ் பின் கைஸ் 42. குனைஸ் பின் ஹுதாஃபா 43. அஸ்மா பின்த் ஸித்தீக் 44. ஸலீத் பின் அம்ர் 45. இப்னு குஸைமா அல்கார்ரா 46. உத்பா பின் மஸ்வூது 47. அம்ர் பின் அபஸ 48. ஆமிர் பின் ரபீஆ அல்அனஸி 49. அபூதர் அல்கிஃபாரி 50. மாஸின் பின் மாலிக்.

51. பாதிப் பின் அல்ஹாரிஸ் 52. ஜஅஃபர் பின் அபீதாலிப் 53. அஸ்மா பின்த் உனைஸ் 54. அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் 55. அனீஸ் பின் ஜுனாதா அல்கிஃபாரி 56. அல்முத்தலிப் பின் அஸ்ஹர் 57. ஸாயிப் பின் உதுமான் 58. கத்தாப் பின் அல்ஹாரிஸ் 59. மஃமர் பின் அல்ஹாரிஸ் 60. ஃபாத்திமா பின்த் முஜஸ்ஸல் 61. அபூஹுதைஃபா பின் அல்முகீரா 62. ஹாத்திப் பின் உமைர் 63. இப்னு முலைஹ் 64. நுஐம் பின் அப்தில்லாஹ் 65. ரம்லா பின்த் அபீ அவ்ஃப் 66. காலித் பின் புகைர் 67. ஆமிர் பின் புகைர் 68. மஸ்வூது பின் அல்காரி 69. இயாஸ் அப்துயாலில் 70. காலித் பின் அப்தில்லாஹ் 71 ஆகில் பின் புகைர் 72. அஸ்மா பின்த் ஸலாமா 73. ஃபக்ஹா பின்த் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹும்.

Mahabba Campaign Part-55/365

முதற்கட்டத்தில் இஸ்லாமைத் தழுவிய எழுபத்தி மூன்று நபர்களின் பட்டியலைப் பார்த்தோம்.

அறிவிப்புகளின் அடிப்படையில் கிடைத்த பட்டியலை மட்டுமே தந்துள்ளோம். முதற்கட்டத்தில் இஸ்லாமைத் தழுவியவர்களின் பட்டியல்தானே தவிர வரிசைக் கிரமமாக இஸ்லாமைத் தழுவியர்களின் பட்டியல் அல்ல இது! அதனால் பிரபலமான சில ஸஹாபாக்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை. உமர், ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுமா மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிள்ளைகள் போன்ற பலர் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.

சில முக்கியமானவர்கள் முஸ்லிமான சூழல் மிகவும் சுவாரசியமான, உற்சாகமான வாசிப்பாக அமையும். அவர்களில் சிலர் :

1. அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.
அன்னை அவர்கள்தான் முதன் முதலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டார்கள். அன்னை அவர்களுக்கு முன்னர் வேறு எந்தவொரு ஆணோ, பெண்ணோ இஸ்லாமைத் தழுவவில்லை. முஸ்லிம் உம்மத்தின் ஒத்த கருத்து இது என இமாம் இப்னுல் அதீர் கூறுகிறார்கள்.

அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் முஸ்லிமான நிகழ்வு, மனைவி கண்மூடித்தனமாக கணவரை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமல்ல! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை நன்றாகப் படித்து, அவதானித்த பின்னர்தான் அவர்கள் ஈமான் கொண்டார்கள்.

பொதுவாகக் கணவருக்கு மனைவி ஆறுதல் கூறும் மொழியில் அல்ல அன்னை அவர்கள் தம் அன்புக் கணவருக்கு கூறிய ஆறுதல். மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த நல்லவற்றையும், மகத்தான குணத்தையும் பட்டியலிட்டு ஆறுதல் சொன்னார்கள்.

தமது கணவர் சொன்ன விஷயங்களைக் குறித்து தேவையான விசாரணைகள் செய்தார்கள். வேத பண்டிதரான வரகத் இப்னு நவஃபல் மற்றும் வேத நூல் படித்த அத்தாஸ் ஆகியோரை அணுகி விசாரித்தார்கள். தம் அன்புக் கணவரிடம் வந்து செய்திகள் சொல்வது ஒரு வானவரா? என்பது குறித்தும் சொந்தமாக விசாரணை மேற்கொண்டார்கள்.

“என் அன்பே! இறைச் செய்திகளைத் தெரிவிக்கத் தங்களது தோழர் இங்கு வருகை தரும்போது என்னிடம் தெரிவிப்புிர்களா?” என்று ஏகத்துவ இறை அழைப்பின் ஆரம்ப நாட்களில் ஒரு முறை அன்னை அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள்.

அடுத்த தடவை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தபொழுது ‘கதீஜா! இதோ ஜிப்ரீல் என்னருகில் உள்ளார்’ என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

‘எழுந்து எனது வலது காலில் அமருங்கள்!’ என்றார்கள் அன்னை அவர்கள். நபியவர்கள் அமர்ந்தார்கள்.

‘இப்போது அவரைப் பார்க்கிறீர்களா?’

‘ஆம்! பார்க்கின்றேன்.’

‘இப்போது எனது இடது காலில் அமருங்கள்!’ என்றார்கள் அன்னை அவர்கள். நபியவர்கள் இடது காலில் அமர்ந்தார்கள்.

‘இப்போது அவரைப் பார்க்கிறீர்களா?’

‘ஆம்! பார்க்கின்றேன்.’

‘சரி! எனது மடியில் உட்காருங்கள்!’ நபியவர்கள் மடியில் அமர்ந்தார்கள்.

‘இப்போது அவரைப் பார்க்கிறீர்களா?’

‘ஆம்! பார்க்கின்றேன்.’

அப்போது அன்னை அவர்கள் தமது தலையில் இட்டிருந்த முக்காட்டை சற்று விலக்கி விட்டு ‘இப்போது அவரைப் பார்க்கின்றீர்களா?’ என்று கேட்க, ‘இல்லை! அவரைக் காணவில்லை’ என்றார்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள் “தைரியமாக முன்னோக்கிச் செல்லுங்கள்…. மகிழ்ச்சியாக இருங்கள்…… வானவர்தான் தங்களிடம் வருகிறார் என்று உறுதியாக நம்புகின்றேன்.”

இந்நிகழ்வை இமாம் ஹலபி அவர்கள் பின்வறுமாறு கூறுகிறார்கள் : “நபித்துவம் அறிவிக்கப்பட்டவுடன் நடந்த சம்பவம் இது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்தியைக் கொண்டு வருபவர் யார்? என்பதைத் தெளிவாகத் தெரிந்துக் கொள்வதற்காக அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கடைபிடித்த வழிமுறை இது!”

ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள முடிந்தால் அவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தல் புத்திசாலிகள் கையாளும் வழிமுறையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னவற்றில் ஐயம் கொண்டு செய்த விசாரணைகள் அல்ல இவை! சந்தேகத்துக்கு எள் முனையளவும் இடம் கொடுக்காமல் ஈமான் கொள்வதற்காகவே அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

தன் செல்வம் முழுவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கும் மகாபாக்கியம் பெற்ற மதரக்கரசி அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். முஸ்லிமான பின்னர் தொழுகையை முதன் முதலாக நிறைவேற்றும் பாக்கியத்தையும் அன்னை அவர்கள் பெற்றார்கள்.

Mahabba Campaign Part-56/365

2. அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டவர்களில் இரண்டாமவர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களாவர். இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முதல் ஆண்மகன் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களாகும் என்ற வரலாற்றாசிரியர் இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பதிவும், சிறுவர்களில் முதலாவதாக இஸ்லாமை ஏற்றவர் அலீ அவர்களாவர் என்ற பதிவும் ஒன்றேதான்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறு பிராயம் முதற்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வளர்த்த பெரிய தந்தையார் அபூதாலிப் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இதற்குத் தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டுமென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணினார்கள். அதற்கொரு வழியையும் கண்டுபிடித்தார்கள்.

அபூதாலிப் அவர்களின் சகோதரரும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையாருமாகிய அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் செல்வந்தராக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று “அபுல் ஃபழ்ல்! உங்களுடைய சகோதரர் அபூதாலிப் நிதி நெருக்கடியில் சிக்கி கஷ்டப்படுகிறார் என்பதை அறிவீர்கள் அல்லவா! அவரும், அவரது பிள்ளைகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே அதற்கொரு தீர்வு காண வந்திருக்கின்றேன். அவரது பிள்ளைகளில் ஒவ்வொருவரை வளர்க்கும் பொறுப்பை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?” என்று கேட்டார்கள்.

அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் “நல்ல யோசனை. இப்படியொரு நல்ல செயலுக்கல்லவா என்னை அழைக்கிறீர்கள். அதற்காக மகிழ்வடைகின்றேன்.”

இருவரும் சேர்ந்து அபூதாலிப் அவர்களிடம் சென்றனர். நலம் விசாரித்து விட்டு ‘தங்களுடைய தற்போதைய நிலை எங்களுக்குத் தெரியும். ஒரு தீர்வுடன் நாங்கள் வந்துள்ளோம். உங்களுடைய குழந்தைகளில் சிலரை நாங்கள் அழைத்துச் செல்கின்றோம். உங்களுடைய சிரமங்கள் தீருவது வரை அவர்களை நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம்” என்று கூறினர்.

அபூதாலிப் அதிகம் எதுவும் யோசிக்கவில்லை. “அப்படியே ஆகட்டும்! ஆனால் எனது சிறிய மகன் அகீலைக் கொண்டு போகாதீர்கள். மற்றபடி உங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்” என்றார் அவர்.

அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜஃபர் அவர்களையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ அவர்களையும் தத்தம் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பொறுப்பேற்றதன் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிப் அவர்களுக்கு ஒரு பிரதி உபகாரத்தை வழங்க முடிந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ‘தங்களை நான் அல்லவா வளர்த்தேன்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்லும் வாய்ப்பை அபூதாலிப் இழந்தார்.

நபித்துவம் அறிவிக்கப்பட்ட மறுநாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடன் தொழுதுக் கொண்டிருந்ததைப் பார்த்த அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆர்வத்துடன் ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “இது அல்லாஹ் தனது நபிமார்கள் மூலம் போதித்த மார்க்கம். அலீ! நான் தங்களை அல்லாஹ்வின் மார்க்கத்தில் அழைக்கின்றேன். நீங்கள் அவனை மட்டுமே வணங்க வேண்டும். லாத், உஸ்ஸா போன்றவற்றை நிராகரித்து விடுங்கள்!”

“இன்று வரை கேள்விப்படாத ஒன்றைச் சொல்கிறீர்கள். எனவே தந்தை அவர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன்” என்றார்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “நீங்கள் இப்போது இஸ்லாமை ஏற்கவில்லை என்றால் இந்த விஷயத்தை இப்போதைக்கு வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்”

அன்றிரவு அலீ ரழியல்லாஹு அன்ஹு அங்கேயே தங்கினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேரான, சரியான பாதையைக் காட்டிக் கொடுத்தான். அதிகாலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இஸ்லாமைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாம் குறித்து விளக்கிச் சொன்னார்கள். ‘அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியானவர்கள் வேறு யாருமில்லை. லாத், உஸ்ஸா போன்ற துணைகள் அவனுக்கில்லை.’

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். எதிர் வினை எப்படி இருக்கும் என்பது தெரியாததால் அபூதாலிபிடம் அது பற்றி எதுவும் சொல்லவில்லை.

Mahabba Campaign Part-57/365

அப்போது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வயது பத்து என்ற கருத்தும் உண்டு. மேலும் சிறு வயது முதல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்த காரணத்தால் அலீ அவர்கள் ஒருபோதும் சிலை வணக்கம் செய்ததில்லை, பல தெய்வ வழிபாடுகளில் கலந்துக் கொண்டதுமில்லை.

இஸ்லாமில் ஆரம்ப கட்டத்தில் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரகசியமாகத் தொழுது வந்தார்கள். பெரிய தந்தையர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகவும், தனிமையில் தொழுவதற்காகவும் சில நாட்கள் மலைக் குன்றுகளுக்குச் செல்வார்கள். தொழுகை முடிந்து மாலையில் வீடு திரும்புவார்கள். இந்த நேரங்களில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் சேர்ந்துச் செல்வார்கள்.

ஒரு தடவை இருவரும் தொழுதுக் கொண்டிருப்பதை கண்ட அபூதாலிப் “மகனே! ஏதோ மதச் சடங்குகள் செய்வது போலத் தெரிகிறதே! என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பெரிய தந்தையாரிடம் “தந்தை அவர்களே! இது அல்லாஹ்வின் மார்க்கம். அவனுடைய வானவர்கள் மற்றும் நபிமார்களின் மார்க்கம். மேலும் நமது முன்னோரான நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கம். உலக மக்களை இந்த மார்க்கத்திற்கு அழைக்க அல்லாஹ் என்னை நியமித்துள்ளான். நான் மிகவும் உரிமையுடன் அணுக வேண்டிய தகுதிமிக்க நபர் நீங்கள். உங்களை நேரான பாதைக்கு அழைக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அபூதாலிப் தமது மகனாரின் பேச்சைக் கவனமாகக் கேட்டு விட்டுச் சொன்னார் “மகனே! எனது பழைய மதத்தை கைவிட என்னால் முடியாது. ஆனால் ஒரு உறுதிமொழி தருகின்றேன். நான் தங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பேன். உங்களுக்கு சிரமம் தரும் எதையும் நடக்க விடமாட்டேன். நான் உயிருடன் இருக்கும்வரை என் உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு.”

ஒரு தடவை அபூதாலிப் தன் மகன் அலீ அவர்களிடம் “மகனே! சமீப காலமாக எந்த மதத்தைக் கடைபிடிக்கின்றீர்கள்?” என வினவ, “தந்தை அவர்களே! நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்புகின்றேன். நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைச் சொன்னாலும் அதை உண்மை என்று ஏற்றுக் கொள்கின்றேன். அவர்களுடன் சேர்ந்து தொழுகின்றேன்” என்றார்கள்.

“மகனே! தாங்கள் முஹம்மத் அவர்களுடன் செல்லுங்கள். அவர்கள் உங்களை நன்மையின் பக்கம்தான் அழைத்துச் செல்வார்கள்…..” என்றார் அபூதாலிப்.

பிற்காலத்தில் ஒரு நாள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பர் படியில் வைத்து கடைவாய் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். அபூதாலிப் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்ததால் அப்படிச் சிரித்தார்கள்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் “நானும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மக்காவின் புற நகர் பகுதியான ‘நக்லா’வில் தனியாகத் தொழுதுக் கொண்டிருந்தோம். தற்செயலாக தந்தை அபூதாலிப் அங்கே வந்தார்கள். சிறிது நேரம் நாங்கள் செய்வதைப் பார்த்து விட்டு ‘என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லி விட்டு, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தார்கள்.

சொன்னவற்றைக் கவனமாகக் கேட்ட பின் ‘நீங்கள் சொன்னவை அனைத்தும் நல்ல காரியங்கள்தான். எனினும் நான் என் பின் பாகத்தை உயர்த்தி வைக்க தயாரக இல்லை’ என்றுரைத்தார் அபூதாலிப். (தொழுகையில் ஸஜதா செய்வதை அர்த்தப்படுத்தி இவ்வாறு அவர் சொன்னார். உண்மையில் சிரம் தாழ்த்துவது என்பது மனிதனின் மகிமையான உறுப்பான முகத்தை இறைவனுக்கு முன்பாக தரையில் படும்படிச் செய்யும் செயலல்லவா ஸுஜூத்!)

அபூதாலிப் இப்படிச் சொன்னதை நினைத்துதான் அலீ ரழியல்லாஹு அன்ஹு சிரித்தார்கள்.

ஆண்களில் முதலில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ற கருத்தையும், அல்ல! அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் முதலில் முஸ்லிமானார்கள் என்று கருத்தையும் இணைத்து கீழ்கண்டவாறு புரிந்துக் கொள்ள வேண்டும்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் முதலில் ஈமான் கொண்டார்கள். ஆனால் சில காலம் அதை இரகசியமாக்கி வைத்தார்கள்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொண்டதை ஆரம்பத்திலேயே அனைவரும் அறிந்திருந்தனர். எனவே முஸ்லிமாக முதலில் அறியப்பட்டவர் அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், எதார்த்தத்தில் முதலாவதாக இஸ்லாமை ஏறு்றுக் கொண்டவர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுமாவர்..

Mahabba Campaign Part-58/365

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் சேர்ந்து வணக்க, வழிபாடுகளில் ஈடுபட்ட ஒரு காட்சி இதோ:

வியாபார நிமித்தமாக எமன் நாட்டிலிருந்து மக்காவுக்கு வந்து போய் கொண்டிருந்த அஃபிஃப் அல்கிந்தி கூறுகிறார் : “ ஒரு ஹஜ்ஜுக் காலத்தில் நான் மக்காவுக்கு வந்து அப்பாஸ் அவர்களுடன் தங்கி இருந்தேன். எங்களுக்கு மத்தியில் வியாபாரத் தொடர்பு இருந்தது. அப்பாஸ் எமனுக்கு வந்தால் என்னுடன்தான் தங்குவார்.

ஒரு நாள் நாங்கள் மினாவில் அமர்ந்திருந்தோம். அப்போது கூடாரம் ஒன்றிலிருந்து நடுத்தர வயதான ஒருவர் வெளியே வந்தார். வானத்தைப் பார்த்து மதிய நேரம் என்பதை உறுதி செய்துக் கொண்டு தொழ ஆராம்பித்தார். தொடர்ந்து ஒரு பெண்மணி கூடாரத்திலிருந்து வந்து அவருடன் தொழுகையில் இணைந்துக் கொண்டார். அடுத்ததாக ஒரு இளைஞர் வந்தார். அவரும் அவர்களுடன் தொழுகையில் கலந்துக் கொண்டார்.

நான் கேட்டேன் : “அப்பாஸ்! இவர்கள் யார்? இவர்கள் என்ன செய்கின்றார்கள்?”

அப்பாஸ் சொன்னார் : “முதலில் வந்தவர் என்னுடைய சகோதரர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத். அடுத்தவர் குவைலிதின் மகளும், முஹம்மத் அவர்களின் மனைவியுமான கதீஜா. கடைசியாக வந்தவர் என்னுடைய சகோதரர் அபூதாலிபின் மகன் அலீ. அவர்கள் தொழுகிறார்கள். முஹம்மத் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுகிறார். அவருடைய மனைவியும், அலீயும் மட்டுமே அவருடைய வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். கிஸ்ரா மற்றும் கைஸரின் நிதிகளைக்கூட அவர்கள் வெல்வார்கள் என்று கூறுகின்றனர்”

அஃபிஃப் பின்னர் முஸ்லிமானார். அப்போது அவர் சொன்னார் : “என்னுடைய மோசமான அதிர்ஷ்டத்தைப் பற்றி நான் என்ன சொல்ல! அன்று நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தால் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடுத்து இரண்டாவதாக நான் முஸ்லிமாகி இருப்பேன்.”

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமைத் தழுவியதன் தனித்துவத்தைக் குறிப்பிடும் ஒரு அறிவிப்பைப் பார்ப்போம். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : “நானும், அபூபக்ர் மற்றும் அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவையில் அமர்ந்திருந்தோம். அப்போது அலீ ரழியல்லாஹு அன்ஹு அங்கே வந்தார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ அவர்களின் தோளில் தட்டிக் கொடுத்து “அலீ! தாங்கள் ஈமான் கொண்டவர்களில் முதல் நபர். முஸ்லிம்களில் முதன்மையானவர். மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஹாரூன் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்ததைப் போல எனக்கு நீங்கள் இருக்கின்றீர்கள்” என்றுரைத்தார்கள்.

ஸல்மானுல் ஃபாரிஸி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் “மறுமையில் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவ்தர் நீர் தடாகத்தை முதலில் சென்றடைபவர் முதலாவதாக ஈமான் கொண்ட நபராவார். அந்த பாக்கியத்துக்குரியவர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள்.”

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள் “நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன் “வரலாற்றில் முதன் முதலாக ஈமான் கொண்டவர்கள் மூவர். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை யூஷஃ பின் நூன் அவர்களும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஹபீபுன் நஜ்ஜார் (ஸாஹிபு யாஸீன்) அவர்களும், என்னை அலீ அவர்களுமாவர்”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனான நெருக்கமான, தொடர்ச்சியான தொடர்பு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அறிவின் உறைவிடமாக்கியது. அறிவு நகரத்தில் நுழைவாயிலாக்கியது.”

இக்கட்டான ஒவ்வொரு கட்டத்திலும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். உயிரைப் பணயம் வைத்து பக்கபலமாக நின்றார்கள்.

ஆன்மீகம் மற்றும் வணக்க, வழிபாடுகளின் துல்லியத்தை நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கொண்ட தோழமை மூலமாக கற்றுக் கொண்டார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரிய மகளார் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்துக் கொண்டது மூலம் நபி அவர்களின் பெரிய தந்தையாரின் மகன் என்பதுடன், நபி அவர்களின் மருமகனாகும் பாக்கியத்தையும், நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்களின் தந்தை என்ற பெறற்கரிய பேற்றையும் பெற்றார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பல தனித்துவமான தகுதிகளை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்றுள்ளார்கள்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இளமை, திருமண வாழ்க்கை அனைத்தும் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழலின் கீழ் அமைந்திருந்தது.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ அவர்களை வளர்க்க பொறுப்பேற்றபோது, அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அலீ அவர்களின் சகோதரர் ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.

ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய இரண்டு மகன்களுமே நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்க வேண்டுமென அபூதாலிப் விரும்பினார்.

‘உஸ்துல் காபா’ என்ற நூலில் ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். ஒரு நாள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகன் ஜஃபருடன் அங்கே வந்த அபூதாலிப் தொழுதுக் கொண்டிருப்பவர்களை சுட்டிக்காட்டி “பார்த்துக் கொண்டு நிற்காமல் நீயும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்” என்று கூறினார். சந்தர்ப்பத்தைப் பாழாக்காமல் ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் தொழுகையில் இணைந்துக் கொண்டார்கள்.

Mahabba Campaign Part-59/365

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தின் முதல் மனிதராக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கணிக்கப்படுகின்றார்கள்.

முதிர்ந்த ஆண்களில் முதன் முதலாக ஈமான் கொண்டவர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களாவர்.

நபித் தோழர்கள் மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் இஸ்லாமை முதலாவதாக ஏற்றுக் கொண்டவர்களைக் கணக்கிடும்போது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கணக்கிடுவதில்லை.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் உண்மையான பெயர் அதீக் அல்லது அப்துல்லாஹ். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இளம் பருவத்திலிருந்தே அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவத்தை அறிவித்தபோது குறைஷிகள் அபூபக்ர் அவர்களிடம்: “உங்களுடைய தோழர் பல தெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறார். நமது பாரம்பரிய நம்பிக்கைகளை விமர்சனம் செய்கிறார். உருவ வழிபாடு முட்டாள்தனமானது என வாதாடுகிறார்” என்று கூறினர்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து “குறைஷிகள் தங்களைப் பற்றி இவ்வாறெல்லாம் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : “உண்மைதான்! நான் அல்லாஹ்வின் திருத்தூதர். அந்த உண்மையின் பக்கம் நான் உங்களை அழைக்கின்றேன்.”

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிச் சொன்னவுடன் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதினார். அதனை மகுந்த மரியாதையுடன் அவர்கள் செவிமடுத்தார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் : “நான் யாரையாவது இஸ்லாமுக்கு அழைத்தால் அவர்கள் தயங்கினார்கள், என்னை சந்தேகப்பட்டார்கள். ஆனால் அபூபக்ர் கொஞ்சம்கூடத் தயங்கவோ, தாமதிக்கவோ செய்யாமல் என்னை நம்பிக்கை கொண்டு அங்கீகரித்தார்கள்.

மற்றொரு முறை. ஒரு தீர்ப்பு வழங்கும் சந்தர்ப்பம்…….

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உட்பட சபையில் பலர் இருந்தனர். நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : “அல்லாஹ் என்னை நபியாக அனுப்பி வைத்துள்ளான் என்று நான் அறிவித்தபோது உங்களில் பலர் என்னை நிராகரித்தனர். நான் பொய் சொல்வதாகக் கூறினர். அப்போது அபூபக்ர் என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். எனக்கு ஆதரவாக நின்றார்கள்.”

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்கனவே உண்மையாளராகவும், செல்வாக்குடையவராகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரு வணிகராகவும், பணக்காரராகவும், தாராள மனம் கொண்டவராகவும், சமூக நலப் பணிகளில் முன்னணியில் நிற்பவராகவும் இருந்தார்கள். பொதுச் விவகாரங்களில் அவர்களை மக்கள் நம்பி இருந்தனர். அரபு நிலத்தின் கோத்திர வர்க்கத்தினர் மற்றும் அவர்களின் பரம்பரை குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏழாவது பாட்டனாரும், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் எட்டாவது பாட்டனாரும் ‘முர்ரா’ என்பவராவார். அதாவது இருவரின் தந்தை வழிப் பரம்பரை ஒன்றோடொன்று இணைந்திருந்தன.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் முஸ்லிமானதை அறிவித்தபோது நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

சிரியாவில் வைத்து பாதிரியார் சொன்ன முன்னறிவிப்பும், அங்கு வைத்து கண்ட கனவும் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்தன.

சிரியாவில் ஏற்பட்ட அனுபவங்களை தாம் நபி அவர்களிடம் சொல்வதற்கு முன்னர் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கூறியபோது அபூபக்ர் அவர்களுக்கு அண்ணல் நபி அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மூன்று வயது இளைவராக இருந்தாலும் இருவரும் நல்ல நட்புடன் இருந்தனர். குடும்பத்தினரும் இந்த நட்பைப் பகிர்ந்துக் கொண்டனர்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தைப் பற்றி அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் விளக்கம் கேட்ட நிகழ்வை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிமான நாளிலிருந்தே இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை இஸ்லாமுக்கு அழைத்தார்கள். அவர்களுடைய முயற்சியால் புத்திசாலிகளும், பிரமுகர்களுமான பலர் இஸ்லாமைக் குறித்து விளங்கி, நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அவர்களில் பலரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களின் முதல் பட்டியல் பின் வருமாறு :

உதுமான் பின் அஃப்ஃபான்
ஸுபைர் பின் அல்அவாம்
தல்ஹா பின் உபைதுல்லாஹ்
ஸஃத் பின் அபீ வகாஸ்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்
உதுமான் பின் மள்வூன்
அபூ ஸலமா பின் அப்துல் அஸத்
அபூ உபைதா அல்ஜர்ராஹ்
காலித் பின் ஸயீத்
அர்கம் பின் அபில் அர்கம் (ரழியல்லாஹு அன்ஹும்)

Mahabba Campaign Part-60/365

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அபூபக்ர், உதுமான் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வாழ்வின் அனைத்து வகையிலும் நிழல்போல பின்பற்றினார்கள்.

உதுமான் பின் அஃப்ஃபான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து சிறிது பார்ப்போம்.

உதுமான் பின் அஃப்ஃபான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாமைத் தழுவியவர்களில் முக்கியமானவர். ‘முதலில் முஸ்லிமான நால்வரில் நான் நான்காவது நபர்’ என்று உதுமான் அவர்கள் கூறுவதுண்டு.

உதுமான் பின் அஃப்ஃபான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமைத் தழுவிய நிகழ்வு சுவரசியமானது.

ஒரு நாள் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது, நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மகள் ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும், அபூலஹபின் மகன் உத்பாவுக்குமிடையே திருமணம் நடைபெற்ற செய்தியை அறிந்தார்கள்.

உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழகு மிகுந்த ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிய வேண்டும் என விரும்பிய நிலையில் திருமணம் நடந்த விவரத்தைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் வருத்தப்பட்டு, ‘உத்பாவுக்கு முன் நான் பெண் கேட்டுப் போயிருக்கலாம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்.

வீட்டுக்கு வந்த உதுமான் அவர்களின் அத்தை ஸஅதா பின்த் குரைஸ் அவர்களது சோகத்தைக் குறித்து விசாரித்தார். ஸஅதா ஜோதிடம் தெரிந்தவர். உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விஷயத்தைக் கூறவும், ஸஅதா சொன்னார் “உதுமான் நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி. பல பாக்கியங்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் விரும்பும் அந்த அழகிய நறுமணப் பூவை மனைவியாகப் பெறுவீர்கள். அப்பெண்மணி ஒரு மகாபுருஷரின் மகள்” என்றார்.

உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள் “அத்தையே! என்ன சொல்கிறீர்கள்?”

ஸஅதா கூறினார் “ஆம்! அழகும், சிறந்த பேச்சாற்றலும் படைத்த என் உதுமானே! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான திருத்தூதர் ஆவார்கள். உண்மையையும், பொய்யையும் பிரித்தறிவிக்கும் ஒரு வேத நூலுடன் அவர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் அவர்களை அணுகுங்கள். சிலைகள் உங்களுக்குத் தடையாக இருக்க வேண்டாம்.”

“இவை இந்த நாட்டில் நடப்பவை தானே!” உதுமான் சொன்னார்கள்.

ஸஅதா மீண்டும் விளக்கினார். “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட ஒரு நபி. அவர் அல்லாஹ்வின் பாதையில் யாவரையும் அழைக்கின்றார்.” ஸஅதா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: “ஸஅதா அவர்கள் சொன்னதைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தேன். ஸஅதா கூறியவற்றை அவர்களிடம் சொன்னேன்.

நான் சொன்னவற்றைக் கேட்டு விட்டு “உதுமான் நீங்கள் அறிவும், விவரமும் படைத்தவர்கள். சிந்தித்துப் பாருங்கள். வணங்கப்படும் இந்தச் சிலைகள் அனைத்தும் வெறும் கற்கள், நன்மையோ, தீமையோ செய்யாத, பார்வையோ, கேள்வியோ இல்லாத வெறும் கற்கள் அல்லவா!” என்றார்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“தாங்கள் கூறுவது சரிதான்!” உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலுரைத்தார்கள்.

“உங்களுடைய அத்தை கூறியது அனைத்தும் உண்மை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்துவத்தைப் பிரகடனம் செய்துள்ளார்கள். நாம் சென்று அவர்களைச் சந்திப்போமா?” அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.

நான் சம்மதித்தேன். இருவரும் சேர்ந்து சென்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தோம்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் “உதுமான் அவர்களே! உங்களையும் உலக மக்கள் அனைரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக நியமிக்கப்பட்ட தூதர் நான். எனவே அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.”

இதைக் கேட்டதும் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலம் தாழ்த்தவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். ஏகத்துவத்தின் திருவசனங்களை உச்சரித்தார்கள். அண்ணல் நபி அவர்களின் அன்பிற்கினிய தோழராக மாறினார்கள்.

காலம் அதிகம் கழியவில்லை. திருமண உடன்படிக்கை முடிந்து ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கு முன்பே ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை உத்பா மண முறிவு செய்தார்.

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்து கொடுத்தார்கள்.

உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்மீது கொண்ட தனித்துவமான அன்பின் காரணமாக ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னர் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மகள் உம்மு குல்தூமை அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டார்கள். பிற்காலத்தில் அவர்களுடைய செல்வமும், செல்வாக்கும் இஸ்லாமின் வளர்ச்சிக்கு பயன் மிகுந்ததாக இருந்தது.

Leave a Reply